Skip to main content

தமிழையும், பாரதியாரையும் வைத்து வியாபாரம் செய்கிறேனா? - ஹிப்ஹாப் ஆதி Exclusive பேட்டி

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் வேலை, தன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ’நட்பேதுணை’ படத்தின் வேலை, இதனிடையே ’தமிழி’ எனும் தமிழ் மொழியைப் பற்றிய ஆவணம் தயாரிப்பு என பிஸியாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதியை சந்தித்து, தமிழி ஆவணப் படத்தைப் பற்றியும், பாரதியார் கவிதைகளை வியாபாரம் செய்கிறார் என்ற அவர் மீதான விமர்சனம் தொடர்பாகவும் பேசினோம். அதற்கு அவர் அளித்த பதில்கள். 

 

 

hh

 

 

'தமிழி’ எனும் ஆவணத்தைத் தொடங்குவதற்கான காரணம் என்ன?
 


இன்று இருக்கும் டிஜிட்டல் உலகில் மிக எளிமையாக தமிழ் 80,000 வருடங்கள் பழமையானதென சொல்லிவிடுகிறார்கள். அதேபோல் நாமும் 20,000 வருடங்களுக்கு முன் தோன்றியது தமிழ் மொழி என்று ஒரு உணர்ச்சிவயப்பட்டு  சொல்லிவிடுகிறோம். ஆனால், உண்மையில் தமிழ் மொழி எவ்வளவு தொன்மையானது  என்பதை ஆவணம் செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிதான் தமிழி. இது இரண்டு வருடங்களுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, இன்றும்  தொடர்ந்துகொண்டே வருகிறது. முக்கியமாக இது யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். காரணம் மற்றவர்கள் இதை வாங்கினால் அவர்கள் அதை ஒரு வியாபாரமாகத்தான் செய்வார்கள். அதுமட்டுமின்றி அவர்களின் வலைதளங்களில் மட்டும்தான் இது ஒளிபரப்பப்படும். ஆனால் எங்களின் கருத்து, இந்த விஷயம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். 18,000 கி.மீ வரை பயணம் செய்து இதை ஆவணம் செய்திருக்கிறோம். சிந்து சமவெளி வரை சென்று அங்கிருக்கும் கல்வெட்டுக்களை ஆவணம் செய்துள்ளோம். குறிப்பாக இளங்கோ, எனும் என் நண்பர்தான் இதற்காக அதிகமாக உழைத்தார். நாங்கள் இதை ஆரம்பித்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. ஆனால் அவர், நாங்கள் தொடங்குவதற்கு முன்பிருந்தே இது சம்பந்தமான நிறைய விஷயங்களை சேகரித்து வைத்திருந்தார். என் சார்பில் இவர்களுக்கு நான் வெறும் தூண்டுகோலாக மட்டும்தான் இருந்தேன். மற்றபடி எங்கள் ஆராய்ச்சி குழுவும், அதனை ஆவணம் செய்தவர்களும்தான் நேரடியாக களத்திற்கு சென்று கிடைத்த இடத்தில் உறங்கி மிகவும் கஷ்டப்பட்டு ஆவணம் செய்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் கல்வெட்டை ஆவணம் செய்ய சென்றபோது, காலை சூரியக் கதிர் ஒளியில் படம் எடுக்க வேண்டும் என்று, அங்கே ஒரு மொட்டைமாடியில் படுத்து உறங்கி காலையில் படம் எடுத்தார்கள்.

 

தமிழி ஆவணத்தை எடுத்து முடித்து பார்த்தபோது ‘எல்லாவற்றையும் கடந்த ஒரு மொழி, அந்த மொழி மக்களின் வாழ்வியலின் விஷயமாக இருந்திருக்கிறது’ என்று தெரிந்தபோது புது உணர்வு பிறந்தது.

 


‘தமிழனாய் இருந்தால் பகிர்’ எனும் விஷயம் வந்தபிறகு இந்தியன், தமிழன் என்ற வேறுபாடு பிறக்கின்றதோ எனும் அச்சம் பிறக்கின்றது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?



தமிழர்களாக இருப்பதற்கு முன்பாகவே அவர்கள் மனிதர்கள். அதன் பின் அவர்கள் பேசத்  தொடங்கும்போது, ஒரு மொழி உருவாகுகிறது. அதன்பின் அதற்கு எழுத்து உருவாகுகிறது.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றுதான் தமிழ் சொல்லுகிறது. இப்படி தமிழே அனைவரையும் இணைத்துக்கொள் எனும்போது நாம் அதனை ஒரு மொழியின் அடிப்படையில் பிரிக்கும்போது அது கண்டிப்பாக தவறான விஷயம்தான். மேலும் தமிழ் வெறும் சக மனிதனை மட்டும் நேசி என்று சொல்லவில்லை. ஒவ்வொரு உயிரையும் நேசி 'பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று அனைத்தையும் நேசிக்கச்சொல்லித்தான் சொல்லுகின்றது.

 


சினிமாவிலும் இருக்கிறீர்கள், சமூக செயற்பாடுகளிலும் மற்றும் இதுபோல் மொழி சார்ந்தும் இயங்குகிறீர்கள் இதை எப்படி பிரித்து பார்க்கிறீர்கள்?

 

இரண்டையும் பிரித்தெல்லாம் பார்க்கவில்லை. நாம் பொருள் ஈட்டினால்தான்,  நமக்கு பிடித்த விஷயத்தை செய்ய முடியும். அதற்காக சினிமாவுக்குள் போகிறோம். ஆனால் சினிமாவில் நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை, நம்மை நம்பி பணம் போடுகிறவர்களின் வழியாக சொல்ல முடியாது. அதற்காகத்தான் தமிழி போன்ற ஆவணப் படம் எடுக்கின்றோம். இரண்டுமே இன்று தேவையான ஒன்றாகத்தான் இருக்கிறது. காரணம், சினிமாவில் இருந்தால்தான் வெளிவுலகத்திற்கு தெரியவருவோம். வெளிவுலகத்திற்கு தெரியவந்தால்தான் நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதை மற்றவர்கள் கேட்பார்கள்.

 

 

hh

 

 

ஹிப்ஹாப் ஆதி, தன் பாடல்கள் மூலமாக பாரதியாரின் கவிதைகளை வியாபாரம் ஆக்குகிறார் என்ற கருத்து நிலவிவருகிறது இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
 


பாரதியாரின் கவிதைகள் பொதுவுடைமையானது. சினிமாவில் இன்றில்லை, கப்பலோட்டிய தமிழன் படங்களில் இருந்தே பாரதியாரின் பாடல்கள் வந்துக்கொண்டுத்தான் இருக்கிறது. இன்று இருக்கும் தலைமுறை இங்கிருந்துகொண்டு ஜெர்மனியில் யாரோ ஒரு ஆர்டிஸ்ட் வெளியிடும் பாடலை கேட்கக்கூடிய வசதிகள் வந்துவிட்டது. இப்படியிருக்கும் தலைமுறையினருக்கு, அவர்களுக்கு பிடித்த ஒரு இசைவடிவில்தான் இசையை கொண்டுபோய் சேர்க்கமுடியும். 'பாயும் ஒளி நீ எனக்கு' பாடல் வெறும் பாடல் மட்டும் அல்ல, பாரதியாரின் கவிதையும் அதனுள் இருக்கும் பொருளடக்கத்தையும் சேர்த்துதான் கொண்டுசேர்க்கிறோம். இன்றிருக்கும் இணைய வசதி மூலம் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் வந்துவிட்டது. அதை சிலர், நல்ல கருத்துகளை சொல்வதற்கு பயன்படுத்துகிறார்கள். சிலர், மற்றவர்களை திட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். முதல் முதலில் எனது ஹிப்ஹாப் ஆல்பத்தை வாங்க மறுத்துவர்களும், தமிழ் விற்காது என்று சொன்னவர்களும்தான் இன்று இதனை வியாபாரம் என்கிறார்கள். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால்,  நாம், நமக்கு தேவையானதை மட்டுமே அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தால் நாம் நினைத்தை நம்மால் செய்ய முடியாமல் போய்விடும்.