Skip to main content

"நானும் விஜயகாந்த்தும் செய்த ரகளைகள்..." - வாகை சந்திரசேகர் தீபாவளி ஸ்பெஷல் பேட்டி  

Published on 05/11/2018 | Edited on 06/11/2018

வாகை சந்திரசேகர்... 2000 கிட்ஸ்க்கு இவரை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தெரியும். 90ஸ் கிட்ஸ்க்கு இவரை கரகாட்டக்காரன் வில்லனாகத் தெரியும். அதற்கு முன்பானவர்களுக்கு இவரை துடிப்பான புரட்சிகரமான கோபக்கார இளைஞராக நடிக்கும் சந்திரசேகராகத் தெரியும். இப்படி கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவிலும் அரசியலிலும் ஆக்டிவாக இருப்பவர். 'சிவப்பு மல்லி'யில் வெடிக்கும் கோபம், 'ஒரு தலை ராகம்' படத்தில் கலாட்டாவான குடிகாரக் கல்லூரி மாணவன், இன்னும் எத்தனையோ படங்கள், எத்தனையோ பாத்திரங்கள்... வாகை சந்திரசேகரிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு அவரிடம் பேசினோம். அவர் பகிர்ந்த நினைவுகள்...

 

vagai chandrasekar

 


சந்திரசேகர் என்றால் ஒரு புரட்சிகர அல்லது அடங்காத ஒரு இளைஞராகத்தான் அந்தக் கால ரசிகர்களுக்கு நினைவு இருக்கிறது. உங்கள் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்படித்தான். நிஜத்தில் உங்கள் இளமைப் பருவம் எப்படி?

சின்ன வயதில் இருந்தே நான் கோபக்காரன்தான். என் வீட்டில் நான் 5வது நபர். என் அக்கா, அண்ணன் எல்லோரும் என்னைக் கண்டு பயப்படுவார்கள். பள்ளிப் பருவத்தில் இருந்தே கொஞ்சம் முரட்டுத்தனமான ஆள்தான். ஆனால் பார்த்தால் யாருக்குமே தெரியாது, சாந்தமாக இருப்பதுபோலத்தான் தெரியும். அந்த குணம் வெளியே வரும்போதுதான் தெரியும். நான் ஒரு முரட்டுத்தனமான கேரக்டர் என நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். ரவுடிங்கள பார்த்தால் பெரும்பாலும் ஒல்லியாகத்தான் இருப்பார்கள். குண்டாக இருக்க மாட்டார்கள். அது மாதிரி. 25, 30 வருடத்திற்கு முன்பு சினிமாவில் பீக்கில் இருந்த காலத்தில் ராதாரவி பயங்கர கோபக்காரர். எஸ்.எஸ். சந்திரன் பயங்கரமா டென்ஷன் ஆவாரு. விஜயகாந்த் பயங்கரமான கோபக்க்காரருன்னு பேசிப்பாங்க... இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். ஆனால் அந்த 3 பேரும் யாரைப் பார்த்து பயப்படுவாங்கன்னா, என்னைப் பார்த்து பயப்படுவாங்க.

தஞ்சை பூண்டி கலைக் கல்லூரிக்கு ஒரு விழாவுக்காக நான், விஜயகாந்த், ராதாரவி போயிருந்தோம். அங்க ஒரு மாணவர் தம்பி ஏதோ மரியாதைக் குறைவா பேசிட்டாருன்னு, நான் கோபமாகப் பேசிவிட்டேன். அது பெரிய கலாட்டாவாக மாறி, பிரச்சனையாகிடுச்சி. அதுபோல 'செந்தூரப்பூவே' படப்பிடிப்பு நடக்கும்போது ஒரு பெரிய தகராறு. முட்டுக்காடு பீச்சில் இரவு நேரத்தில் ஷுட்டிங் நடக்கும்போது நடிகர் செந்திலை யாரோ கிண்டல் செஞ்சிட்டாங்க அங்க பெரிய தகராறு ஆனது. அதில் உள்ளபோயி நான்தான் முதல் அடியே அடிக்க ஆரம்பிச்சேன். அப்ப செல்போன் கிடையாது. அப்புறம் அங்கிருந்து வெளியே வந்து ராதாரவிக்கு போன் பண்ணி, அவர் சென்னையில் இருந்து வந்தார். இப்படி எனக்கு உடனே சடாருன்னு கோவம் வரும். ஆனால் காரணமில்லாமல் வராது.

