டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி பிரபு. தனது அணிக்கு வந்த பிரபுவுக்கு வெயிட்டாக ஒரு நன்கொடை தரவேண்டும் என நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. கொடைக்கானலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்காக காலனி ஒன்றை உருவாக்கி வருகிறார். அதில் பிரபுவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்தார்.
கொடைக்கானல் வட்டம் வில்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கோவில்பட்டியில் சர்வே எண்: 1751/1-ல் உள்ள ஒரு ஹெக்டேர் 57 ஏர்ஸ் நிலத்தில் 10 ஏர்ஸ் 12.0 squ ஏர்ஸ் அகலமும், 23.0 ஏர்ஸ் நீளமும் கொண்ட நிலத்தை Dr..கே.கணேஷ் குமார் என்பவரிடமிருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் எடப்பாடி.
இதே கணேஷ்குமார் தி.நகர் சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், விருகம் பாக்கம் எம்.எல்.ஏ. விருகை ரவி ஆகியோருக்கும் ஆளுக்கு 25 சென்ட் வீதம் நிலத்தை கொடுத்துள்ளார். பிரபு அந்த பட்டியலில் இடம் பெறும் நான்காவது எம்.எல்.ஏ. என்கிறது அ.தி.மு.க. வட்டாரம். ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2019ஆம் ஆண்டு பிரபுவுக்கு இந்த நிலம் விற்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களுக்கு வில்பட்டி எல்லைக் குட்பட்ட கோவில்பட்டியில் ஆளுக்கு 25 சென்ட் என நிலம் எடப்பாடியால் வழங்கப்பட்டுள்ளது. சிரமமான காலத்தில் எடப்பாடிக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. கட்சி நிதியில் இருந்து அங்கு சொகுசு உல்லாச பங்களாக்கள் கட்டித் தர இந்த ஆட்சி முடி வதற்குள் ஏற்பாடு செய்யப்படும் என எடப்பாடி உத்திரவாதம் அளித்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதுபற்றி தி.நகர் சத்யா, கள்ளக்குறிச்சி பிரபு, விருகை ரவி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார் ஆகியோரை கேட்டோம். ""எல்லாம் பொய். எடப்பாடி சொகுசு விடுதிகள் கட்டித் தருகிறேன் என வாக்குறுதி அளிக்க வில்லை. அதற்காக எந்த நிலத்தையும் நாங்கள் வாங்கவில்லை'' என மறுக்கிறார்கள். அ.தி.மு.க. தரப்பிலோ புது கிஃப்ட் உற்சாகம் தெரிகிறது.