குதிரை பேரத்தை ஊக்குவித்த முதல் ஆளுநர்!
‘ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்று அண்ணா கூறுவார். அது ஒரு அலங்காரப்பதவி என்பதே பொதுவான கருத்து.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை 156.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. செம்மரம், சந்தன மரம், நாவல் மரம் என 6 ஆயிரத்து 718 மரங்களுடன் பசுமையான பகுதி இது. ஆளுநர் மாளிகைக்கு தேவையான காய்கறித் தோட்டமும் உண்டு.
இவ்வளவு பெரிய நிலப்பரப்பை ஜனாதிபதியின் ஏஜெண்டாக செயல்படும் ஒருவருக்காக வீணடிப்பதா என்று அவ்வப்போது கேள்விகள் எழும். பிறகு அந்தக் கேள்விகளுக்கு பதிலே இல்லாமல் அடங்கிவிடும்.
கவர்னர் மாளிகை பல சமயங்களில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியிருக்கிறது. வயதான தலைவர்களுக்கு ஓய்வெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஆளுநர் பதவியோ என்று நினைக்கும் வகையில், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள பலர் இங்கே குடியேறி உள்ளனர். தமிழகத்தின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு சர்ச்சைகளுக்கு ஆளான சிலரைப்பற்றி இந்தச் சமயத்தில் அறிந்துகொள்ளலாம்...
இந்தியா விடுதலை பெற்ற பிறகு அப்போது சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தின் முதல் இந்திய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் கிருஷ்ண குமாரசிங் பவசிங். இவர் 1952ல் இந்தியாவின் புதிய அரசியல் சட்டத்தின்படி நடைபெற்ற தேர்தல்வரை ஆளுநராக பொறுப்பு வகித்தார். பாவ்நகர் ராஜ்ஜியத்தின் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இவர் மன்னர் பதவி பறிக்கப்பட்டபிறகு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1952 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவான சமயத்தில் சர்ச்சைக்குரிய முதல் ஆளுநர் பொறுப்பு வகித்தார். அவர் பெயர் ஸ்ரீபிரகாசா. அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் 62 இடங்களுக்கு மேல் பெற்றிருந்தனர். பிரகாசம் தலைமையில் சிறிய கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் பிரகாசா, கம்யூனிஸ்ட் பங்களிப்புடன் ஒரு அரசு அமைவதை ஏற்கவில்லை. அதைத் தடுக்கும் வகையில் ஆட்சி அமைக்க யாரையும் அழைக்காமல் மூன்று மாதங்கள் வரை இழுத்தடித்தார்.
விடுதலை பெற்ற இந்தியாவில் குதிரை பேரத்தை ஊக்குவித்த ஸ்ரீ பிரகாசா
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்து ராஜாஜியை முதல்வராக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, சட்டமன்றத்திலோ, மேலவையிலோ உறுப்பினராக இல்லாத ராஜாஜியை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் பிரகாசா. முதல்வரான பிறகு ராஜாஜி எதிர்க்கட்சிகளுடன் பேரம் நடத்தி தனக்கு போதுமான பெரும்பான்மை உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டார் என்பது வரலாறு.
1956 ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக திருவிதாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ஜே.ஜான் நியமிக்கப்பட்டார். 1958 செப்டம்பர் மாதம் இவர் மரணம் அடைந்தார். தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்தபோது மரணம் அடைந்த ஆளுநர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் இறந்தவுடன் தற்காலிக ஆளுநராக பகாலா வெங்கட்ட ராஜமன்னார் என்பவர் நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்கள் மட்டுமே பொறுப்பு வகித்த இவர்தான், தமிழகத்தின் முதல் தற்காலிக ஆளுநர்.
1958 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி தமிழகத்தின் ஆளுநராக அசாமின் முன்னாள் முதல்வர் விஷ்ணுராம் மேதி நியமிக்கப்பட்டார். 1964 வரை இவர் பொறுப்பு வகித்து ஓய்வுபெற்றார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
மைசூர் சமஸ்தானத்தின் கடைசி அரசராக பொறுப்பு வகித்த ஜெயச்சாமராஜ உடையார் பகதூர் தமிழ்நாட்டின் ஆளுநராக 1964 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை பொறுப்பு வகித்தார். என்ன காரணத்துக்காக இவர் பதவி விலகினார் என்று தெரியவில்லை. இவருக்கு அடுத்து ஒரு ஆண்டு வரை பி.சந்திரரெட்டி என்பவர் தற்காலிக ஆளுநராக பொறுப்பு வகித்திருக்கிறார். பின்னர் மீண்டும் 1965 டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 1966 ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை ஜெயச்சாமராஜ உடையார் பகதூர் ஆளுநராக பொறுப்பு வகித்திருக்கிறார்.
1967ல் அண்ணாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் உஜ்ஜல் சிங்
இவரைத் தொடர்ந்து, சர்தார் உஜ்ஜல்சிங் 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி வரை பொறுப்பு வகித்தார். இவருடைய காலகட்டத்தில்தான் அண்ணா தலைமையிலான திமுக அரசு முதன்முதல் பதவியேற்றது. இவர் அண்ணாவுக்கும், அண்ணா மறைவுக்கு பின் கலைஞருக்கும் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர். இவருடைய பதவிக்காலத்தில்தான் சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.