தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள் பலவற்றையும் குறித்த தன்னுடைய கருத்துகளை நம்மோடு சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி பகிர்ந்து கொள்கிறார்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் பெரும்பாலும் நிறைகள் தான் இருக்கின்றன. சாமானியர்களுக்கான சமூகநீதி பட்ஜெட் இது. விவாதங்கள் நடக்கும்போது இந்த பட்ஜெட் இன்னும் செழுமையடையும் என்று நம்புகிறேன். பெண்களுக்கான இலவச பஸ் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன. ஆனால், அது இன்று பெண்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வைத்திருக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, பெண்கள் உயர்கல்வி பெறும் சதவீதத்தை உயர்த்தியுள்ளது.
மத்திய அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக ஆட்சியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்த நிலைமையில் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகிறார். தேர்தலில் பாஜக தனியாக நிற்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன். அப்போதுதான் அவர்கள் நோட்டாவுக்குக் கீழ் என்பதை மீண்டும் உணர்வார்கள். அதிமுகவோடு கூட்டணி வைத்ததால் தான் பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.
நேற்று அரசியலுக்கு வந்து இன்று தமிழ்நாட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடுகிறார் அண்ணாமலை. தான் ஒரு கடன்காரனாக இருக்கிறேன் என்று அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய். இவருக்கு அமர்பிரசாத் ரெட்டி என்பவர் கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுவந்து கொடுக்கிறார். எனவே எங்களிடம் இவர் யோக்கியன் போல் நடிப்பது எடுபடாது. பணம் கொடுத்து தேர்தலை சந்திக்கக் கூடாது என்கிறார் அண்ணாமலை. ஆனால், வரவிருக்கும் கர்நாடக தேர்தலுக்காக பல கோடிகள் செலவு செய்ய பாஜக தயாராகி வருகிறது. காசு கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கட்சி தான் பாஜக.
ஒரு கட்சித் தலைவர் எப்படி இருக்கக்கூடாதோ அப்படி இருப்பவர் அண்ணாமலை. கோவையில் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்கள் முடிவெடுத்தபோது அதற்கு எதிராக கோர்ட்டில் பேசியவர் அண்ணாமலை. ஆனால், சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று பஜனை பாடினார். கோபத்தால் அந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் கலந்துகொள்ளவில்லை. பாஜகவில் இருக்கும் ஒரு சிலரையும் வெளியேற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார் அண்ணாமலை. அரசியலில் ஒரு அமாவாசை தான் அண்ணாமலை.
சமீபத்தில் அண்ணாமலையை அதிமுக நன்றாக வைத்து செய்துவிட்டது. அவருக்கு இப்போது உட்கட்சி உட்பட எங்குமே மரியாதை இல்லை. அதனால் அரசியலில் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் அவர் முழித்துக் கொண்டிருக்கிறார்.