காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
இன்று காலை நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
இந்த நிமிடம் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அதனை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பாஜக ஏமாற்றுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றோர் குழப்புகிறார்கள். நான் ராஜினாமா செய்தால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் ராஜினாமா செய்ய தயார் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். முதலில் இவர் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். தமிழர்கள் ஒன்றுபட தமிழக பாஜக முன்வர வேண்டும். அதைவிட்டுவிட்டு மத்திய அரசை காப்பாற்றுதற்காக தமிழத்திற்கு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
தேதி இருக்கிறது ஏன் அவசரப்படுகிறீர்கள் என கேட்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழர்கள் மீது, தமிழக விவசாயிகள் மீது தமிழிசை சவுந்தரராஜனுக்கு அக்கறை இருக்குமேயானால் முதலில் அவர்கள் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தயாரா இருக்கிறார்களா. இவர்களும் தமிழர்கள்தானே. இவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தயாரா.
டெல்லியில் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மதியத்திற்கு மேல் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை மற்றுகையிடப்போகிறோம். காவிரி மேலாண்மை வாரியம்தான் தமிழக காவிரி விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு. தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அடுத்தக் கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
இன்று அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் என்ன முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுத்து அவர்களால் சாதிக்க முடியாது. இன்றைய ஆலோசனையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்க வேண்டும். இவர்கள் தனியாக போய் என்ன செய்வார்கள். இவர்களுக்கு எந்த துணிவும் கிடையாது.
கோப்புப்படம்
மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்வோம் என்று மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பேசியிருக்கிறாரே?
அவர் தற்கொலை செய்வேன் என்று கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. அவர் ஒரு தமிழன். தமிழன் என்றும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டான். துணிவோடு போராட தயாராக இருக்க வேண்டும். முடிந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யட்டும். இல்லையென்றால் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லலாம். அதிமுகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் என்று சொல்லலாம். அதைவிடுத்து தான் தற்கொலை செய்வேன் என்று சொல்வது கோழைத்தனமானது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிட வேண்டும். தமிழக அரசே இதனை முன்னின்று நடத்த வேண்டும். அதனை மறுக்கும் பட்சத்தில் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி போராட வேண்டும். இவ்வாறு கூறினார்.