சரியாக 80 மாதங்களுக்கு முன்பு ஒரு சாதனை படைக்கப்படுகின்றது. சாதனைகள் என்பதே மற்றொருவரால் உடைக்கப்படுவதற்காகப் படைக்கப்படுவதுதான் என்று சொல்லப்படுவது உண்டு என்றாலும், கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் படைத்த அந்தச் சாதனை என்பது தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்கள் எவராலும், ஏன் கிரிக்கெட் வரலாற்றிலேயே முறியடிக்க முடியாத சாதனையாகப் போகவும் வாய்ப்புள்ளது.

1989 - இல் தொடங்கி பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கடந்து 24 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்குப் பிறகு 200 டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடியதே அவரின் உச்சபட்ச கிரிக்கெட் சாதனை என்றால் கிரிக்கெட்டை அறிந்த எவராலும் மறுக்க முடியாது, ஏன்... அந்த நாளைகூட கிரிக்கெட் விரும்பிகளால் மறக்க முடியாது. இத்தனை ஆண்டுகால கிரிக்கெட்டில் எத்தனை எத்தனை சாதனைகள், ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம், சதத்ததில் சதம், அதிக ஆட்டம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் எனப் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தகாரராக அவர் இருந்தாலும் இவை அனைத்தையும் வேறு யாரும் முறியடிக்கமாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரின் 200 என்ற சாதனையை வேறு யாராலும் முறியடிக்கவே முடியாது என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள. இன்றைக்கு சச்சினுக்கு இணையாக விளையாடுபவராகச் சிலர் கோலியைக் கூறினாலும், அவர் இத்தனை வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 84 டெஸ்ட் மேட்ச்களில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இன்னும் இந்தச் சாதனையை அவர் முறியடிக்க மேலும் 116 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதற்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அதற்கான வாய்ப்பு என்பது மிகக்குறைவாகவே இருக்கிறது.

மற்ற சாதனை எல்லாம் முடியடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறதே என்று சிலர் கேள்வி எழுப்பினாலும், "அம்புரோஸ், ஹோல்டர், மெக்ராத், வார்னே, முரளிதரன், வாஸ், அக்ரம், வாக்கர் யூனிஸ், அக்தர்" என்ற உலகின் ஆகச் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சச்சின் களத்தில் நின்றார், அடித்தார் என்ற நினைவு இந்தக் கேள்வியை எழுப்புவர்களுக்கு வராது. ஏனென்றால் சச்சின் 100 டெஸ்ட் ஆட்டத்தை ஆடி முடித்த பிறகு பிறந்தவர்கள் அவர்கள். கிரிக்கெட் என்ற ஒரு வரலாறு எழுதப்படுகின்றது என்றால் அதில் ஆரம்பப் புள்ளியும், முற்றுப்புள்ளியும் அவரே!