Skip to main content

அதிகார பலமும், ஆட்சியும் நம்மிடம் இருக்கிறது என்ற எண்ணமே ஜெயஸ்ரீ கொலைக்குக் காரணம் - மனநல மருத்துவர் ஷாலினி!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020


நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற சிறுமியை இரண்டு நபர்கள் கை, கால்களைக் கட்டி தீவைத்து எரித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட அவர்களை அ.தி.மு.க.வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கட்சித் தலைமை நீக்கியுள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, 


விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை கை, கால்களைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்கள். இதற்கு முன்பகையைக் காரணமாகக் கூறுகிறார்கள். பொதுவாக இந்த மாதிரி சம்பவங்களில் சாதிய வன்மம் எல்லாம் இருக்கும். ஆனால் இதில் பாதிக்கப்பட்டவரும், கொலையைச் செய்தவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். முன்பகை காரணமாகச் சொல்லப்படும் வேளையில் ஒரு அப்பாவி சிறுமியைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?

இது உச்சக்கட்டமான வக்கிர எண்ணம் என்ற கணக்கில்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு குடும்பத்திற்கும் பகை என்கிறார்கள். அப்படி என்றால் அந்தக் குடும்பத்தில் உள்ள ஆண்களைத்தானே இவர்கள் தாக்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி ஏதும் செய்யாமல் அந்த வீட்டில் இருப்பதிலேயே யார் பலகீனமானவர்கள் என்று பார்த்துக் கொலை செய்துள்ளார்கள். அவர்கள் இந்தக் கொலையைத் திட்டமிட்டு செய்துள்ளார்கள். அவர்கள் ஏதோ கோபத்தில் சென்றார்கள், அடித்தார்கள் என்ற கோணத்தில் இந்தச் சம்பவம் நடைபெறவில்லை. திட்டமிட்டுச் சென்றிருக்கிறார்கள், அந்தக் சிறுமியின் கை, கால்களைக் கட்டிப்போட்டு அவள் சத்தம் போட்டுவிடக்கூடாது என்கிற காரணத்துக்காக வாயில் துணி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள். 

 

 


இது ஒரு உச்சகட்ட வக்கிரம், வன்முறை என்றுதான் சொல்ல முடியும். இதற்கு வேறு எந்தப் பெயரையும் கொண்டு அழைக்க முடியாது. ஒருவர் இந்த வேலையைக செய்திருந்தால் கூட அவருக்கு என்ன பிரச்சனை என்று யோசிக்கலாம். ஆனால் இருவர் கூட்டு சேர்ந்து இந்தச் சம்பவத்தைச் செய்துள்ளார்கள். அதிகார பலம் இருக்கு, ஆட்சி நம்மிடம் இருக்கு என்று, இதை அவர்கள் செய்துள்ளார்கள் என்ற கோணத்தில்தான் நாம் இதை எடுத்துக்கொள்ள முடியும். ஏனென்றால் இந்த மாதிரியான வெறித்தனமான எண்ணங்கள் எல்லாம் அதிகாரத்தின் கோரப் பிடியில் இருந்து பிறப்பவைகளாகவே இருந்து வருகின்றது. எந்த ஒரு ஈவு இரக்கமும் இல்லாமல் இந்தச் சம்பவத்தை அவர்கள் செய்துள்ளார்கள். அவர்கள் வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள், அவர்களுக்கு இந்த மாதிரி ஒரு நிலை வந்தால் என்ன செய்வது என்று இவர்கள் யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது.