Skip to main content

டாஸ்மாக் விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வின் மறைமுக அரசியல்... உண்மை நிலவரம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

admk


உச்சநீதிமன்றம் வரை போராடி மதுக்கடைகளைத் திறந்து விட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மதுப்பிரியர்களை மனம் மகிழ வைப்பதில் "போர்க்கால' நடவடிக்கையை எடுத்திருக்கும் எடப்பாடிக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. இதனை எதிர்கொள்ளும் முகமாக தி.மு.க.வுக்கு பதிலடி தந்து வருகிறது அ.தி.மு.க.. கழகங்களின் மது அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது.
 


இதுகுறித்து அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவோ, அறிக்கை வெளியிடவோ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எவ்வித தார்மீக தகுதியும் உரிமையும் கிடையாது. தமிழகத்தில் பாக்கெட் சாராயம் என்றும், மலிவு விலை மது என்றும் மதுக் கடைகளைத் திறந்தவிட்ட சூத்திரதாரி கலைஞர்தான். அது மட்டுமல்லாமல் மதுக்கடைகளை நடத்த தனியாருக்கு அனுமதி தந்து அரசியல் ரவுடிகளை தொழிலதிபர்களாகவும், தி.மு.க.வுக்கு பணம் காய்க்கும் மரமாகவும் வளர்த்து விட்டவர் கலைஞர்.

மேலும், தி.மு.க.வினருக்கும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கும் மது ஆலை லைசன்ஸ் அதிகளவில் தரப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில்தான். தற்போதைய நிலவரப்படி, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை 11 நிறுவனங்கள் சப்ளை செய்வதாகச் சொல்லப்படுகிறது. இதில், தி.மு.க.வினரிடமும் தி.மு.க.வின் ஆதரவாளர்களிடமும்தான் பல நிறுவனங்கள் இருக்கின்றன.

உண்மை இப்படி இருக்க, மதுக் கடைகளுக்கு எதிராக ஸ்டாலின் போராடுவது என்பதெல்லாம் அரசியல் லாபங்களுக்காகவும் மக்களை ஏமாற்றவும்தான். மக்கள் முட்டாள்கள் கிடையாது. மதுவிலக்கில் தி.மு.க.வின் யோக்கியதைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். பூரண மதுவிலக்கிலும், மக்களின் ஆரோக்கியத்திலும் உண்மையான அக்கறை இருக்குமானால், தி.மு.க.வினரும் அக்கட்சி அனுதாபிகளும் நடத்தும் மது ஆலைகளை இழுத்து மூட ஸ்டாலின் உத்தரவிடலாமே! செய்வாரா? செய்ய மாட்டார். ஏனெனில், அந்த மது ஆலைகள்தான் தி.மு.க.வின் பொன் முட்டையிடும் கோழிகள். அதனால், மதுக்கடைகளுக்கு எதிராகக் கருத்து சொல்வதற்குக்கூட தி.மு.க.வினருக்கு உரிமை கிடையாது. பூரண மதுவிலக்குதான் அ.தி.மு.க.வின் கொள்கை. காலமும் நேரமும் ஒத்துழைக்கும்போது இதனை அ.தி.மு.க. சாத்தியமாக்கும். மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்போம் என்ற எங்கள் புரட்சித்தலைவியின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர், அதற்கான முயற்சியில் இருக்கிறார்'' என்கிறார் மிக அழுத்தமாக.

 

dmk


தி.மு.க.வின் தென்சென்னை மா.செ.வும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.விடம் பேசியபோது, "பூரண மதுவிலக்கு தான் தி.மு.க.வின் உயிர்நாடி! அதனை 2016 தேர்தல் அறிக்கையில் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறோம். மதுக்கடைகளுக்கு எதிராக, தி.மு.க. மட்டுமே உறுதியாகப் போராடி வருகிறது.

