Skip to main content

பாஜக ஆளும் மாநிலங்கள் நிஜத்தில் எத்தனை?

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாஜக ஆளும் காலம் விரைவில் வரப்போவதாக பிரதமர் மோடி கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் பேசி வருகிறார். அவர் மட்டுமல்ல, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அமித் ஷாவும்கூட அப்படித்தான் பேசுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பார்க்கலாமா?

 

Modi

 

பாஜக தனித்து ஆட்சி நடத்தும் மாநிலங்கள் எவையெல்லாம் தெரியுமா?

 

1.மத்தியப்பிரதேசம், 2. சத்தீஸ்கர், 3.ராஜஸ்தான், 4.குஜராத், 5.ஹிமாச்சலபிரதேசம், 6.ஹரியானா, 7.உத்தரகாண்ட், 8.ஜார்கண்ட், 9.உத்தரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள்தான் பாஜக தனித்து ஆளும் மாநிலங்கள்.

 

1.ஜார்கண்ட், 2.அருணாச்சலப்பிரதேசம், 3.அசாம், 4.மணிப்பூர், 5.மஹாராஸ்டிரா, 6.கோவா, 7.ஜம்மு-காஷ்மீர், 8.பிகார், 9.சிக்கிம், 10.ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பிறகட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ, அல்லது பிற கட்சி அரசுகளில் இடம்பிடித்தோ பாஜக ஆட்சியில் பங்கேற்கிறது.

 

இப்போது, திரிபுராவிலும், நாகாலாந்திலும், மேகாலயாவிலும் பாஜகவின் கூட்டணி அரசு அமையப்போகிறது. இவற்றில் திரிபுராவில்தான் பாஜக கூடுதல் இடத்துடன் கூட்டணி அரசு அமைக்கப் போகிறது. நாகாலாந்தில் அந்தக் கட்சி 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும், ஆளுநர் மற்றும் மத்திய அரசின் உதவியோடு அரசு அமைக்கிறது. அதிலும் மேகாலயாவில் பாஜக வெறும் 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், 21 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்காமல், தனக்கு வேண்டிய கட்சியின் தலைமையில் பாஜகவும் சேர்ந்து மொத்தம் 6 கட்சிகள் அடங்கிய கூட்டணி அரசை அமைக்கிறது பாஜக.

 

1.கர்நாடகா, 2.பஞ்சாப், 3.மிசோரம், 4.புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் காங்கிரசும், தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும், டில்லியில் ஆம் ஆத்மி கட்சியும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியும், ஒடிஸாவில் பிஜு ஜனதாதளமும், தமிழகத்தில் அதிமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி நடத்துகின்றன.

 

பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புக்கூறுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியான பாஜக படுதோல்வி அடைந்தது.

 

மாகாரஸ்டிராவிலோ பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா அதிலிருந்து விலகிவிட்டது. இப்போதைக்கு பாஜக அங்கு மைனாரிட்டி அரசாகத்தான் இருக்கிறது. தேசியவாத காங்கிரஸின் சப்போர்ட்டில் அது தாக்குப்பிடித்து வருகிறது.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்தியா முழுவதும் காவிக்கொடி பறக்கும் என்று மோடி கூறியிருக்கிறார். முதலில் அவர் பாஜக ஆளும் மாநிலங்களை மீண்டும் தக்க வைக்கட்டும் என்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்.

 
News Hub