இப்ப எல்லாத்தையும் குறைத்துவிட்டேன். சினிமா, புகழ் என்று எதுவும் தெரியாமல் கிராமத்தில் இருந்த சந்திரசேகரை அப்படியே வைத்திருக்கிறேன். என் மன அமைதிக்காக அவனை சிதைக்காமல் அப்படியே வைத்திருக்கிறேன். இன்று வரை நான் உணர்வுப்பூர்வமாகவும், கம்பீரமாகவும் இருப்பதற்கு காரணம் அவன்தான்.

 

vagai chandrasekar with kalaignarநீங்க, விஜயகாந்த், ராதாரவி எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக நடித்தவர்கள், பல பிரச்சனைகளிலும் ஒன்றாக செயல்பட்டவர்கள்... அந்த நேரத்தின் இனிமையான நினைவுகள் எதாவது?

ஒன்னா, ரெண்டா? சொல்லிக்கிட்டே போகலாம்... இங்க சிட்டிக்குள்ள ஷூட்டிங் எப்ப முடிஞ்சாலும் நான், விஜயகாந்த், ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன் ஒன்னா அசம்பிள் ஆகிடுவோம். நிறைய பேசுவோம், பேசிக்கிட்டே இருப்போம். ஏகப்பட்ட ரகளை பண்ணுவோம். அதேபோல ராமநாராயணன் படத்தில் எல்லோரும் நடிப்போம். ராமநாராயணன் எங்களுக்கு ஒரு நல்ல சகோதரர், உற்ற நண்பர். அதுபோல ஒருவர் கிடைப்பது கஷ்டம். படப்பிடிப்பில் மதியம் சாப்பாட்டிற்குப் பின்னர் கடலை மிட்டாய் கொடுக்கிறார்கள். இதனை முதல் முதலில் 'சிவப்பு மல்லி' திரைப்பட படப்பிடிப்பில் ராமநாராயணன்தான் ஆரம்பித்து வைத்தார்.

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜயகாந்த் அப்பா அழகர்சாமி உடல்நிலை முடியாம இருக்கிறார் என செய்தி வந்தது. ஷூட்டிங் முடிஞ்சு இரவு காரில் நானும், விஜயகாந்த் மட்டும் சென்றோம், விஜயகாந்த்தான் டிரைவிங். விடியற்காலையில் மதுரை சென்றோம். அங்க அவரை பார்த்துவிட்டு உடனே புறப்பட்டு நைட் ஷூட்டிங்க்கு வந்துவிட்டோம். என்னுடைய இனிய நண்பர் விஜயகாந்த்.

அப்பொழுது ஏதாவதொரு தீபாவளியை ஒன்றாகக் கொண்டாடியிருக்கிறீர்களா?

கொண்டாடியிருக்கிறோம். எந்த ஷூட்டிங்ல இருக்கோமோ அந்த ஷூட்டிங்ல இருக்கிற எல்லா டெக்னீசியனையெல்லாம் டிரஸ், ஸ்வீட் எல்லாம் எடுத்துக் கொடுத்து கொண்டாடிவிட்டுத்தான் வீட்டுக்குப் போவோம்.

 

chandrasekar vijayakanth


 


நீங்கள் சிறுவனாக இருந்த காலத்தில் கொண்டாடிய தீபாவளிக்கும் இப்போதைய தீபாவளிக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

அப்ப காலையில எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புது டிரஸ் போடுவோம். அப்ப தீபாவளிக்குத்தான் புது டிரஸ். அதனால் புது டிரஸ் என்றால் ஒரு குதூகலம், மகிழ்ச்சி இருந்தது. இப்ப அப்படியா? காசு இருந்தா எப்ப வேணுமானாலும் புது டிரஸ் எடுக்குறாங்க.

தீபாவளி அன்று காலையில இட்லிக்கு கறிக்குழம்பு சாப்பிடுவது ஒரு தனி சந்தோஷம். சின்ன வயதில் திண்டுக்கல்லில் இருந்தேன். அங்கு 4 தியேட்டர்கள் இருந்தன. சின்ன வயதில் எந்த நடிகரை சார்ந்தும் ரசிகராக இல்லை. தீபாவளிக்கு ஐந்து காட்சிகள் போடுவார்கள். தீபாவளி அன்றைக்கு ஒரே நாளில் 4 படங்களை பார்த்துவிடுவேன். எந்தப் படத்தில் எந்த சீன் வந்ததுன்னு சில நேரத்தில் குழப்பம் வரும். திரும்ப காசு சேர்த்து வைத்து திரும்பவும் படம் பார்ப்பேன். நான் வெடி வெடிக்கிறது தனியா தெரியணும். அதுக்காக தீபாவளி அன்னைக்கு வெடி வெடிக்க மாட்டேன். பத்திரமாக எடுத்து வைத்து, அடுத்த நாள் வெடிப்பேன். நான் வெடிக்கறது அப்ப ஊருக்கே கேட்கும்.

தீபாவளிக்கு பலகாரங்கள் எல்லாம் எப்படி?

எங்க வீட்டம்மா மதுரை பக்கம். இன்னமும் முறுக்கு, சீடை எல்லா பலாகாரமும் வீட்டுலத்தான் செய்வோம்.

 

chandrasekar and vijayakanthநீங்க கிச்சன் பக்கம் போவீங்களா?

நான் பேச்சுலராக இருந்தபோது சமைச்சிருக்கேன். தீபாவளின்னு இல்ல, எப்போதுமே கிச்சனில் என்ட்ரி கொடுத்துக்கிட்டே இருப்பேன். காய் வெட்டிக்கொடுப்பேன். ரொம்ப கொதிக்கிது, என்ன செய்யனும் கேட்பேன். அப்புறம் அவுங்க திட்டி வெளியே அனுப்புவாங்க. கொஞ்ச நேரத்தில் திரும்பவும் போவேன். திட்டி வெளியே அனுப்புவாங்க, என்னால சும்மா இருக்க முடியாது, ஐந்து நிமிஷத்துல திரும்பவும் போவேன், வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்கன்னு சொல்லி அனுப்பிவிடுவாங்க.

நடிகர்கள் பெரும்பாலும் முடி கொட்டிவிட்டால் விக் வைக்கிறார்கள்.. உங்களுக்கு அந்த விருப்பம் இல்லையா?

விக் வைக்கலாம், தொப்பி போட்டுக்கொள்ளலாமுன்னு எல்லாருமே சொன்னாங்க. சினிமா எனக்கு தொழில். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு ஒப்பனை இல்லாமல் யதார்த்தமாக  இருக்கலாமே என்று வைக்கவில்லை. 'திமுகவில் இருப்பவர்கள், திமுகவையும், அதன் கொள்கையையும், தலைவர் கலைஞரையும் பின்பற்றிப் போவார்கள், நான் இதிலேயும் தலைவரை பின்பற்றிப் போகிறேன்' என்று என் தலையை தடவியபடி நகைச்சுவையாக சொல்வேன்...

சிரித்தபடி பதில் சொன்னார் வாகை சந்திரசேகர். கலகலப்பாகச் சென்ற பேட்டியை தீபாவளி வாழ்த்துகள் சொல்லி நிறைவு செய்தோம். 
 

 

 

 

Next Story

“ஏ.ஐ மூலம் விஜயகாந்தைத் திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Premalatha Vijayakanth Vijayakanth should not be used in films by AI without permission

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு, மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பலரும் நடிக்க வைப்பதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பலரும் இந்த விஷயத்தை கையில் எடுக்கயிருப்பதாக அவ்வப்போது கூறி வந்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அனுமதியின்றி எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே, இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது.

எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வேளியிட வேண்டும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாகும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடகச் செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

'கேப்டன் நேரில் வருகை' - வெளியான வீடியோவால் தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனமான விஜயகாந்த் மறைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தினமும் அவருடைய  நினைவிடத்தில் மலர் தூவி பூஜை செய்து வருகின்றனர். அதேபோல் தினமும் அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (18/06/2024) செவ்வாய்க்கிழமை திடீரென தேமுதிக அலுவலகத்தில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை உடனடியாக கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பாம்பு ரூபத்தில் வந்திருப்பதாகத் தெரிவித்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர் தேமுதிக தொண்டர்கள்.

பின்னர் சிறிது நேரம் அலுவலக வளாகத்திலேயே ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு பின்னர் அங்கிருந்து வெளியே தப்பி சென்றது. இந்த வீடியோவை தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தொடங்கி வைத்த 'கேப்டன் நியூஸ்' இணையதளபக்கத்தில் வெளியிடப்படுள்ளது. அதில் 'இன்று தலைமை  கழகத்திற்கு கேப்டன் நேரில் வருகை' எனக் கேப்சன் கொடுக்கப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில், 'செவ்வாய்க்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் எந்த வழியாக அலுவலகத்திற்கு வருவாரோ அதே வழியில் நாகம் வந்து, அவர் அமர்ந்திருந்த அறைக்கு சென்று, அங்கிருந்து வெளியேறியது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.