Skip to main content

தேர்தல் களத்தில் ஜெயிக்கப் போவது மருமகனா? மகனா? மகளா? -கரோனாவை மீறிய பரபர அரசியல்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
tamil nadu assembly



கரோனா தாக்கத்தில் நாடே அல்லோகல்லோகப்பட்டிருக்கும் சூழலிலும் தேர்தலை மையப்படுத்தி காய்களை நகர்த்தும் அரசியல், திரைமறைவில் நடந்துகொண்டுதானிருக்கின்றன. இதற்காக உருவாக்கப்படும் தேர்தல் வியூகங்களில் அரசியல் ஆலோசகர்கள் பலரும் சத்தமில்லாமல் இயங்கி கொண்டிருக்கின்றனர். 

                   
தமிழக தேர்தல் களம் கார்ப்பரேட் மயமாகிவிட்ட நிலையில் பிரதான கட்சிகள் துவங்கி, புதிதாக கட்சி துவங்கும் பிரபலங்கள் வரை தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக, சமூக வலைதளங்கள், ஊடக தளங்கள், இணையவழி தளங்கள் மூலமாக மக்களிடம் ட்ரெண்டிங் உருவாக்கும் வேகம் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. திரைமறைவில் நடக்கும் இத்தகைய போட்டிகளில் ஜெயிக்கப்போவது யார்? மருமகனா? மகனா? மகளா? என்கிற பந்தயம் தமிழக அரசியலில் சூடு பிடித்திருக்கிறது. 

கரோனா விவகாரத்தால் பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ள நிலையில் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி திமுகவினரை அரசியல் ரீதியாக எப்படி செயலாற்ற வைப்பது என்கிற வியூகத்தை வகுத்து தந்து வருகிறது பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக். அவர்களின் வழிகாட்டுதல்கள்படியே ஒவ்வொரு மூவ்களையும் திட்டமிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

  dmk



ஸ்டாலினின் மனசாட்சியாக இயங்கும் அவரது மருமகன் சபரீசனின் கண் அசைவில் பெரும்பாலான அரசியல் வியூகங்கள் மெருகேற்றப்பட்டு ஐ-பேக் வழியாக திமுகவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்கிறார்கள் திமுகவின் சீனியர்கள். அந்த வகையில், சட்டமன்ற தேர்தலை குறி வைத்து திமுகவின் வெற்றிக்கான செயல்திட்டங்களில் தீவிரமாக கவனம் செலுத்துகிறார் சபரீசன். 

ஸ்டாலினின் அத்தனை அரசியல் மூவ்களிலும் சபரீசனின் பங்களிப்பு இருக்கும் சூழலில், ஸ்டாலின் மருமகனின் வியூகங்களை வீழ்த்த அதிமுகவில் மற்றொரு அரசியல் வாரிசு களமிறங்கியுள்ளது. அதிமுகவின் சூத்திரதாரியாக உருவெடுக்க களமிறங்கியிருக்கும் அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் ! 


“முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  மக்களிடம் உயர்த்திப் பிடிக்கவும், தேர்தல் களம் உருவாகும் போது சபரீசனின் வியூகத்தை முறியடிக்கவும் மிக அமைதியாக, மிக ரகசியமாக காய்களை நகர்த்தி வருகிறார் மிதுன். தேர்தல் வியூக வகுப்பாளர்கள், அரசியல் ஆலோசகர்கள் என பிரபல நிறுவனத்தின் உதவியை திமுக பெற்றிருக்கும் நிலையில், திமுகவை போல ஒரு ஏஜென்சியை அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வமாக நியமிக்க விருப்பமில்லாமல் தேர்தல் வியூகம் வகுக்கும் கலையை கற்று வர அப்பாவின் (எடப்பாடி பழனிசாமி) ஆசியுடன்  கடந்த வருடம் டெல்லிக்கு பறந்தார் மிதுன்.    

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி.க்காக தேர்தல் கணிப்புகளை நடத்தும் சர்வே நிபுணரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பருமான டெல்லியை சேர்ந்த பிரதீப் பண்டாரியை அணுகினார் மிதுன். 

