பழனி முருகன் சிலை மோசடியைக் கண்டுபிடித்த பிறகு, அதே பழனிக்குச் சென்று மொட்டை போட்டார் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல். சாமி சிலை கடத்தல் வழக்கைத் தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. இப்போது லேட்டஸ்டாக கிளம்பியிருக்கும் பூதம் ரன்வீர் ஷா. சிலை கடத்தலில் மூளையான தீனதயாளனின் திக் ஃப்ரண்டான ரன்வீர்ஷா, சென்னை -கிண்டியில் பி.எஸ். அப்பாரெல்ஸ் என்னும் பெயரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதோடு சிலைகளை வாங்கி விற்கும் வேலையும் செய்கிறார்.
2016-ல் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி சில சிலைகளைக் கைப்பற்றியபோது, அதற்கு முறையான ஆவணங்கள் இருப்பதாக கூறியதால் அப்போது தப்பித்தார் ஷா. ஆனால் ஷா மீது ஒரு கண் வைத்தபடியே இருந்த பொன்.மாணிக்கவேல், கோர்ட் அனுமதி யுடன் கடந்த வியாழனன்று சோதனை நடத்தியதில் 89 சிலைகளை மீட்டு கும்பகோணத்திற்கு அனுப்பி யுள்ளார். இது குறித்து ஷாவின் வக்கீல் தங்கராசுவிடம் கேட்டபோது, ""சிலைகளை வாங்குவதற்கு லைசென்ஸ் இருக்கு, விற்பதற்கு இல்லை. ரன்வீர் ஷா தலைமறைவாகவும் இல்லை'' என்றார். ரன்வீர் ஷாவை மிரட்டிப் பணம் பறித்த பிரபல ரவுடி சி.டி.மணிக்கும் சிலை கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்பதை போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டதால், ரன்வீர் ஷா எஸ்கேப்பாகி விட்டார்.