தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை 3 மண்டலங்களாகப் பிரித்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. 20 நபர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்களை முதல் நிலையிலும், 10 முதல் 20 எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்களை இரண்டாவது நிலையிலும், 1 முதல் 10 வரை எண்ணிக்கையிலுள்ள மாவட்டங்களை மூன்றாம் நிலையிலும் என 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
இதில் முதல் நிலை மாவட்டங்களுக்கு சிவப்பு நிறம், இரண்டாம் நிலை மாவட்டங்களுக்கு அடர் மஞ்சள் நிறம், மூன்றாம் நிலை மாவட்டங்களுக்கு மஞ்சள் நிறம் என 3 வகையான நிறங்களில் பாதிக்கப்பட்ட மண்டலங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
சிவப்பு நிற மண்டலத்தில் சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. அடர் மஞ்சள் நிற மண்டலத்தில் திருப்பத்தூர், கடலூர், கன்யாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களும், மஞ்சள் நிற மண்டலத்தில் நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களும் அடங்கும்.
ஏப்ரல் 14-ந்தேதியோடு முடிவடையும் ஊரடங்கையும் 144 தடை உத்தரவையும் நீட்டிக்கும் முடிவில் இருக்கிறது எடப்பாடி அரசு. அதேசமயம், மத்திய அரசின் முடிவுகளுக்கேற்ப அதனை அமைத்துக்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி! இந்த நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை 3 மண்டலங்களாக பிரித்திருக்கும் எடப்பாடி அரசுக்கு, முதல் நிலையில் உள்ள மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கவும், இரண்டாம் நிலையிலுள்ள மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு செய்து அத்யாவசிய தொழில் நிறுவனங்களை துவங்குவதற்கான அனுமதியையும், மூன்றாம் நிலையிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் முழுமையான ஊரடங்கையும் மற்ற பகுதிகளில் ஊரடங்கை விலக்கிக் கொள்ளவும் என 3 வகையான நிலைப்பாட்டினை எடுக்க அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரைத்திருக்கிறது. இதனை எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டாலும், மத்திய அரசிடமிருந்து வருகிற உத்தரவுகளுக்கேற்பவே முடிவுகள் எடுக்கப்படும் என்கிறார்கள் தமிழக சுகாதாரத் துறையினர்.