Skip to main content

அனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, தமிழக டெல்டா விவசாயிகளின் வயிற்றில் மீண்டும் புளியைக் கரைத்திருக்கிறது ஹைட்ரோ கார்பன் பூதம். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுப் பணிக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வேதாந்தா குழு மத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அப்போது எதிர்ப்புக் கிளம்பியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

 

hydrocarban



ஏற்கனவே 4 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது, மேலும் ஒரு ஏலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், "தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை' என்றும், "மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவேண்டிய அவசியம் இல்லை' எனவும் அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் 4 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ள பரப்பளவு 3,200 ச.கி.மீ. ஆனால், இப்போது 5-வது உரிமம் வழங்கப்படவுள்ள நிலப்பரப்பு 4,064 ச.கி.மீ. அதாவது, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 4 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவைவிட, 5-வது திட்டத்தின் பரப்பளவு மிகவும் அதிகம். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க மத்திய அரசு கச்சிதமாகத் திட்டமிட்டுள்ளது. 5-வது ஏலத்திற்கான அறிவிப்பு, ஜன. 15-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 18-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

public



5-வது திட்டம் புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் தொடக்கமும் முடிவும் புதுச்சேரியைச் சேர்ந்தவை என்றாலும், இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவை. இந்தப் பகுதிகள்தான் மீன்வளம் மிகுந்த ஆழ் கடல் பகுதிகள். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல் படுத்தப்படுவதால், அதையொட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. மேலும் இந்தத் திட்டத்தின்மூலம் எடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் வளங்களைக் கொண்டுவர விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால், அது விவசாயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்’ என அஞ்சுகிறார்கள் டெல்டா விவசாயிகள்.


ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது, மக்களின் கருத்து கேட்பது அவசியம். ஆனால், இப்போது கருத்து கேட்க வேண்டாம், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் அவசியம் இல்லை என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையால் டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. அனுமதியின்றி திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிக்கிறது என்பதை சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஏற்கனவே நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்தியிருந்தார்.

"இந்த அறிவிப்பை தொடர்ந்து நெடுவாசல் மக்கள் கொதித்துப் போயுள்ளனர். “மத்திய அரசின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்துவருகிறது. வேதாந்தா என்ற பெரிய நிறுவனத்திடம் கொடுத்தால் மக்களைக் கொன்றாவது திட்டத்தைச் செயல்படுத்துவார்கள் என்பதால்தான் கொலைகார வேதாந்தாவிடம் கொடுத்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் அனுமதியும் தேவையில்லை, மக்களின் கருத்துக்கும் மதிப்பில்லை என்று சொல்வதை வைத்துப் பார்த்தால் இது ஜனநாயக அரசா, சர்வாதிகார அரசாங்கமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கெதிராக மீண்டும் நெடுவாசல் போராட்டம்போல தமிழகம் முழுவதும் தொடங்கும்'' என்றார் தங்க. கண்ணன்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மாதவனோ, "இந்த மத்திய அரசு மக்களை வதைக்கும் அரசாக உள்ளது. மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு ஹைட்ரோ கார்பனுக்கு மட்டுமல்ல. சுற்றுச்சூழல் தடையால் நிறுத்தப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத்தான் இந்த பொதுவான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார். மத்திய அரசே முடிவெடுத்து சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துவிட்டதால் அது ஸ்டெர்லைட்டுக்கும் பொருந்தும். அதனால் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கவேண்டும் என்று வேதாந்தா நீதிமன்றம் செல்லும்.

நாடுமுழுவதும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடப்பதை திசை திருப்பிவிட ஹைட்ரோகார்பன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என்றுகூட யோசிக்க வேண்டியுள்ளது'' என்றார்.

நெடுவாசல் ஊராட்சி மன்றத் தலைவரும், போராட்டக் குழுவைச் சேர்ந்தவருமான தெட்சிணாமூர்த்தி, “இதுபற்றி நெடுவாசல் போராட்டக்குழுவின் உயர்மட்டக் குழுவை கூட்டி அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்போம். கிராம சபைகளில் தீர்மானம் கொண்டுவருவோம். எந்த சூழ்நிலையிலும் ஹைட்ரோகார்பன் திட்டம் வராமல் தடுப்போம்'' என்றார்.

நெடுவாசல் போராட்டக் களத்தில் இருந்தவரான ராம்குமார்,  தமிழகம் முழுவதும் விளைநிலங்களை அழித்து பாலைவனமாக மாற்றும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது. மக்கள் கருத்து கேட்பதில்லை என்ற முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்காக ஜனவரி 26 ஆம் தேதி கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஒவ்வொரு கிராமத்திற்கும் இளைஞர்கள் விழிப்புணர்வு பரப்புரை செய்து தீர்மானம் நிறைவேற்றச் செய்யப் போகிறோம்'' என்றார்.


-இரா.பகத்சிங், ராம்கி, செல்வகுமார்