Skip to main content

"நான் வைகோவின் நண்பன்... வைகோ மூலமாக தமிழ் மக்களுக்கு நண்பன்!" - மறைந்த வைகோவின் நண்பர் 

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

முன்னாள் மத்திய அமைச்சரும் புகழ் பெற்ற மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி தனது 95ஆவது வயதில் மறைந்தார். இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் இவர் வாதாடியுள்ளார். மிக இளம் வயதிலேயே வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி, சுதந்திரத்துக்கு முன்பே இன்றைய பாகிஸ்தானில் வழக்கறிஞராக செயல்பட்டவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் அமைச்சரவைகளில் சட்ட அமைச்சராகவும் பிற துறைகளிலும் பணியாற்றியுள்ள இவர் பின்பு 2004 தேர்தலில் வாஜ்பாயியை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிட்டார். இப்படி புகழும் புதிரும் நிறைந்த மனிதரான அவர் வழக்கறிஞராக ஏற்றுக்கொண்ட பல வழக்குகளும் கூட சர்சைக்குரியவைதான்.

 

ramjethmalani



எமர்ஜென்சி நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தவர், மத்திய அமைச்சராக இருந்தவர் என்ற முறையில் தமிழகத்துக்கு இவர் அறிமுகமானவரே. இன்னும் நெருக்கமாக இவர் வந்தது, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்துசெய்யக் கோரி அவர்களுக்கு ஆதரவாக வாதாடியபோதுதான். அப்போது சென்னை வந்த ராம் ஜெத்மலானி, "நான் வைகோவின் நீண்ட கால நண்பன். அவர் மூலமாக தமிழ் மக்களுக்கும் நண்பனாகியிருக்கிறேன். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே ஆயுள் தண்டனைக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் மரணம் எப்போது வருமோ என்ற பயத்தில் அவர்கள் வாழ்ந்ததே பல ஆயுள் தண்டனைகளுக்கு சமம்" என்று கூறினார்.

 

 

vaiko ramjethmalani



தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தனது நண்பர் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மும்பையிலிருந்து விருதுநகர் வந்திருந்தார். "வைகோவின் மீது, நேர்மையற்ற செயலை செய்தார் என்று ஒரு குற்றச்சாட்டைக் கூட வைக்கமுடியாது" என்று உறுதியாகப் பேசினார். பின்னர், பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்ததால் கட்சியின் நடவடிக்கைக்கு ஆளானார். அத்வானி, அமித்ஷா தொடங்கி ஜெயலலிதா, கனிமொழி, ஜெகன்மோகன் என பல அரசியல் தலைவர்களுக்காக பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ளார். இந்திராகாந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஹவாலா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என பல சர்சைக்குரியவர்களுக்காகவும் இவர் வாதாடியுள்ளார்.