ஸ்விகி இந்த பெயரைக்கேட்டாலே, அந்த ஆரஞ்ச் நிற டி-சர்ட்டும், ஹெல்மெட், பேக், இவற்றையெல்லாம் தூக்கிக்கொண்டு செல்லும் ஊழியர்கள். இவர்கள்தான் நினைவுக்கு வருவர். அந்த அளவுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் ஸ்விகி பிரபலம். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில், டெலிவரி செய்யும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டதட்ட 80 சதவீதம்பேர் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த பகுதிகளில் சிறு, சிறு குழுக்களாக இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் கோரிக்கை சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கூறுவது இல்லை. இருக்கும் ஊதியத்தை குறைக்க வேண்டாம் என்பதுதான்.
கடந்த ஆண்டு ஸ்விகியில் ஒரு ஆர்டருக்கு ரூ.40ம், இணைப்பு ஆர்டருக்கு ரூ.20 வழங்கப்பட்டது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அது ரூ.36, ரூ.20 ஆக மாற்றப்பட்டது. தற்போது முதல் ஆர்டருக்கு ரூ.35ம், இணைப்பு ஆர்டருக்கு 10 ரூபாயுமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைவிட 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் 11 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதுவே அவர்களின் போராட்டத்திற்கு காரணம்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்தது...
எங்களுக்கு ஒரு நாளைக்கே 15-20 ஆர்டர்கள்தான் கிடைக்கும். அப்படி பாத்தா ஒரு நாளைக்கு (பெட்ரோல் செலவு போக) 250-300 ரூபாய் கிடைக்கும். இதுலதான் நாங்க சாப்பிடவேண்டும். மீதத்தை வீட்டிற்கு கொடுக்கவேண்டும். மொத்தத்திற்கே மாதத்திற்கு 10,000-15,000ம்தான் வரும். இதுலதான் பெட்ரோல் போடணும், சாப்பிடனும், வீட்டுக்கு கொடுக்கணும் எல்லாமே பண்ணனும். அதனாலதான் சொல்றோம். இருக்குறதையும் குறைக்காதிங்கனு. ஒரு நாளைக்கு எங்களுக்கு பெட்ரோலுக்கு மட்டுமே 200 ரூபா ஆகுது. ஆனா இதையெல்லாம் கண்டுக்காம அவங்க பேமெண்ட்-அ கம்மி பண்ணிட்டே இருக்காங்க.