குறைந்த செலவில் வெளியிடப்படும் தரமான திரைப்படங்களுக்கு தலா 7 லட்சம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘திரைப்பட மானியக்குழு’ஒன்றையும் அமைத்துள்ளது. திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கின் ஒரு அம்சம்தானே தவிர அது அத்தியாவசியம் கிடையாது. அத்தியாவசியமற்ற ஒன்றுக்கு இத்தனை முக்கியத்துவமும் மானியமும் அளிக்கும் அரசு, அத்தியாவசியமான விவசாயத்திற்கு அளிக்கும் முக்கியத்துவமும், மானியமும் போதுமானதாக இருக்கிறதா?என்றால், கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.
‘’எலிக்கறி திண்ணும்கூட எங்களால பிரதமர சந்திக்க முடியல. ஆனா, ஒரு நடிகை நினைச்சா உடனே சந்திக்க முடியுது. கால்மேல கால் போட்டுக்கிட்டு கதை அளக்க முடியுது. நடிகைகளுக்கும் , நடிகருக்கும் கொடுக்குற முக்கியத்துவத்த எங்களுக்கு தர்றது இல்ல. புழு, பூச்சிய பார்க்குற மாதிரித்தான் எங்கள பார்க்குறாங்க. கீழ இருக்குற அரசு மேல இருக்குற அரசு எல்லாம் இந்த விசயத்துல ஒரே மாதிரித்தான் நடந்துக்குது. சோக்கு காட்டுற சினிமாவுக்கு கொடுக்குற முக்கியத்துவத்த சோறு போடுற எங்களுக்கு கொடுத்தா என்ன?’’என்று கேள்வி எழுப்பும் விவசாயிகள்,
’’எங்க விசயத்துல இப்படி பாராமுகம் காட்டும் அரசு, இப்போ தேசிய மயமாக்கப்பட்ட, வணிக மயமாக்கப்பட்ட, கூட்டுறவு வங்கிகள் மூலமா கொடுத்திட்டு வர்ற விவசாய கடன்களையும் நிறுத்தப்போறதா சொல்லுறது வெந்த புண்ணுல வேல பாய்ச்சுறது போல இருக்கு’’என்று குமுறுகிறார்கள்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் நா.பெரியசாமியிடம் நாம் இது குறித்து பேசியபோது,
‘’அரசாங்கத்திலிருந்து உரமானியம், விதை மானியம், சொட்டு நீர் மானியம்னு பட்டியல் நிறைய இருக்கு. அது விவசாயிகளுக்கு நேரடியா பயன்தருதான்னு பார்த்தா இல்ல. இப்ப பயன்தருதுன்னு பார்த்தா அது இலவச மின்சாரம்தான். அந்த இலவச மின்சாரத்துக்கும் மிகப்பெரிய ஆபத்தும், நெருக்கடியும் வந்துகிட்டிருக்கு. மத்திய பாஜக அரசின் நிர்பந்தத்தினால தமிழக அரசு, இந்த இலவச மின்சாரத்த எப்படி நிறுத்தலாம்னு திட்டம்போட்டுக்கிட்டிருக்கு.
உணவுப்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பணப்பயிர் சாகுபடி செய்யும்படி தள்ளப்பட்டாங்க. அதுவும், கட்டுப்படியான விலையில் கிடைக்காமல் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி, தற்கொலை முடிவை விவசாயிங்க எடுக்க வேண்டிய பேரபாயத்தை சமீப காலமாக பாத்துக்கொண்டிருக்கிறோம். சினிமாவுக்கு வரிவிலக்கு செய்வது, மானியம் கொடுப்பதெல்லாம் எப்படின்னு சொன்னா? இந்த தமிழ்நாடு அரசு சினிமா துறையை ஒரு செல்லப்பிள்ளை போல வச்சிருக்கு. எப்போதும் வீட்டுல செல்லப்பிள்ளைக்குத்தான் அதிக சலுகை கிடைக்குது. அதுபோலத்தான் இதுவும். மொத்தத்துல இந்த அரசின் செயல்பாடு, ’பாட்டாளிக்கு பத்துபடி இளிச்சவாயனுக்கு இறுபது படி’ன்னு சொல்லுது’’என்கிறார் வேதனையுடன்.
