Skip to main content

துக்ளக் படித்தால் அறிவு வளரும் என்றால் ரஜினி முதலில் அவரது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் - சீமான் தாக்கு!

Published on 29/01/2020 | Edited on 30/01/2020


துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " அடிக்கடி ரஜினிகாந்தை வைத்து இவர்கள் போடுகிற நாடகம் இருக்கே, இவரை யாரு தூத்துக்குடி போக சொன்னார்கள். அங்கே போராட்டம் நடந்த போது நீங்க வாங்கனு எந்த மக்களாவது சொன்னார்களா? போராட்டத்துல 15 பேர் இறந்தார்கள். நான் போனால் அந்த மக்கள் சந்தோஷம் அடைவார்கள் என்றால், அவர்கள் என்ன நாடகமா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அங்கே போயிட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்று சொல்கிறார். சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும், உளவுத்துறை சொல்லவில்லை, காவல்துறை சொல்லவில்லை, உங்களுக்கு மட்டும் யார் சொன்னது. ரஜினிகாந்து இப்படி சொல்லிட்டாரேனு அதை பற்றி பேசிக்கொண்டே அந்த துப்பாக்கிச்சூட்டை மறந்துவிட்டார்கள். இப்போது குடியுரிமை சட்டம் தொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் ரஜினிகாந்திடம் வைத்த கேள்வி, இந்த சட்டத்தை ஆதரிக்கிறீர்களா, இல்லை மறுக்கிறீர்களா என்ற ஒற்றை கேள்வியைத்தான். திடீரென்று தற்போது அவர் வன்முறை எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்று கூறுகிறார்.
 

fgh




அவர் நடித்த பாதிக்கும் மேற்பட்ட படங்கள் வன்முறை படங்கள்தான். தற்போது வெளிவந்துள்ள தர்பார் படமும் வன்முறை படம்தான். ஆனால் எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே போன்றதொரு பேச்சைத்தான் பிரதமர் நேற்று பேசிய போது தெரிவிக்கிறார். ஆயுதம் எதற்கும் தீர்வல்ல என்று பேசுகிறார். அப்போது குஜராத்தில் என்ன வைக்கோல் குச்சியை வைத்திருந்தீர்களா? ஆயுதம் எதற்கும் தீர்வல்ல என்று சொன்னால் எதற்காக ராணுவத்தை வைத்துள்ளீர்கள். அதனை கலைத்துவிட வேண்டியதுதானே? சிங்கப்பூர், கனடா போல ராணுவம் இல்லாத நாடாக இருந்துவிட்டு போக வேண்டியது தானே? ஏன் அதை செய்ய மாட்டேன் என்று சொல்கிறார்கள். ரஜினி முதல்வராக துடிக்கிறார், அவர் நடித்த அத்தனை படங்களும் வன்முறை படங்கள். ஆனால் வன்முறை எதற்கும் தீர்வல்ல என்று தொடர்ந்து சொல்கிறார். இது எங்களுக்கும் தெரியும். காந்தி காலத்தில் இருந்து புத்தர், மகாவீர் காலம் வரை எங்களுக்கு கற்பித்து வந்து இருக்கிறார்கள். 

போலிஸ் கைகளில் துப்பாக்கி கொடுத்திருக்கிறீர்களே எதற்காக, கொக்கு சுடுவதற்கா? தடி கொடுத்துள்ளீர்களே அது எதற்காக, கொசு அடிப்பதற்காகவா? நீங்கள் உங்கள் நண்பர் மோடியிடம் சொல்லி ராணுவத்தை கலைத்துவிட வேண்டியது தானே? எல்லையில் சமாதான புறாக்களை பறக்க விட வேண்டியது தானே. அல்லது எல்லையில் உங்களையாவது கொண்டுவிட சொல்லவிட வேண்டியது தானே?  வன்முறை எதற்கும் தீர்வல்ல என்று ரஜினிகாந்த் சொல்விட்டார், இதைபற்றி ஒரு கூட்டம் பேசுகிறது. ஆனால் குடியுரிமை விவகாரம் பற்றி அவர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஆதரிக்கிறாரா இல்லையா என்று இதுவரை ஒருவார்த்தை சொன்னாரா என்றால் அதை பற்றி பேச்சிமூச்சி இல்லை. திடீரென்று துக்ளக் பத்திரிக்கை விழாவில் கலந்துகொண்டு முரசொலி வைத்திருந்தால் திமுக என்றும், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று பேசியிருக்கிறார். அப்படி என்றால் உங்கள் ரசிகர்களுக்கு முதலில் துக்ளக்கை கொடுங்கள். அவர்கள்தான் உங்கள படம் ஓட வேண்டும் என்று தரையில் சோறு போட்டு சாப்பிடுகிறார்கள். நாங்கள் எல்லாம் தட்டில் சாப்பிடும் போதே பல்வேறு நோய்கள் வருகிறது. அதனால் ரஜினி அவர்களுடைய ரசிகர்களுக்குத்தான துக்ளக்கை தர வேண்டும்" என்றார்.

ரஜினி பேசிய இந்த ஒருவாரத்தில் என்னென்ன விஷங்களை நாம் பேச மறந்துவிட்டோம். ஹைட்ரோ கார்பன் எடுக்க பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி தேவையில்லை, மக்களிடம் கருத்துக்கேட்க தேவையில்லை என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைப்பற்றிய பேச்சுக்கள் எல்லாம் மறக்கடிக்க படுக்கிறது என்றார்.