மதிமுக தலைவர் வைகோ, முன்பு ஒரு மேடையில் கலைஞருக்கும் தனக்குமான உறவைப் பற்றி பகிர்ந்து கொண்டது...
"ஒரு பாசறையின் போர் வீரனாக, ஒரு உலைக் களத்திலே வார்ப்பிக்கப்பட்ட ஆயுதமாக, நான் திராவிட முன்னேற்ற கழகத்தில் தயாரிக்கப்பட்டவன். என்னை வார்ப்பித்தவர், ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள். அண்ணன் கலைஞரும் நானும், அண்ணனும் தம்பியாக பழகிய சம்பவங்கள் இவை. நான் பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் 1964 ஆகஸ்ட் 21ஆம் தேதி கோகலே மண்டபத்தில் உரையாற்றி நுங்கம்பாக்கத்தில் அவரை சந்தித்து அவரது அன்பைப் பெற்றவன். அதே ஆண்டில் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களை சந்தித்தேன். பாளையங்கோட்டை தனிமைச் சிறைச் சாலையிலே, இந்தி எதிர்ப்பு மொழி புரட்சிக்கு காரணகர்த்தா என்று அடைக்கப்பட்ட அவர் மீண்டு வந்தார். அதே 65வது ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாநில கல்லூரியின் தமிழ் மன்ற தலைவராக நான் அவரை அழைத்துச் சென்று புதிய புறநானூறு என்ற தலைப்பிலே, என்னுடைய தலைமையிலே அவர் உரையாற்றினார்.
சட்டக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் தேர்தலில் நான்தான் போட்டியிட வேண்டும் என்ற என் இனிய சகோதரர் முரசொலி செல்வம் அவர்கள் வற்புறுத்தலால் நான் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோற்றுப்போன பொழுது, நுங்கம்பாக்கம் அண்ணா இல்லத்திற்கு சென்றேன். அவர் என்னை ஆசுவாசப்படுத்தி அவர் 'உனக்கு எந்த ஊர்' என்று கேட்க நான் பதில் சொல்லி பேசிவிட்டு வந்தேன். அங்கிருந்து எழும்பூர் ரயிலடிக்கு ஓடி வந்து அண்ணன் கலைஞர் அவர்களை அவசர அவசரமாக 'புறப்படுவதற்கு முன் பார்த்துவிட வேண்டும்' என்று விரைந்து வந்த வேளையிலே அவர் ரயில் படிக்கட்டுக்கு மேல் ஏறி நிற்கிறார், அருகில் சென்றவுடன் தேர்தல் முடிவுகளைக் கேட்டார். தோளைத்தட்டிக் கொடுத்து 'இதை பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே' என்று சொல்லிவிட்டுப் போனார்.
அந்தத் தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, பேரறிஞர் அண்ணா மறைந்தார். அவரது சிலையை சட்டகல்லூரியிலே நாங்கள் அமைக்கிறோம். அண்ணா சிலை திறப்பு விழாவுக்கு முதலமைச்சர் கலைஞரை அழைக்கிறோம். கலைஞர், அண்ணா சிலையை திறக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி மாணவர்கள் சட்டக் கல்லூரி வாசலிலே உண்ணாவிரதம் இருந்தார்கள். நானும் தோழர்களும் அவர்களுக்கு நேர் எதிரே 'உண்ணும் விரதம்' என்ற பெயரில் பல்வேறு தின்பண்டங்களை, அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் மிகுந்த எரிச்சலடைந்தார்கள், நாங்கள் விழாவுக்கான வேலைகளைத் தொடர்ந்தோம்.
குறிப்பிட்ட நாள் வந்தது அண்ணா சிலை திறக்க முதலமைச்சர் கலைஞர் வந்துகொண்டு இருக்கிறார் கோபாலபுரத்தில் இருந்து. கறுப்புக்கொடி காட்டுவோம் என்று அறிவித்த அந்த தோழர்கள் மாணவர்கள் ஒரு நாற்பது ஐம்பது பேர் கறுப்புக்கொடியோடு வந்து கலைஞருக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கெல்லிஸ் விடுதியிலே இருந்தோம். என்னோடு வந்தவர்கள் மட்டும் ஐம்பது பேர், தெற்குச் சீமைக்காரர்கள், நாங்களும் கரங்களில் கொடிகளை ஏந்தி வந்தோம். வலுவான கம்புகளில் கட்டப்பட்ட கொடிகள். அவர்கள் கறுப்புக் கொடி காட்டத் தொடங்கிய அடுத்த நிமிடதில் சிலம்பமாக சுழன்றன எங்கள் தடிகள். அவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினார்கள்.
காவல் துறையினர் கலகம் நடக்கிறது என்று சொன்னவுடன் அண்ணன் கலைஞர் அவர்கள் இல்லம் திரும்பிவிட்டார், பதறிப்போன நான் காவல்துறை அதிகாரிகளிடம், 'அவர்கள்தான் ஓடி மறைந்து விட்டார்களே, முதலமைச்சரை அழைத்து வாருங்கள், இங்கே ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டிருக்கிறோம் என்று கூறினேன்.
கலைஞர் வந்தார். அந்த மேடையில் ஏறி உரையாற்றினார். "அந்நியர் வந்து புகுந்து வாலாட்டினால் உதை விழுங் காண்" என்ற பாடல் வரிகளை பொருத்தமான இடத்திலே சொன்னார். வெற்றிபெற்ற மாணவர் பேரவைத் தலைவர் வரவேற்பு பத்திரம் வாசிக்க வேண்டும். அவர் வரமாட்டேன் என்று தெரிவித்து விட்டார். அப்படியானால் வரவேற்பு பத்திரம் வாசிப்பது யார்? தேர்தலில் தோற்றுப் போன வைகோ வரவேற்பு பத்திரத்தைத் தயாரித்துக் கொண்டு வரட்டும் என்று கூறிவிட்டார்கள். நான் அந்த வரவேற்பு பத்திரத்தை ஆங்கிலத்தில் தயாரித்தேன். 'K... ஸ்டேன்ட்ஸ் ஃபார் கைண்ட் ஹார்ட், A ஸ்டேன்ட்ஸ் ஃபார் அட்மினிஸ்ட்ரேட்டர், R... ரைட் திங்கிங், I... இன்விசிபில் ஃபோர்ஸ் என வரிசையாக கருணாநிதி (KARUNANIDHI) என்னும் பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்தில் தயாரித்து, அந்த வாழ்த்து மடலை வாசித்து முதலமைச்சர் கலைஞரிடம் கொடுத்தேன்.
மறுநாள் காலை தமிழ்நாடு பூராகவும் தினத்தந்தி ஏட்டில் முதல் பக்கத்தில் 'முதலமைச்சருக்கு சட்டக்கல்லூரியிலே அண்ணா சிலை திறக்கின்ற பொழுது வரவேற்பு' என்று நான் அவரிடம் அந்தப் பத்திரத்தைக் கொடுப்பது போன்ற புகைப்படம் வந்தது. அந்தப் புகைப்படத்தைத்தான் இன்றும் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன். 1961 முதல் 89 இறுதிவரை அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் அகில இந்திய தலைவர்களையும் உலகத் தலைவர்களையும் கழகத்தின் கடைசி தொண்டனையும் சந்திக்கின்ற அந்த முதல் மாடி அறையில் ஒரே ஒரு வரவேற்பு மடலைத்தான் மாட்டிவைத்திருந்தார் அது நான் கொடுத்த மடல்."