Skip to main content

தமிழக பாஜகவுக்கு இடைக்கால தலைவர்? 

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது. மூத்த தலைவர்களில் சிலர் இந்த பதவியை பெறுவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
 

BJP


 

96ல் பத்மநாதபுரம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நின்று வெற்றி பெற்றது. அதன்பிறகு திமுக, அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றார்கள். பாஜக தமிழகத்தில் தனித்து நிற்பதற்கான சூழ்நிலை இதுவரை வரவில்லை.


 

 

ஆகையால் எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி வைத்துதான் தேர்தலை பாஜக சந்திக்கும். ஆகையால் டெல்லி பாஜக, தமிழக தலைவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தேர்ந்தெடுக்காது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே தலைவர் தேர்வு இருக்கும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்வது, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து செல்வது, 2021ல் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பது உறுதியாகததால் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும், மக்களுடைய எதிர்ப்பு அதிகம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்று டெல்லி பாஜக எதிர்பார்க்கிறது.
 

இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. தலைவராக நடிகர் ரஜினிகாந்தை நியமித்தால் எப்படி இருக்கும்? என்று டெல்லியில் உள்ள பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடமும் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசியிருப்பதாக தெரிகிறது. “பா.ஜ.க. தமிழக தலைமை பொறுப்பை ஏற்க நீங்கள் வாருங்கள். உங்களுடன் வரும் நிர்வாகிகளுக்கு தேவையான மரியாதையை நாங்கள் கொடுக்கிறோம்” என்றும் ரஜினிகாந்திடம் கூறியுள்ளதாக தெரிகிறது.


 

 

ரஜினிகாந்த் இதற்கு ஒத்துக்கொள்ளும் வரை தமிழக பாஜகவுக்கு இடைக்கால தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்தும் டெல்லி பாஜக மேலிட தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளும் அதிமுக அரசு கூறியிருக்கிறது. அதில் பாஜகவுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. ஆகையால் உள்ளாட்சித் தேர்தல் வரை இடைக்கால தலைவரை நியமித்து, அதன் பிறகு ரஜினிகாந்த் சம்மதித்தால் அவரை நியமிப்பது, அப்படி அவர் சம்மதிக்காவிட்டால் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.