கடந்த 21ம் தேதி அந்தமான் தீவிலுள்ள சென்டினல் தீவில் கிறித்துவ மதபரப்புரையாளர் ஜான் ஆலன் அங்குள்ள பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார். இதுபற்றி டி.என். பண்டிட் கருத்து தெரிவித்துள்ளார். டி.என். பண்டிட் 2015ம் ஆண்டுவரை இந்திய பழங்குடியின அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றவர். 1966ம் ஆண்டுமுதல் 1991ம் ஆண்டுவரை சென்டினல் மக்களைச் சந்திக்க முயன்று கொண்டிருந்தவர். அதில் வெற்றியும் கண்டவர். தற்போது அவர் இந்த கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஜான் ஆலன் அவசரப்பட்டிருக்கக்கூடாது, நிதானமாக செயல்பட்டிருக்க வேண்டும். அவர், அவரை நோக்கி அம்பு வருவதை பார்த்தபோதே அவர் சுதாரித்து வெளியே வந்திருக்கவேண்டும். இந்த விஷயத்தில் அவர்களை குறைகூறமுடியாது. ஏனென்றால் அவர்கள் தனிமை விரும்பிகள், தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள். அவர்கள், ஆலன் வருவதை விரும்பாமல் அம்புகளை எய்தபோதே அவர் சுதாரித்திருக்கவேண்டும்.
மேலும் அவர், தான் எப்படி அவர்களை பார்த்து பழகினேன் என்றும் கூறியுள்ளார். அதில் அவர், நாங்கள் 8 பேர்கொண்ட குழு. நான்தான் குழுவிற்கு தலைமையேற்றேன். 1966 முதல் 91வரை அடிக்கடி அந்த தீவிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தோம். முதன்முதலில் அவர்களை கடலில்தான் சந்தித்தோம். இடுப்பளவு நீரில் நின்று அவர்களுக்கு இளநீரை கொடுத்தோம். அந்தத்தீவில் தென்னை மரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின் மெல்ல,மெல்ல அவர்களை நெருங்கிசென்று பின்தான் அந்த தீவிற்குள் நுழைந்தோம். அப்போது அந்தத்தீவில் 80 முதல் 90 பேர் இருந்தனர். கிட்டதட்ட 18 குடிசைகள் இருந்தன. அனைத்து வீட்டிலும் வில் மற்றும் அம்புகள் ஏராளமாக இருந்தன. அங்கு சென்டினல் மக்கள் மட்டுமில்லை, அதுபோல் அங்கு 5 பழங்குடியின குழுக்கள் இருக்கின்றனர். பின் அது தடைசெய்யப்பட்ட பகுதியாக மாறியது. அதன்பிறகு அதிகாரப்பூர்வமாக யாரும் செல்லவில்லை.