சேலத்தில் குண்டர் சட்டத்தில் அடிக்கடி உள்ளே சென்று வந்த பிரபல கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் ரவுடிகள் ஆளும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளது, கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் குமார் என்கிற வளர்த்தி குமார் (50). பிரபல ரவுடி. கடந்த பத்தாண்டுகளில் வெளியில் நடமாடியதைவிட சிறையில் இருந்தது அதிகம்.
![kumar5](http://image.nakkheeran.in/cdn/farfuture/PmIK8MHt459V40gJzIt4CADOlkKh43zT3aL94pTFnRo/1580562000/sites/default/files/inline-images/kumar6_0.jpg)
ரேஷன் அரிசி கடத்தல் மன்னனான வளர்த்தி குமார், ரேஷன் ஊழியர்கள், ரவுடிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு அதை முழு நேரத் தொழிலாகவே செய்து வந்தார். பணம் கொட்டுவதை அறிந்த அவருடைய கூட்டாளி மோகன், வளர்த்தி குமாருடன் நேரடியாக மோதத் தொடங்கினார். இந்த மோதலில் மோகன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வளர்த்தி குமார் கைது செய்யப்பட்டார்.
மோகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சண்முகம் என்பவரும் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கும் வளர்த்தி குமார் மீது பாய்ந்தது. அரிசி கடத்தல், ஆள் கடத்தல், கொலை, வழிப்பறி என முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாநகர காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வளர்த்தி குமார் தொடர்ந்து வெளியே இருப்பது பொதுச்சமூகத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்த காவல்துறையினர், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆரம்பித்தனர். இதுவரை ஆறு முறை குண்டர் தட்டுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். சேலம் மாநகர காவல்துறை மட்டுமின்றி, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அதேநேரம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி காவல்துறையிலும் வளர்த்தி குமாருக்கு செல்வாக்கு இருந்ததால், வெளியே இருக்கும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருக்குமேயானால், உடனடியாக குண்டர் சட்டத்தில் உள்ளே சென்று விடுவார். இதில் வியப்புக்குரிய சங்கதி என்னவெனில், எந்த ஒரு குண்டர் சட்ட வழக்கிலும் இதுவரை அவர் ஆறு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தது இல்லை.
இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம் முன்னிலையில் வளர்த்தி குமார், வியாழக்கிமை (ஜன. 30) திடீரென்று அதிமுகவில் இணைந்தார்.
இது ஒருபுறம் இருக்க, சேலத்தின் மற்றொரு பிரபல ரவுடியும், ஆள்கடத்தல் புள்ளியுமான அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜவஹர் (35) என்பவரும் ஆளுங்கட்சியில் ஐக்கியமானார். இவர் மீது கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாநகர காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவரும் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முதியவரை மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக அன்னதானப்பட்டி காவல்துறையில் ஜவஹர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அவர், திடீரென்று அதிமுகவில் இணைந்தது, காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி, அதிமுகவிலும் சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஜவஹரின் நான்காவது மனைவி நளினி என்பவர், ஜவஹர் சேலம் மாநகரில் பல இடங்களில் விபச்சார விடுதிகள் நடத்தி வருவதாகவும், குடும்பப் பெண்களை திருமணம் செய்து, அவர்களையும் பலான தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளி விடுவதாகவும் கடந்த 2014ம் ஆண்டில் சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் நேரில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளாட்சி தேர்தல் நெருக்கத்தில் ரவுடிகள் அதிமுகவில் இணைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், காவல்துறை வசம் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், ஆளுங்கட்சியில் அவர்கள் ஐக்கியமாகி வருவதாகவும் சொல்கிறார்கள் உள்ளூர் ர.ர.க்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குற்றவாளிகள், ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று அடிக்கடி முழங்குவார். ஆனால் தற்போது நிலவரம் தலைகீழாக மாறி விட்டது. அதன் விளைவுதான் அதிமுகவில் ரவுடிகள் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டு வருகிறார்கள் என்கின்றனர் ர.ர.க்கள்