ஆன்மிக தேடல், தனக்கான ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் முதலியவை எல்லாம் நெடுங்காலமாகவே தமிழ் மரபில் இருக்ககூடியது. சிலர் அவர்களின் வழிபாட்டு முறையை அவர்களுக்கு தகுந்த முறைகளில் அமைத்துக்கொள்கிறார்கள். தற்போது உணவு வாயிலாக கடவுளை வரையறுக்கும் நிகழ்வுகளையும் நாம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருகிறோம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுதான் நீங்கள் என்று சொல்கின்ற போக்குகள் இருக்கின்ற காலகட்டத்தில் உணவு வேறு ஆன்மீகம் வேறு என்று புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் ஐயா சிவயோகி அவர்களை இன்று நாம் சந்திக்க இருக்கிறோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
உணவுக்கு பின்பு இருக்கின்ற அரசியலை எதனால் தொடர்ந்து பேசுகிறீர்கள், அவ்வாறு பேசுவதற்கு உங்களுக்கு எது தூண்டுகோலாக இருந்தது?
எதனால் தொடர்ந்து பேசுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள், ஏனென்றால் இந்த உணவு பழக்கத்தால் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அசைவம் சாப்பிட்டால் அறிவு குறைவு என்பதை போலவும், சைவம் சாப்பிட்டால் அறிவாளி என்பதை போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோபல் பரிசு வாங்கியவர்கள் எல்லாம் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள்தான். ஏசு நாதர் மாட்டுகறி சாப்பிட்டுள்ளார். ஆனால் எப்படி உணவை வைத்து ஆற்றலை தீர்மானிக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு சிறுவயது முதலே மனதில் ஏற்பட்டு வரும். ஆனால் அவ்வாறு சாப்பிடுபவர்கள் தானே உயர் இடத்தில் இருக்கிறார்கள் என்றும் எனக்குள் எதிர் கேள்வி தோன்றும்.
உணவு சமீபகாலமாக பிரிவினை அரசியலாக இருக்கின்றது. சிக்கன், மட்டன் சாப்பிடுபவர்கள் மாட்டுகறி சாப்பிடுபவரை ஒருமாதிரியாக பார்ப்பதும், சிக்கன், மட்டன், மாட்டுக்கறி, சாப்பிடுபவர்கள் பன்றி கறி சாப்பிடுபவர்களை ஒருமாதிரி பார்ப்பதும், சிக்கன், மட்டன், மாட்டுக்கறி, பன்றிக்கறி சாப்பிடுபவர்கள் உடும்புக்கறி சாப்பிடுபவர்களை ஒருமாதிரி பார்ப்பதும் தொடர்ந்து நடைபெற்று வரும் போது உணவை வைத்து மனிதர்களை பிரித்து பார்க்கும் நடைமுறை தொடர்ந்து இருந்து கொண்டுதானே இருக்கின்றது?
அது அவரவர்கள் நினைக்கும் எண்ணத்தை பொருத்துத்தான் இருக்கின்றது. யாரும் யாரையும் சமமாக பார்ப்பதில்லை. மனிதன் மற்றவர்களை உயர்வாக பார்த்துவிடுவார்கள், இல்லையென்றால் தாழ்வாக பார்ப்பார்கள். யாரும் யாரையும் சமமாக பார்ப்பதில்லை என்பதே இங்கே எழுகின்ற உணவு அரசியலின் பிரச்சனையின் ஆதிமூலமாக இருக்கின்றது. நீயும், நானும் மனிதன் தான் என்ற எண்ணத்தில் பெரும்பாலானவர்கள் உணவை பார்ப்பதில்லை என்பது நீண்ட நெடுங்காலமாக உள்ள பிரச்சனையாக நம்மோடு தொடர்ந்து இருந்து வருகின்றது. மனிதர்களை மட்டப்படுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காரணிகளை தேடுகிறார்கள். அதற்கு உணவு சாப்பிடும் முறை ஒரு வாய்ப்பாக எடுக்கப்படுகின்றது.
நம்முடைய தமிழகத்தில் மாட்டுகறி சாப்பிடுபவர்கள் மட்டமாக பார்க்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். கேரளாவில் மாட்டுக்கறி அதிகம் சாப்பிடப்படுகின்றது. இந்திய அளவில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் ரொம்ப மோசமாக பார்க்கப்படுகிறார்கள். அதுதான் உருவத்தில் பெரியது. விலை சற்று குறைவாக இருக்கும். அதன் காரணமாக ஏழைகள் அதனை வாங்கி ஆர்வமாக சாப்பிடுவார்கள். ஆனால் வெளிநாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் வசதியானவர்களாத்தான் இருப்பார்கள். ஏழ்மையாக இருப்பவர்கள் மாட்டுக்கறியை விட வேறு எந்த கறியை எளிதில் வாங்கி சாப்பிட்டுவிட முடியும். அதனால் உணவு அரசியலை அவர்களிடம் இருந்தே தொடங்கியுள்ளார்கள்.