மதுஆலைகளில் தி.மு.க.மீது குற்றம்சாட்ட அ.தி.மு.க. தலைவர்களுக்கு யோக்கியதை கிடையாது. 'மிடாஸ்' மது நிறுவனத்தை சசிகலா மூலம் நடத்தியவர் ஜெயலலிதா. சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து வெளியேற்றியபோது, அந்நிறுவனத்தின் நிர்வாகப் பதவியில் ‘சோ-வை நியமித்தவரும் ஜெயலலிதாதானே! அந்த நிறுவனத்திடமிருந்து தான் அதிகப்படியான மதுபானங்களைக் கொள்முதல் செய்கிறது எடப்பாடி அரசு. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்போம் என்றார்களே, குறைத்தார்களா? குறைப்பதாக பாவ்லா காட்டி விட்டு கடைகளை அதிகரித்தே வருகின்றனர். அ.தி.மு.க. அரசின் இந்த லட்சணத்தைச் சட்ட மன்றத்திலேயே அம்பலப்படுத்தியிருக்கிறேன்.
 


தி.மு.க.வில் இரண்டு பேர் மட்டுமே மது ஆலை வைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் சப்ளை செய்யவே அவை இயங்குகின்றன. மேலும், எங்களிடம்தான் வாங்க வேண்டும் என தி.மு.க.வினர் தமிழக அரசைக் கட்டாயப்படுத்தவில்லை. மதுக்கடைகளுக்கு எதிராகத் தமிழகமே போராடும்போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் எடப்பாடி அரசு தாக்கல் செய்த மனுவைப் பார்த்த தலைமை நீதிபதி, "உங்களுக்கு மக்களின் உயிர் மீது அக்கறையில்லையா?' எனக் கேட்டதற்குப் பிறகும், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து மதுக்கடைகளைத் திறந்திருக்கும் எடப்பாடி அரசை என்னவென்று சொல்வது?
 

 

senthil


மக்கள் மீது அக்கறை இல்லாத மனிதநேய மற்ற கொடுங்கோல் அரசுதானே இது ? அதனால் தி.மு.க.வை குற்றம்சொல்ல அ.தி.மு.க. தலைவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இதையெல்லாம் மறைக்கத்தான் தி.மு.க.வினர் மதுஆலை நடத்துவதாகக் கூக்குரலிடுகிறார்கள். இந்த நெருக்கடி காலத்தில் மது குடிக்காமல் திருந்த நினைத்தவர்களைக் கூட, நீங்கள் எப்படித் திருந்தலாம் என அவர்களை மீண்டும் குடிக்க வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. மக்களிடமிருந்து இவர்கள் தப்பிக்கவே முடியாது'' என்கிறார் ஆவேசமாக.

மதுக்கடைகளுக்கு எதிராகவும், முழுமையான மது விலக்கை வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக போராடி வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ’’மது ஆலைகள், மதுக்கடைகள் (டாஸ்மாக்), மதுக்கூடங்கள்(பார்கள்) ஆகிய மூன்றும் ஒரு முக்கோணம். இதன் ஒரு முனையைக்கூட மழுங்கடித்துவிடமுடியாது. அந்தளவுக்கு அரசியல் பின்னிப் பிணைந்திருக்கிறது. மதுஆலைகள் உயர்மட்ட அரசியல் வாதிகளுக்கு, மதுக்கடைகள் அரசாங்கத்துக்கு, பார்கள் கீழ்மட்ட அரசியல்வாதிகளுக்கு எனப் பணம் தரும் அட்சயப்பாத்திரம்.

அதனால் இதை எதற்காக உடைக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளின் விருப்பம். ஆனால், இதனைத் தங்களுக்குச் சாதகமாக மறைத்துக்கொண்டுவிட்டு, அரசியல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஏக திறமை உண்டு. மதுவிலக்கை 2016-க்கு முன்பும் பின்பும் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். 2016-க்கு முன்பு வரை தேர்தல் அரசியலில் விவாதிக்கிற அளவுக்கு இருந்ததில்லை. காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் மற்றும் எங்களைப் போன்ற சமூக அமைப்புகளின் வலிமையான போராட்டங்கள்தான் மது விலக்கு மக்கள் பிரச்சனையாக மாறியது.

