Skip to main content

வள்ளுவர் சிலையும், வல்லபாய் சிலையும்... - சிலை அரசியல் 

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
valluvar vallabhai

 

இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிலை என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்ற பெருமையை கூறும் விதமாக 'STATUE OF UNITY' என்ற பெயரில் இந்த சிலை அழைக்கப்படுகிறது. 
 

இந்த சிலை அமைப்பதற்காக 2010ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி வல்லபாய் படேலின் சிலையை நிறுவுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கு 'யுனிட்டி ஆஃப் இந்தியா' என பெயரிட்டார். அதன்பின் அக்டோபர், 2010ல் சிலை கட்டுமானத் திட்டம் முறைப்படி தொடங்கப்பட்டது. 2011 மார்ச்சில் சிலை திட்டத்திற்காக சர்தார் வல்லபாய் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட் என்ற ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. ஜூன் 2012ல் சிலை வடிவமைப்புக்கு  ஒப்பந்தம் போடப்பட்டது. அக்டோபர் 2013ல் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நவம்பர் 2013ல் சிலை கட்டுமான பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு, ஜூன் 2014ல் எல் & டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட 3 வருடங்கள் 4 மாதங்கள் கட்டுமானப்பணிகள் நடந்தன. இதில் 70,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 18,500 மெட்ரிக் டன் வலுவூட்டப்பட்ட எஃகு, 6000 மெட்ரிக் டன் கட்டுமான இரும்பு, 1,700 மெட்ரிக் டன் வெண்கலம், ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்தப் பணியில் 250 பொறியாளர்களும், 3,700 தொழிலாளர்களும் ஈடுபட்டு, இந்த மாபெரும் சிலையை உருவாக்கினர். இன்று (31.10.2018) பிரதமர் நரேந்திரமோடி இந்த சிலையை திறந்துவைத்தார்.
 

இந்த சிலை அமைக்கும் முடிவுக்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது, கூறப்படுகிறது. காங்கிரஸின் அடையாளமாக, முகமாக இருக்கும் தலைவர்கள் காந்தி, நேரு. காந்தியை போற்றும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பாஜக, சர்தார் வல்லபாய் படேலையும் தங்கள் திட்டத்தில் சேர்த்தது. குஜராத்தில் வலிமையான சமூகமாக திகழும் பட்டேதார் சமூகத்தில் அப்பொழுதே சிறிது அதிருப்தி உண்டாவதை உணர்ந்து தொடங்கிய இந்த சிலை திட்டம் பின் ஹர்திக் படேல் தலைமையில் பட்டேதார் சமூகம் காட்டிய எழுச்சியையும் எதிர்ப்பையும் சமாளிக்க இப்போது பயன்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்திய பாஜக தரப்பில். இந்திய ஒருமைப்பாட்டுக்கு முழு காரணமான சர்தார் வல்லபாய் படேல் நேருவுக்கு இணையான தலைவர், ஆனால் அவரை காங்கிரஸ் மதிக்கவில்லையென்றும் அவரது புகழை மறைத்துவிட்டது என்றும், சர்தார் படேலின் புகழை பறைசாற்றவே இந்த சிலையை உருவாக்கியதாகவும் கூறுகிறது. இப்படி குஜராத்தில் எழுப்பப்பட்ட இந்த பிரம்மாண்ட சிலைக்குப் பின்னான காரணங்கள் இருக்கின்றன. குஜராத் என்றாலே மகாத்மா காந்தி என்ற தன்மையை இது அசைத்துப் பார்ப்பதாக இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.          
 

தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றிருப்பது  உலகப்பொதுமறை திருக்குறளையும், பொய்யில் புலவர் திருவள்ளுவரையும் வணங்கும் (கௌரவிக்கும்) விதமாக முக்கூடல் நகரம் கன்னியாகுமரியில் 133 அடியில்  அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை. திருக்குறளின் அதிகாரங்களை கூறும் வகையில் 133 அடியில் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கான திட்டம்  அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் மனதில் உதித்து பின் செயலானது.
 

டிசம்பர் 31, 1975ல் கூடிய திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் வள்ளுவர் சிலை அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 1976 லேயே அதாவது கிட்டதட்ட ஒரு மாதத்திலேயே திமுக அரசு கலைக்கப்பட்டது. அதற்குபின் 1989ல் திமுக அரசு அமைந்தவுடன் மீண்டும் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 1990 செப்டம்பர் 6ம் தேதி கலைஞர் தலைமையில் சிலை அமைப்புப் பணிகள் தொடங்கின. 1991ல் ஆட்சி மாறியது. அதன்பின் 25.06.1997 அன்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில் வள்ளுவர் சிலைக்காக 9 கோடி ரூபாயும், சிலை அளவு உள்ளிட்ட பல பணிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் இரண்டரை வருடங்களுக்குபிறகு 01.01.2000ல் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞரால் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.
 

இந்திய தேசத்தின் தென் கோடி எல்லையும் தமிழகத்தின் பெருமையுமாகத் திகழும் கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறைதான் அதுவரை அடையாளமாகத் திகழ்ந்தது. இந்திய தேசத்தின் எல்லையில் தமிழை அடையாளமாக நிறுத்த நினைத்த கலைஞர், திருவள்ளுவர் சிலையை நிறுவினார். இப்படி இரண்டு மாநிலங்களின் அடையாளங்களை மாற்றி முக்கிய அடையாளமாக மாறியிருக்கின்றன இந்த இரண்டு சிலைகள்.