திரைப்பட விநியோகஸ்தர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் அரசியல் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். அப்போது மக்கள் நலனுக்காக ரஜினி - கமல் இணைந்து செயல்பட தயார் என கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஜினியும் கமலும் தனக்கு கலைத்துறையில் மூத்தவர்கள். அரசியலில் அவர்களை விட கொஞ்சம் நான் மூத்தவன்" என கூறினார். மேலும் அனுபவம் மட்டுமே அரசியலில் வெற்றியை தராது, அதிர்ஷ்டமும் வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இடையில் ஒரு நிருபர் நீங்கள் அரசியலில் நிலைக்கவில்லையே என்று வினவினார். இதனை கேட்டு சற்றே கோபமடைந்த டி.ராஜேந்தர், " நான் அரசியலுக்கு வந்து முதல்வராவேன், ஆட்சியை பிடிப்பேன் என்று கூறிக்கொண்டு இருக்கவில்லை. மாறாக ஆட்சியில் இருப்பவர்களை ஒரு பிடி பிடிக்கவே அரசியலுக்கு வந்தேன். அப்படிப்பட்ட நான் பல பதவிகளில் இருந்துள்ளேன். இதில் அமைச்சர் பதவிக்கு நிகரான மாநில சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியை, ஈழத்தமிழர் பிரச்சனைக்காக ராஜினாமா செய்துளேன். அப்படிப்பட்ட என்னை அரசியலில் நிலைக்காதவன் என்று சொல்வதில் எனக்கு வருத்தம் இல்லை" என்றார்