அவரிடம் பல நுணுக்கங்களை கற்றுக்கொண்ட மிதுன், பண்டாரியின் டீமை அதிமுகவுக்காக தனது மேற்பார்வையில் நியமித்துக்கொண்டார். 


                              

admk



மிதுன் தலைமையிலான அந்த டீம், அதிமுக கட்சி மற்றும் எடப்பாடி தலைமையிலான அரசு  ஆகிய இரண்டு விசயத்தில் மக்களின் மன ஓட்டங்களை கணிக்கும் பணியில் இறங்கியது. அந்த ரிப்போர்ட் தற்போது மிதுனின் கைகளில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சமூக ஊடக நிபுணர்கள், சமூக வலைதள வல்லுனர்கள் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசியல் விமர்சகர்கள் அடங்கிய ஒரு டீமை தனது தலைமையில் உருவாக்கியிருக்கிறார் மிதுன். இதில், இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரும் ஆலோசகர்களாக இருக்கின்றனர்.   

இதற்கிடையே, தேர்தல் வியூக நிபுணர் சுனில், அதிமுகவுக்காக எடப்பாடியை அணுகியிருக்கிறார். மிதுனின் தலைமையில் இவர் செயல்படக்கூடும்” என்று அதிமுகவின் மேலிட தொடர்புகளில் எதிரொலிக்கின்றன. எடப்பாடியின் வெளிநாட்டு பயணத்தில் அவர் கோட்-சூட் அணிந்தது, தமிழக விவசாய கெட்-அப், டிவிட்டரில் எடப்பாடியின் தற்போதைய அவதாரம் அனைத்தும் மிதுன் தலைமையிலான டீமின் கைங்கரியம் என்கின்றனர்.  அதிமுக ஐ.டி.விங்கில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரின் துணையுடன்  முதல்வர் எடப்பாடியின் டிவிட்டர் பக்கங்களை ஆப்பரேட் செய்யத் துவங்கி சோசியல் மீடியாக்களில் அவரது இமேஜை உயர்த்தி வருகிறது மிதுன் தலமையிலான டீம்! இதன் பின்னணியில் இதுவரை எந்த ஒரு அரசியல் ஆலோசகரும் இல்லை. கரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த பணிகளையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் டீமின் சூத்திரதாரியாக திரைமறைவில் இயங்கி வருகிறார் மிதுன்.  ஆக, தேர்தல் நேரத்தில் அதிமுகவின் வெற்றிக்காக மிதுனின் குழுவினர் தற்போதிலிருந்தே காய்களை நகர்த்தி வருகின்றனர். 
                            

திமுக - அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளின் முறையே தேர்தல் வியூகங்களை திட்டமிட மருமகன், மகன் ஆகிய இருவரும் மறைமுகமாக  இயங்கி வரும் நிலையில், தமிழக தேர்தல் அரசியலை தனது அப்பா ரஜினி எதிர்கொள்ள அவரது மகள் சௌந்தர்யா சத்தமில்லாமல் செயல்படத் துவங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அதீத ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கும் அவரது மகள் சௌந்தர்யா,  ரஜினிக்காக பிரத்யேகமான அரசியல் வியூக மற்றும் சமூக ஊடக டீம் ஒன்றை உருவாக்கி அதனை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் வியூக வல்லுனர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.      

 

rajini


                           

ரஜினிக்காக தேர்தல் வியூக வகுப்பாளர்கள், அரசியல் ஆலோசகர்கள், சமூக ஊடக நிபுணர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் பணியாற்ற ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களை செப்டம்பரில் களமிறக்கும் ஏற்பாடுகளை சௌந்தர்யா முன்னெடுப்பதாகவும் தேர்தல் ஆலோசகர்கள் மத்தியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது.              

இந்த நிலையில்தான், கரோனா தாக்கத்தையும் மீறி தேர்தல் களத்தில் ஜெயிக்கப்போவது மருமகனா? மகனா? மகளா? என்கிற விவாதங்கள் தமிழக மேல் மட்ட அரசியலில் கொடி கட்டிப்பறக்கின்றன!


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.