Skip to main content

வள்ளுவர் சிலை வைத்து அரசியல் செய்யும் பாஜக... வெளிவந்த ரகசிய பின்னணி!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

வட இந்தியாவையே வளைத்துப் பிடித்த பா.ஜ.க.வுக்கு தென்மாநிலங்களில் இதுவரை உறுதியான பிடி கிடைக்கவில்லை. எனவே இம்மாநிலங்களைக் குறிவைத்து மாநிலத்துக்கு ஒரு வியூகம் வகுத்துவருகிறது பா.ஜ.க. இந்தித் திணிப்பு எதிர்ப்பு, கோ பேக் மோடி முதலியற்றில் வேறெந்த மாநிலத் தைவிடவும் வேகம்காட்டும் தமிழகத்தை வளைக்க பிரதமர் மோடியும் பா.ஜ.க.வினரும் தொடர்முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு அம்சமாக தமிழின் தொன்மையைப் பாராட்டுவது, வேட்டிகட்டுவது என தொடங்கி தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட குறளை வெளியிட்டு, குறளொன்றுக்கு விளக்கமும் அளித்தார் மோடி.

 

issues



மோடி குறளை வெளியிட்ட அதேசமயம், சமூக ஊடகங்களில் காவி உடை, திருநீற்றுப் பூச்சுடன் இருக்கும் வள்ளுவரின் படம் வெளியிடப்பட்டு, திருவள்ளுவர் இந்து என பரப்பும் முயற்சிகளில் தமிழக பா.ஜ.க. வினர், இந்துத்துவர்கள் மும்முரம் காட்டத் தொடங்கினர். அதற்கு எதிர்க்கட்சிகள், தமிழாய்வாளர்கள் என பல தரப்பிலும் எதிர்ப்புகள் வரத்தொடங்கிய நேரத்தில், தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் வள்ளுவர்மீது சேற்றை இறைத்து ஒரு கும்பல் தங்கள் அழுக்கு மனதை அடையாளம் காட்டியது.

 

issues



மதவாதங்களுக்கு என்றும் இடையூறாக இருந்துவரும் தந்தை பெரியார் மீதான காழ்ப்பால் சில மாதங்களுக்கு முன்பு தந்தை பெரியார் சிலைகள் உடைப்பு, அவமதிப்பு என்று அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின. அதனைத் தடுக்க முடியவில்லை என்றாலும் ஆளுங்கட்சி சமாதானம் செய்து சிலைகளை சீரமைத்துத் தந்தது. ஆனாலும் எச்.ராஜா போன்றவர்களின் பேச்சு இன்னும் பெரியாருக்கு எதிராகவே உள்ளது.


இதுகுறித்து பிள்ளையார்பட்டி கிராமத்தினர் கூறும்போது.. “ஊரில் ஒருசிலர் சிலைவைக்க ஏற்பாடுகள் செய்தபோது, கிராம மக்கள் இணைந்து சிலைவைப்போம் என்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சிலையை உருவாக்கினோம். அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் வைரம் (எ) ராமமூர்த்தி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வீரசண்முகமுனி திறந்து வைத்தார்.

அதன்பிறகு ஊரில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தபிறகே தொடங்குவது வழக்கம். அந்த சிலையைத்தான் அவமதித்திருக்கிறார்கள். அவமதித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர். அங்கு வந்த தி.மு.க. மா.செ. சந்திரசேகரன், தஞ்சை எம்.எல்.ஏ. நீலமேகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் கிராம மக்களுடன் இணைந்து உடனடியாக நட வடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். எஸ்.எப்.ஐ. சார்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


"இல்லாமை பலவற்றுள்ளும் கொடியது அறிவில்லாமையே' என்பது வள்ளுவன் வாக்கு. தமிழகத்தின் முதன்மை முகமாக முன்வைக்கக்கூடிய வள்ளுவனின் சிலைமீது சேறடிப்பது, தன் இனத்தின் மீதே சேறடிப்பது என்பதை உணர்ந்திருந்தால் இதைச் செய்திருப்பார்களா…?