
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையில் 1960இல் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு எனபல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி முடிவுகளால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா எடுத்த முடிவின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லக் கூடிய சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் எனும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாக்லிகார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு நதிநீர் சென்று வந்தது. இந்த சூழ்நிலையில், ராம்பன் அணையின் மதுகுகளை மூடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை நிறுத்தி வைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருக்கும் சிந்து நதிநீர் தற்போது இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிந்து நதிநீரை நிறுத்தி வைத்த இந்தியாவின் இந்த முடிவு சட்டவிரோத நடவடிக்கை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவீஸ் லெகாரி தெரிவித்துள்ளதாவது, “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா பொறுப்பற்ற முறையில் வைத்தது என்பது ஒரு நீர் போர் செயல். மேலும், இது ஒரு கோழைத்தனமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கை. சிந்து நதிநீரின் ஒவ்வொரு துளியும் எங்களுடையது. அதை நாங்கள் உரிமையுடனும் முழு பலத்துடனும் பாதுகாப்போம்” என்று தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவின் எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் அறிவிப்பால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.