அதிமுகவில் சசிகலா என்ற பேச்சுக்கே இடமில்லை, இரண்டு அணிகளும் இணையும்போதே அதற்கான உறுதிமொழியை இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்டுதான் இந்த இணைப்பு சாத்தியமானது. எனவே சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வியே தேவையில்லாதது. சசிகலா தொடர்பாக யார் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள் என தேனி கர்ணனிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
"இந்த இணைப்பு எப்படி நடைபெற்றது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இந்தப் பிரிவு ஏற்பட யார் காரணம் என்று பார்க்க வேண்டும். அண்ணன் ஓ.பி.எஸ். முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது கூட எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன்பிறகு சின்னம்மாவுக்கும், அண்ணன் ஓபிஎஸ்க்கும் இடையே முடிந்த அளவு இந்தக் கருங்காலிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தினார்கள். அதன் விளைவாக இருவருக்கும் இடையே பேசுவதற்கு வாய்ப்பு என்பதே அமையவில்லை. அப்போது அண்ணன் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். இதை யார் தூண்டி அவர் அவ்வாறு செய்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக இருவரும் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகளே அமையவில்லை. அவ்வாறு அமைந்திருந்தால் இன்றைக்கு வரை அண்ணன் ஓபிஎஸ் தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்திருப்பார். அதை இந்த துரோகிகள் தடுத்தது மட்டுமில்லாமல், இன்றைக்கு அதிமுகவை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இன்றைக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சின்னம்மாவை எதிர்க்கிறார்கள், மூன்று பேர்தான் தொடர்ந்து அவதூறு தெரிவித்து எதிர்க்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி. முனுசாமி இவர்களைத் தவிர வேறு யாராவது சின்னம்மாவை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறார்களா? அதிமுகவில் எத்தனையோ பழுத்த சீனியர்கள் இருக்கிறார்கள், ஆனால் சின்னம்மா குறித்து இதுவரை ஒருவர் கூட வாய்திறக்கவில்லையே. இவர்கள் மூன்று பேர் மட்டும்தானே தொடர்ந்து பேசிவருகிறார்கள். தனக்குப் பதவி அளித்த சின்னம்மாவை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி எப்படி பேசுகிறார் என்று பார்க்க வேண்டும். மிகவும் அவமரியாதை செய்யும் விதமாக தொடர்ந்து பேசிவருகிறார். அவரின் இந்தப் பேச்சை அவரது சமூகம் சார்ந்த மக்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பள்ளி செல்லும் குழந்தை கூட பிறருக்கு மரியாதை தரும் வழக்கத்தைக் கொண்டவர்கள் கொங்கு பகுதி மக்கள். கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு அவர்கள் வாக்களித்தது கூட அம்மா, புரட்சித் தலைவரை மனதில் வைத்து அவர்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை என்று அவர்களே எங்களிடம் கூறுகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி கள நிலவரம் புரிந்து செயல்படுவது மிக நல்லது. தான் செய்த தவறுக்காக அவர் விரைவில் ஜெயிலுக்கு செல்வார். அவ்வாறு அவர் சிறை சென்றால்தான் அம்மாவின் ஆத்மா சாந்தியடையும்" என்றார்.