மே 19-ம் தேதி நடக்கும் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நேற்றே (22-04-2019 ) துவங்கிவிட்டது. எதிர்க்கட்சியான திமுகவும், தினகரனின் அமமுகவும் வேட்பாளர்களை களம் இறக்கிவிட்டது. ஆனால், ஆளுங்கட்சியில் இன்னமும் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட செயலாளர்களின் தலையீடு காரணமாக வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
"மதுரை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி உதயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் ஆளுக்கு ஒரு ஆளை சிபாரிசு செய்கின்றனர். இதுதவிர ஓபன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏவுமான முத்துராமலிங்கம் ஆகியோரும் 'சீட்' கேட்டு ஒற்றைக் காலில் நிற்கிறார். இதனால், அங்கு முடிவு எடுக்க முடியவில்லை. சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமிக்கு தான் 'சீட்' என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் மறைந்த கனகராஜ் குடும்பத்திற்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருப்பதால், அங்கும் முடிவு எடுக்க முடியவில்லை.
அரவக்குறிச்சியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களம் காண்பதால், வலுவான ஆளை போட்டிக்கு நிறுத்த வேண்டும் என முடிவு செய்த கட்சித் தலைமை, முன்னாள் சென்னை மேயரும் கரூரை பூர்வீகமாக கொண்டவருமான சைதை துரைசாமியை நிற்க சொன்னது. ஆனால், செந்தில்பாலாஜியின் பிரச்சார வியூகத்திற்கு தம்மால் ஈடு கொடுக்கமுடியாது என்று அவரே விலகிக்கொண்டார். இதனால், கரூர் ஒன்றிய செயலாளரும் அமைச்சர் தங்கமணியின் உறவினருமான கமலக்கண்ணன், இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த செந்தில் நாதன், அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் தங்களுக்கு 'சீட்' கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட மாஜி எம்.எல்.ஏ மோகன், ஆவின் சேர்மன் சின்னத்துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மனு செய்துள்ளனர். ஆனால், சீட் யாருக்கு என்பதை கட்சித் தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை.
ஒட்டப்பிடாரம் தொகுதியைப் பொறுத்தவரை சின்னத்துரையும், மோகனும் இப்போது மந்திரி கடம்பூர் ராஜூ பின்னாடியே சீட்டுக்காக சுற்றி வருகின்றனர். சின்னத்துரைக்கு 'சீட்' வாங்கி கொடுத்தால், நாளைக்கு நமக்கே எதிரியாக வந்து நிற்பார். அதேபோல், மோகனுக்கு 'சீட்' வாங்கி கொடுத்தால், ஜெயித்த பிறகு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பக்கம் போய்விடுவார் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பக்கம் சேர்ந்துகொண்டு நமக்கு குடைச்சல் கொடுப்பார். ஏனெனில் மோகனும், மார்க்கண்டேயனும் தொழில் முறை கூட்டாளிகள். இந்த விஷயம் எல்லாம் மந்திரி கடம்பூர் ராஜூ கண் முன்னே வந்து, அவருக்கு உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ஜெயலலிதாவுக்கு சீட் கொடுத்தால், பெண்ணுக்கு சீட் கொடுத்தது மாதிரியும் ஆச்சு. நம்முடைய அதிகாரத்தை யாரும் பறிக்க முடியாது என கடம்பூரார் நினைக்கிறார். முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தங்கராஜின் மகள் தான் ஜெயலலிதா. பாரம்பரிய அதிமுக குடும்பம். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி தங்கராஜ். அதனால் தான் தனது மகனுக்கு அண்ணா, ராமச்சந்திரன் என்றும் மகளுக்கு ஜெயலலிதா என்றும் பெயர் வைத்தார். எனவே, ஜெயலலிதாவுக்கு சீட் கொடுக்கலாம் என சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் சகோதரர்கள் ஏற்கனவே சில மோசடிகளில் சிக்கி பெயரை கெடுத்திருக்கின்றனர் என்றும் காதைக் கடிக்கின்றனர்" அதிமுக மூத்த நிர்வாகிகள்.
ஏற்கனவே நடந்த 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தும், எதிர்க்கட்சிகளுக்கு தான் ஓட்டு அதிகம் விழுந்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 10 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நான்கு தொகுதிகளிலும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் வண்டியை திருப்புவதால், யாருக்கு 'சீட்' வழங்குவது என்பதில் ஓபிஎஸ்சும் - இபிஎஸ்சும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.