Skip to main content

சகதியில் நிறைந்த சாலையை சரிசெய்யாத நிர்வாகம்... நூதன போராட்டத்தால் கவனம் ஈர்த்த பொதுமக்கள்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

image

 

தஞ்சையில் சேறும் சகதியுமான சாலையைக் கண்டு கொள்ளாத அரசு நிர்வாகத்தைக் கண்டித்து சாலையில் நடவு நட்டும் மீன் குஞ்சிகளைவிட்டும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

 

கடந்த ஒருவாரமாக பெய்த மழையினால் சேறும் சகதியுமாக மாறிய சாலையைக் கண்டுகொள்ளாத அரசு நிர்வாகத்தைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

 

தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடி, சின்ன அரிசிகாரத்தெரு,  சக்கரக்குளம் பகுதியில் 6 தெருக்கள் உள்ளன. ஆனால் அந்தத் தெருக்களில் தார்ச்சாலை வசதிகளே இல்லாததால், மண் சாலைகளிலேயே அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். அந்த மண்சாலைகளைத் தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசும், அரசு அதிகாரிகளும் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

 

இந்நிலையில், சில நாட்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக அச்சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி மக்கள் நடமாடவே முடியாத அவல நிலையாகியது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சகதியாக மாறிய சாலையில் நாற்று நட்டு, மீன் குஞ்சுகளை விட்டு போராட்டம் நடத்தி எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்க ஏரியாவுல  ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் எந்தவித சாலை வசதியும், குடிநீர் வசதியும், குப்பைத்தொட்டி வசதியும்கூட இல்லை. கரோனா தடுப்புக்கான கிருமிநாசினியைக் கூட இங்குவந்து தெளித்தது கிடையாது. இரண்டு மூன்று நாள் மழைக்கே சகதியாக மாறிடுச்சி, இனிவரும் மழைக்காலத்தில் என்னவாகும், அதனால் மக்கள் நடமாடமுடியாத சாலையில் நாற்று நட்டும், மீன் குஞ்சுகளை வாங்கிவந்து விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டோம்," என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்