Skip to main content

சென்னையை மிரட்டிய 'எம்டன்' !!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
SMS emden

 

 
"எம்டன் வந்துட்டான்...", என்று சொல்லிக்கொண்டு ஓடும் வடிவேலுவைப் ('எம் மகன்' திரைப்படத்தில்)   போல் ஒரு காலத்தில் உலகையே ஓட வைத்துக் கொண்டிருந்தது   'எஸ்.எம்.எஸ். எம்டன்' போர்க்கப்பல். முதல் உலகப்போரில் தனது எதிரி நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வர்த்தக கப்பல்களை மூழ்கடித்துள்ளது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன். எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கி இன்றுடன் நூற்றி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் உலகப்போருக்கும், இந்தியாவுக்குமுள்ள தொடர்பில், முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது இந்தத் தாக்குதல். 
 
 
 
மே26,1908ல் தன் பயணத்தைத் தொடங்கிய  'எம்டன்' போர்க்கப்பல் கப்பல் நாயகன் என போற்றப்பட்ட வான்முல்லரின் தலைமையில் செயல்பட்டு சீன கடற்கரையை நாசப்படுத்திய பின் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. செப்டம்பர் 22, 1914, இரவு 9.30மணி அளவில்  இருளில் மூழ்கியிருந்த சென்னையை கலங்கரை விளக்கம் கொண்டு அடையாளம் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசி பிரிட்டிஷ் கப்பல்களில் இருந்த  மூன்று  இலட்சத்து  அறுபதாயிரம் கெலன் எண்ணெயை நாசப்படுத்தியது.  ஒரு குண்டு ஜார்ஜ் கோட்டை சுற்றுச்சுவரை தகர்த்தது. மற்றொரு குண்டு வெடிக்காமல் கிடந்தது. அந்த குண்டு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இன்றும்  உள்ளது. கிட்டத்தட்ட 60 சதவீத பொருட்களை நாசம் செய்த இக்கப்பலைப் பிடிக்க   பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள்  பின்தொடர்ந்து சென்றும் பயனற்று போனது. பின் அங்கிருந்து அக்டோபர் 28ல் மலேசியா பினாங்கு  சென்ற இக்கப்பல் அங்கும் சேதத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நாசத்தையும் ஏற்படுத்திய எம்டன் 56 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த பொழுது  பழுதாகி, பின் மீண்டும் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.  செப்டம்பர் 4, 1939ல் பிரிட்டிஷ்  வான்வழி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டது

 
 
சென்னையில் தாக்கப்பட்ட ஒரு  இடம்
 
வருவதும், போவதும் தெரியாமல் இருப்பவனே 'எம்டன்' என்பதை  குறிக்கும் வகையிலேயே அவ்வாறு பெயரிட்டனர். பின்னாட்களில், ஏமாற்ற முடியாத, முரட்டு மனிதர்களை எம்டன் என்று அழைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அத்தகைய தாக்கத்தைத் தன் ஒற்றைத் தாக்குதலில் உண்டாக்கியது.  முதல் உலகப்போரின்போது இந்தியாவிலேயே தாக்கப்பட்ட ஒரே இடம் சென்னை. அந்தத் தாக்குதல் பெரிய  அளவில்  பயங்கரமானதாக இல்லாவிட்டாலும், எந்த நேரத்திலும் 'எம்டன்' மீண்டும் தாக்கலாம் என்ற பயத்திலேயே சென்னை மக்கள் பல நாட்களுக்கு தூக்கமில்லாமல் இருந்தனர். பலர் ஊரைவிட்டும் சென்றனர். அப்போதைய ஆங்கிலேயே கவர்னர் ஜெனரல், ஊட்டியில் இருந்து தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பின் வந்து பார்த்துவிட்டு, மீண்டும் பயத்தால்தான்   ஊட்டிக்கே சென்றுவிட்டார் என்ற பேச்சும் இருந்தது.    பின் 1914, நவம்பர் 09ம் நாள்  கொக்கோசு தீவுகளில் இடம்பெற்ற போரில் ஆத்திரேலியாவின் சிட்னி கப்பலினால் எம்டன் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

 
 
செண்பகராமன்
 shenbagaraman
 
எம்டனை பற்றி குறிக்கும்போது ஒருவரை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும், அவர்தான் செண்பகராமன். 1914ல் 'பெர்லின் கமிட்டி' என்ற பெயரில் ஜெர்மனியில் இருந்து இந்திய விடுதலைக்காகப் போராடி வந்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனி சென்ற பொழுது அவரை சந்தித்து, அவருடன் இணைந்து செயல்பட்டார்.  இவர் சென்னை மீது நடந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இவர்தான் 'ஜெய்ஹிந்த்' என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார் என்றும், பின்னர்தான் நேதாஜி அதனைப் பிரபலமாக்கினார் என்றும்  கூறப்படுகிறது. அதனால்தான் இவருக்கு 'ஜெய்ஹிந்த்' செண்பகராமன் என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இவரின் தியாகத்தைக்  குறிப்பிடும் வகையில் காந்தி மண்டபத்தில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
 
 
 

சார்ந்த செய்திகள்