அரசியல் கட்சிகளும் இதன்மீது கவனம் செலுத்தின. பூரண மதுவிலக்கை தி.மு.க.வும் பா.ம.க.வும் வலியுறுத்தின; அ.தி.மு.க.வோ படிப்படியாக என சொன்னது. ஆக, 2016-க்குப் பிறகுதான் மது விலக்கு கொள்கை அரசியல் வடிவமாக மாறுகிறது. ஆனால், தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே மக்கள்மீது உண்மையான அக்கறை இல்லை என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

மதுக்கடைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது வாதாடிய அரசு வழக்கறிஞர், "அரசுக்கு வருவாய் இழப்பு இருக்கிறது; உடனடியாக நிறுத்த முடியாது; நாலைந்து வருசம் இருந்தால்தான் முழுமையாக நிறுத்த நாங்கள் திட்டமிட முடியும்' எனச் சொன்னார். படிப்படியாக நிறுத்துவோம்னு 2016-லேயே அறிவித்த இவர்கள், கடந்த 4 வருசத்தில் திட்டமிட்டிருக்கலாமே? வருவாய் பெருக்கத்துக்கு மாற்று வழிகளை ஆராய்ந்திருக்கலாமே! கரோனா விவகாரத்திற்கு ஏகப்பட்ட கமிட்டிகளை போட்டவர்கள், அதுபோல மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்க அனைத்துத் தரப்பு வல்லுநர்களையும் அடங்கிய ஒரு கமிட்டியை அமைத்து திட்டமிட்டிருந்தால் இந்நேரம் மதுவிலக்கு மற்றும் மாற்று வாருவாய்க்கான இலக்கில் 90 சதவீதம் எட்டியிருக்க முடியும். ஆனா, எதுவும் நடக்கவில்லை. படிப்படியாக என்றவர்கள், மது விலக்கை அமல்படுத்த எத்தனை படிகள் இருக்கிறது? எந்தப் படியில் அரசு நிற்கிறது? எனத் தெரியவில்லை. ஆக, மதுவிலக்கிலும் மக்கள் ஆரோக்கியத்திலும் உண்மையான அக்கறை எடப்பாடி அரசுக்கு இல்லை.
 

http://onelink.to/nknapp


தி.மு.க.வோ பூரண மதுவிலக்கு என அறிவித்திருந்தது. மதுவிலக்கில் தி.மு.க.வுக்கு அக்கறையிருக்குமானால், மதுக்கடைகள் மூடப்படும் வரையில் மதுக்கடைகளை முற்றுகையிட்டு தமிழகம் முழுவதும் தினமும் தி.மு.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியிருந்தால் நிச்சயம் இந்தப் பிரச்சனை தேசிய அளவில் எதிரொலித்து ஒரு முடிவு கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட போராட்டத்தை தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞரோ, இந்நாள் தலைவர் ஸ்டாலினோ வடிவமைக்க வில்லை. வெறும் அறிக்கைவிடுவதையும், 2 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துவதையும் கடைப்பிடித்தார்களே தவிர, இவர்களுக்கும் உண்மையான அக்கறை கிடையாது. இருந்திருந்தால் தி.மு.க.வினரின் ஆலைகளை மூடி எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தியிருப்பார் ஸ்டாலின். தற்போதைய நெருக்கடியான நேரத்திலாவது குறைந்தபட்சம் 6 மாசம் ஆலைகளை மூட வைக்கிறேன் என்கிற நடவடிக்கையாவது அவர் எடுத்திருக்க வேண்டும். செய்யவில்லை. கண்துடைப்பு போராட்டங்களால் பயனில்லை.

தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினரின் மது ஆலைகளுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. மது ஆலைக்கும் பிஸினஸ் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்டது. இதுதவிர எதிர்க்கட்சியினரின் ஆலைகளில் கொள்முதல் செய்வதை அ.தி.மு.க.- தி.மு.க. நிறுத்தவில்லை. இன்று வரையிலும் அப்படித்தான். கழகங்களின் மது அரசியலை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களை எளிதாக நினைத்தால் கழக தலைவர்களின் கணக்குகள் தவறாகும்'' என்கிறார் மிக இயல்பாக.



 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.