சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கலந்துகொண்டு பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, "இன்றைக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். நம்மை பற்றி ஆதரவான செய்திகள் வெளிவருவது ஒருபுறம் இருந்தாலும், நெகடிவ் ஆன செய்திகள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை எல்லாம் கடந்துதான் பயணிக்க வேண்டி உள்ளது. நண்பர் ஒருவர் சொன்னார், திருமாவளவன் ஆர்கனைஸ்சராகவே பல ஆண்டுகளாக இருக்கிறார் என்று, என் மீதான அக்கறையில் ஆதங்கத்தில் அவர் அப்படி கூறினார். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன். அதுதான் என் இயல்பும்கூட. வாக்கு செலுத்துவதை தவிர எந்த புரிதலும் இல்லாத அடிதட்டு மக்களை அரசியல்படுத்த அது தேவைப்படுகிறது. அதனை செய்யவே நான் எப்போதும் விரும்புகிறேன். தலித் அரசியல் பற்றி பேசாமல் நாம் இந்திவாகவோ, பாட்டாளியாகவோ வேறு எதனாலும் நாம் இணைய முடியாது.
எதிர் இருக்கும் நண்பர்களுக்கு சொல்கிறேன், நகரச் செயலாளர் பதவியோ, வட்டச் செயலாளர் பதவியோ எதுவாக இருந்தாலும் அது நம்முடன் நிலையாக இருக்காது. ஆனால் தொண்டன் என்ற பதவி மட்டும் கடைசி வரையில் நிலையாக இருக்கும். நான் தலைவன் ஆகிவிட்டேன் என்றோ, எம்.பி ஆகிவிட்டேன் என்றோ நான் இப்போதும் நினைக்கவில்லை. தற்பெருமை பட்டால் அது நம்மை அழித்துவிடும் ஆற்றல் உடையது. அதையெல்லாம் கடந்துதான் நாம் அரசியலில் ஈடுபட வேண்டும். நம்மை பிரபலபடுத்த தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல விடுதலை சிறுத்தைகள் இயக்கம். மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எந்த ஒரு தலித் இயக்கமும் தமிழகத்தில் தொட முடியாதவற்றை எல்லாம் தொட்ட இயக்கம் நம்முடைய விடுதலை சிறுத்தைகள் இயக்கம். தேர்தல் கூட்டணிகள் என்பது அந்தெந்த கால சூழ்நிலைகளுக்கும், சமூதாய தேவைகளுக்கும் ஏற்ப எடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதில் தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புக்கள் இருக்க கூடாது. அதில் நான் எப்போதும் தெளிவாக இருப்பேன்" என்றார்.