Skip to main content

மருத்துவர் சைமனுக்கு நேர்ந்தது மிகக் கொடுமையானது... யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது - திருமா பேச்சு!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


உலக நாடுகளை கரோனா ஆட்டிப்படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் கூட அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு என்பது சமூகப்பரவல் என்ற அளவிற்குச் செல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறியுள்ளதாவது, "இன்றைக்கு ஒடிசா முதல்வர் முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கரோனா சிகிச்சையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒருவேளை நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளார்.
 

 

 

f



மேலும் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் செய்துள்ளார். இந்த கோரிக்கைகளை நேற்று முகநூல் நேரலையில் நாங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைத்தோம். தற்போது அதனை ஒடிசா முதல்வர் நிறைவேற்றி உள்ளார். நமது கோரிக்கைகள் ஒடிசா முதல்வருக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்தியாவிலேயே ஆகச்சிறந்த முதல்வர் என்ற பாத்திரத்திற்கு உரித்தானவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். ஐந்தாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்பவர். அவர் மீது இதுவரை யாரும் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்களையும் வைத்ததில்லை. அவதூறு பரப்புவதற்காகக் கூட அவர் மீது இதுவரை யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது இல்லை. இவ்வாறு ஆட்சி செய்யும் அவர், மருத்துவர்களின் தியாகங்களைப் புரிந்துகொண்டு அவர்களைத் தியாகிகள் என்றே அழைப்போம் என்று முடிவெடுத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். 

தமிழக முதல்வருக்கு இந்தக் கோரிக்கைகளை நாம் வைத்தோம். ஏனென்றால் தமிழக மருத்துவருக்குச் சில தினங்களுக்கு முன்பு  நடந்த அவமரியாதையை நாம் அறிவோம். மருத்துவர் சைமன் அவர்களுக்கு நேர்ந்தது மிகக் கொடுமையானது. மனிதாபிமானம் உள்ளவர்கள் யாரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒன்றுக்கு இரண்டு இடங்களில் அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து கடைசியாக அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்துள்ளார்கள். அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யப்போனவர்களின் உடலைத் தாக்கி இருக்கிறார்கள். வண்டியைச் சேதப்படுத்தி இருக்கிறார்கள். மருத்துவ ஊழியர்களைக் காயப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த மருத்துவரின் மீது எந்தக் கோபமும் இல்லை.
 

http://onelink.to/nknapp


சாதி மதம் என்ற அரசியலும் அதில் இல்லை. கரோனா தொற்றுக்கு ஆளானவரை இங்கே புதைத்தால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் பயந்ததன் விளைவாக இந்த நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. அவர்களுக்கு இருக்கின்ற அச்சம் நியாயமானதுதான். ஆனால் அது அறியாமையின் வெளிப்பாடு. அவர்களின் அறியாமைக்கு யார் பொறுப்பு. நாம் எல்லோருமே பொறுப்பு. அரசு மட்டுமே இதற்குப் பொறுப்பு ஆகாது. கரோனா வைரஸ் கொடியது என்ற அளவிற்கு மட்டும் தான் அது மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று கொண்டால் குடும்பத்தில் இருக்கின்ற அனைவருக்கும் இது பரவும் என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கின்றது. இதற்கு முன்பும் பலபேர் இத்தகைய கொள்ளை நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளை ஒப்பிடுகையில் அப்போது இதைவிட அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே இதுகுறித்த எச்சரிக்கையை அனைவரிடமும் முறையாகக் கொண்டு சேர்க்க வேண்டும்" என்றார்.