கீழ்பவானி பாசன விவசாய சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமியோ வெடித்து தள்ளினார். ‘’இந்த அரசாங்கம் அரசியலமைப்பு சட்டம் 14வது பிரிவை மதித்து நடந்தாலே போதும். அதாவது, எப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் இருக்குதோ அதுபோல விவசாயத்துக்கும் சம்பள கமிஷன் வேண்டும். அதுக்கு எம்.எஸ்.சாமிநாதன் குழுவோட பரிந்துரையை நடைமுறைப்படுத்தினாலே போதும். அந்த குழு பரிந்துரையின்படி விவசாயிகள் உற்பத்தி செய்யுற விளைபொருட்களுக்கு நியாயமான விலையை பெற முடியும். அப்போது இவுங்க கொடுக்கிற எந்த சலுகைகளும் விவசாயிகளுக்கு தேவையில்ல.
இப்ப சலுகைகள்ங்கிற பெயருல ஒரு குச்சி ஐஸ்சை கொடுக்குறாங்க. அந்த ஐஸ் அஞ்சு, ஆறு கை மாறி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சூப்பா உறிஞ்சிட்டு கடைசியில விவாயிங்ககிட்ட குச்சியை கொடுக்குறாங்க. இதத்தான் இந்த அரசாங்கம் செய்யுது. ஒரு நூறு ரூபா மானியம் பெறணும்னா குறைஞ்ச பட்சம் அறுபது ரூபா லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கு. அதுக்கு மேல அந்த ஆபீஸ் இந்த ஆபீஸ்னு விவசாயிகளோட உழைப்பு விரையமாகுது. ஆக, இந்த அரசு சலுகைகள்ங்கிற பெயருல விவசாயிகளை கீழ்த்தரமா நடத்துது’’என்றார் ஆவேசமாக.
’’கேளிக்கைக்கு நிவாரணங்கிறது கேலிக்கூத்தா இருக்கு’’ என்று எடுத்த எடுப்பிலேயே கொந்தளித்தார் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். அவர் மேலும், ‘’வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கு சினிமா. விவசாயம் அப்படியில்ல. நாட்டோட உணவுத்தேவைக்கும், அடுத்தவங்க பசியை போக்கவும் அத்தியாவசியமா இருக்கு. அப்படிப்பட்ட விவசாயத்திற்குத்தான் அரசாங்கம் மனமிரங்காம இருக்குது.
மோதிரத்துக்காக விரலை குறைக்குறது போலத்தான் அரசாங்கத்தோட இழப்பீடு இருக்கு. அப்படி இருக்கும்போது விவசாயம் எப்படி செழிக்கும். விவசாயியோட வாழ்க்கை எப்படி விடியும்? சினிமாவுக்கு நிவாரணம் கொடுத்து மக்களின் படத்தை வீணடிக்குறாங்க.
புயல், பெருவெள்ளம் வந்து கடுமையாக பாதிக்கப்பட்டபோதெல்லாம் வறட்சி மாவட்டமாக அறிவித்தால் விவசாயிகளின் கடனெல்லாம் தள்ளுபடியாகும்னு சொல்லி தலைகீழாக நின்னுக்கூட பாத்துட்டோம். அரசாங்கம் செவிசாய்க்கவே இல்ல.
கஜா புயல் நிவாரணத்தில் இன்னும் 40 லட்சம் தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாம இருக்கு. வருவாய்த்துறை அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யாததாலதான் நிவாரணம் இல்லன்னு சொல்லுறாங்க. விஏஓ’தான் இந்த வேலையைச்செய்யணும். அவர் அதைச்செய்யல. இப்படி ஒரு வழிமுறை இருக்குன்னு யாருக்கும் தெரியல. கடைசியில பாதிக்கப்படறது யாரு. எல்லாம் விவசாயிங்க தலையிலதான் வந்து விழுகுது. சினிமாவுக்கெல்லாம் கரிசனம் காட்டி மக்கள் பணத்தை வீணடிக்காம விவசாயிங்களுக்கு செய்யணும்னு எதிர்பார்க்குறோம்’’என்கிறார்.
விவசாயிகளுக்கு இருக்கும் இதே ஆதங்கமும், கோபமும்தான் திரைத்துறையினர் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது குறித்து வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள்.
-ஜீவாதங்கவேல், கதிரவன்