Skip to main content

ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும்!

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

சி.வி.சண்முகம் திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னணியில் ஓ.பி.எஸ். இருப்பதாக எடப்பாடி தரப்பு சொல்லி வருகிறது. இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைமைக்கு மட்டுமே அழைப்பு அனுப்பியது பா.ஜ.க. அதனடிப் படையில் அ.தி.மு.க.வுக்கு அழைப்பு வந்தபோது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் தன்னைத்தான் கலந்துகொள்ள எடப்பாடி வலியுறுத்துவார் என எதிர்பார்த்த ஓ.பி.எஸ்., "கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாம் கலந்துகொள்ளும்போது அ.தி.மு.க.வின் தலைமை நாம்தான் என்கிற இமேஜ் உருவாகும். மோடியிடம் தனிப்பட்ட முறையில் சில விசயங்களை மனம்விட்டு பேச வாய்ப்பும் கிடைக்கும்' எனவும் நினைத்தார். ஆனால், ஆயுர்வேத சிகிச்சையில் ஓ.பி.எஸ். இருந்ததால் சி.வி.சண்முகத்தை அனுப்பினார். ஆனால், தனக்கு எதிராக எடப்பாடி செக் வைக்கிறார் என நினைத்து, "பா.ஜ.க.வுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையாக குற்றம்சாட்டியவர்தான் சண்முகம். அவரை அனுமதிக்காதீர்கள்' என டெல்லியிடம் பேசி சண்முகத்தை திருப்பி அனுப்ப வைத்துவிட்டார் ஓ.பி.எஸ்.'' என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

 

admk



இதனையே சண்முகத்திடமும் சொல்லி வருகிறது எடப்பாடி தரப்பு. இதனால் ஓ.பி.எஸ். மீது சண்முகம் கோபத்தில் இருப்பதாக அ.தி.மு.க.வில் எதிரொலிக்கும் நிலையில், இது குறித்து ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான சீனியர் ஒருவரிடம் நாம் பேசியபோது, சண்முகம் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் டபுள் கேம் விளையாடுகிறார் எடப்பாடி. இதனை சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் ஏழாம் பொருத்தம். அடிக்கடி இப்போதெல்லாம் இருவரும் மோதிக்கொள்கிறார்கள். அதனால் இயல்பாகவே சண்முகத்திடம் ஆரோக்கியமான நட்பை வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.! அவர்களது நட்பு வலிமையடைந்தால் அது தனக்கு சிக்கல்தான் என யோசிக்கும் எடப்பாடி, அவர்களது நட்பில் விரிசலை ஏற்படுத்த நினைத்தார்.

 

admk



அதற்கேற்ப, இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு வந்தது. இப்போதுதான் டெல்லிக்கு போய் மோடி உள்பட பலரையும் சந்தித்தார் எடப்பாடி. மீண்டும் அவரே டெல்லிக்கு செல்வது ஓ.பி.எஸ்.சுக்கான முக்கியத்துவத்தை குறைப்பதாக விமர்சனம் வரும். நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி கலந்துகொண்டதையே கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "உங்கள் நிதியமைச்சர் ஓ.பி.எஸ். எங்கே? அவரை அனுப்பி வைக்கமாட்டீர்களா?' எனக் கேட்டிருக்கிறார். அந்த வகையில், மீண்டும் அவரே வருவதை பா.ஜ.க. தலைமை விரும்பாது. அதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பி.எஸ்.சைத்தான் டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழல். ஓ.பி.எஸ். தான் வர வேண்டும் என டெல்லியும் விரும்பியது.

 

admk



இதனை விரும்பாத எடப்பாடி, சண்முகத்தை தேர்ந்தெடுத்தார். அவரை அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் எடப்பாடிக்கு தெரியும். ஒருவேளை அனுமதித்துவிட்டால் "ஓ.பி.எஸ்.சை அனுப்பி வைக்க டெல்லி கேட்டது. அவரை விட நீங்கள்தான் எனக்கு முக்கியம்' என சொல்லி சண்முகத்திடமிருக்கும் தனக்கு எதிரான எதிர்ப்புணர்வை குறைக்கலாம் எனவும் திட்டமிட்டு, டபுள் கேம் ஆட நினைத்தார் எடப்பாடி. சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக சண்முகத்திடம் கொளுத்திப் போடுகிறது எடப்பாடி தரப்பு. இந்த விவகாரத்தில் ஓ.பி. எஸ்.சுக்கு சம்பந்தமே இல்லை'' என்கிறார் உறுதியாக.

 

admk



இதற்கிடையே, ஜி.எஸ்.டி.யில் மாற்றங்கள் தேவையா என்பதை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாநில நிதியமைச்சர்களிடம் விவாதிக்க நினைத்தார் நிர்மலா சீதாராமன். இந்த கூட்டத்திலும் ஓ.பி.எஸ்.சை கலந்துகொள்ள விடாமல் செய்து அவருக்கு பதிலாக அமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பிவைக்க திட்டமிட்டார் எடப்பாடி. ஆனால், டெல்லியில் நிர்மலா சீதாராமன் காட்டிய கோபம் நினைவில் இருந்ததால் ஓ.பி.எஸ்.சை எடப்பாடியால் தடுக்க முடியவில்லை. டெல்லிக்கு பறந்தார் ஓ.பி.எஸ்.


இது ஒருபுறமிருக்க, அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்தால், தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு எப்படி இருக்கும்? என உளவுத்துறையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரிப்போர்ட் கேட்டதன் அடிப்படையில் விரிவான ரிப்போர்ட் தரப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. அந்த ரிப்போர்ட்டில், "ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும். அ.தி.மு.க. கூட்டணியை உதறிவிட்டு தனித்துப் போட்டியிட்டால் எதிர்க்கட்சி வரிசைக்கு பா.ஜ.க. முன்னேறும். ரஜினி வருகிறபட்சத்தில் தேர்தல் களத்தை கணிக்க முடியாது' என குறிப்பிட்டிருக்கிறதாம் மத்திய உளவுத்துறை. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய விவாதம், அது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம், ஆலோசனைக் குழு என ஒரு பக்கம் பா.ஜ.க. தீவிரமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் 6 மாதத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வியூகங்களை டெல்லி மேற்கொண்டுள்ளது. அதனால்தான் மக்கள் பிரச்சனைக்காக அ.தி.மு.க. அரசை எந்தளவுக்கு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு அனுமதி தந்துள்ளார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா!