Skip to main content

தூய்மை இந்தியாவில் தொடரும் “கையால் மலம் அள்ளும் கொடுமை!”

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 50 பேர் கையால் மலம் அள்ளும் கொடுமை நீடிக்கிறது. அதுவும் ஒரிரு ரொட்டிக்காக இந்த வேலையை செய்ய, உயர்சாதியினரால் நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

cc

 

தென்னிந்தியாவைத் தவிர வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பிறப்பின் விதி என்று கூறி, குறிப்பிட்ட சாதியினரை கையால் மலம் அள்ளும் வேலையைச் செய்யும்படி உயர்சாதியினர் கட்டாயப்படுத்தி வந்தனர்.

 

இந்நிலையில்தான் 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின்மூலம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்கி, கையால் மனிதக் கழிவுகளை அள்ளும் கொடுமையையும் ஒழிக்கப்படும் என்று அறிவித்தார்.

 

ஆனால், பல மாநிலங்கள் தங்களுடை மாநிலங்களில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாமல் செய்துவிட்டதாக அறிவித்தனவே தவிர, பரவலாக இன்னும் கையால் மலம் அள்ளும் கொடுமை நீடிப்பதாக கூறப்பட்டது. பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில அரசும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவித்தது.

 

ccc

 

 

இந்நிலையில்தான், உயர்சாதியினர் வீடுகளில் உள்ள கழிப்பிடங்களில் இருந்து கைகளால் மலம் அள்ளும் கொடுமை குறித்து தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தி இருக்கிறது. இரும்புச் சட்டியும் துடைப்பமும் கையில் வைத்துக்கொண்டு, மலம் வாரும் சாந்தா தேவி மற்றும் அவருடைய குடும்பத்தினர், சேகரித்த மனிதக் கழிவுகளை குப்பையில் கொட்டிய பிறகு, சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு வந்து ஒன்று அல்லது இரண்டு ரொட்டிகளை கூலியாக பெறுகிறார்கள். 2013 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்திலேயே கையால் மலம் அள்ளுவதை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது.

 

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெஹ்னாரா கிராமத்தைச் சேர்ந்த சாந்தா தேவி, அவருடைய சகோதரி முன்னி, முன்னியின் கணவர் ராம்பு ஆகியோர் உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் தினமும் கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலையைச் செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 மணிநேரம் இந்த வேலையில் செலவிடுவதாகவும், வேறு தூய்மைபடுத்தும் வேலைகளைச் செய்தால் மட்டுமே சிறிதளவு பணம் கிடைக்கும் என்றும் சொல்கிறார் சாந்தா தேவி.

 

இந்தக் கிராமத்தில் மெஹ்தார் சாதியைச் சேர்ந்த ஐந்து குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடும்பங்களை பரம்பரையாக மனிதக் கழிவுகளை அள்ளும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றன. இந்தக் கிராமத்தில் ஜாட், ஜாதவ் சாதிகளைச் சேர்ந்த 250 குடும்பங்கள் இருக்கின்றன. சாந்தா தேவி, முன்னி ஆகியோரின் மகன்களும் அடிக்கடி இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். கழிப்பறைகள், கழிவுநீர் தொட்டிகளை  சுத்தம் செய்யும் வேலைக்கு சிறிதளவு பணம் பெற்றுக்கொள்கிறார்கள்.

 

“எங்களை வேறு எந்த வேலையும் செய்ய அனுமதிப்பதில்லை. எங்களிடம் இருந்து யாரும் எதையும் வாங்க மாட்டார்கள். நாங்கள் அசுத்தமானவர்கள் என்கிறார்கள். ஊர்க் கோவிலில் சாமி கும்பிடக்கூட அனுமதிப்பதில்லை” என்கிறார் முன்னியின் மகன் முகேஷ்.

 

“எனது பேரக்குழந்தைகளை எங்கள் வாழ்க்கை முறையிலிருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். அவன் போலீஸ்துறையில் சேர்ந்து எதிரிகளை பிடிக்கப்போவதாக கூறுகிறான்” என்கிறார் முன்னி.

 

“வகுப்பறையில் எங்களை தனியான இடத்தில் உட்கார வைக்கிறார்கள். மற்ற மாணவர்கள் எங்களுடன் விளையாட மாட்டார்கள். நாங்கள் ஒருவேளை அவர்களை தொட்டுவிட்டால் சாதியைச் சொல்லி திட்டுவார்கள்” என்கிறார் நான்காம் வகுப்பு படிக்கும் முன்னியின் பேரன் சங்கம்.

 

பள்ளிக்கூட கழிப்பறைகளை இவர்களுடைய தாத்தா சுத்தம் செய்வார். ஒருவேளை அவர் வராவிட்டால், இந்த சிறுவர்களை சுத்தம் செய்யச் சொல்லும் கொடுமை நீடிக்கிறது. சுமார் 160 மாவட்டங்களில் 50 ஆயிரம் பேர் கையால் மலம் அள்ளும் வேலை செய்வதாக ராஷ்டிரியா கரிமா அபியான் என்ற அமைப்பு கணக்கெடுத்துள்ளது. அப்படியிருந்தும் பல மாநிலங்கள் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என்றும், தங்கள் மாநிலங்கள் முழுமையாக கழிப்பறைகளுக்கு மாறிவிட்டதாகவும் பதிவு செய்வதிலேயே குறியாக இருக்கின்றன என்று சொல்கிறது இந்த அமைப்பு.

 

cc

 

2018 ஏப்ரல் மாதம் சாந்தா தேவி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் இந்த அமைப்பிடம் தங்களை பதிவு செய்ய சென்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகமோ, கையால் மலம் அள்ளுகிறவர்கள் யாரும் இல்லை என்றே சாதிக்கிறது.

 

இப்படி ஒரு கொடுமையை தொடரச் செய்துகொண்டே, காந்தி பிறந்த 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சர்வேதச அளவில் பல நாடுகளின் அமைச்சர்களை அழைத்து, தூய்மை இந்தியா திட்டத்தை பாராட்டச் செய்திருக்கிறது மோடி அரசு.