வடிவு எஸ்.ஐ. ரகுகணேஷ்
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெயக்குமார் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி இரவில் தனது பெட்டிக்கடையின் அருகில் நின்றபோது, கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்தது பனைகுளத்தைச் சேர்ந்த ராஜ மிக்கேல் குருப் எனத் தெரியவர ராஜமிக்கேல் குரூப்பை வலை வீசித் தேடியுள்ளது எஸ்.ஐ.-க்கள் டீம்.
இதில் கடந்த மே 23 அன்று கொலைக்குச் சம்பந்தமில்லாத ராஜமிக்கேலின் கூட்டாளியான தச்சுத் தொழிலாளி துரையைத் தேடி பாப்பாங்குளம் வந்த எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்ளிட்ட டீம், துரையைக் காணாததால் அங்கிருந்த துரையின் தம்பி மகேந்திரனை சாத்தான்குளம் ஸ்டேஷனிற்கு இழுத்துச் சென்று இரண்டு நாட்களாக அடித்துத் துவைத்து அனுப்பியுள்ளார்.
மறுநாள் நள்ளிரவில் அனுப்பப்பட்ட மகேந்திரன் உடல் நலம் குன்றிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் நினைவு திரும்பாமலே ஜூன் 13 அன்று இறந்துள்ளார். ‘எஸ்.ஐ.ரகுகணேஷ் அடித்ததாலே தான் அவர் இறந்துள்ளார்'' என்கிற தகவல் பரவ, உளவுத்துறையும், நீதிபதி தரப்பும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதேவேளையில், இவர்களுக்கு முன்னதாக ஆசிர்வாதபுரம் அஞ்சல், தெற்கு பேய்க் குளத்தைச் சேர்ந்த மகேந்திரனின் தாயார் வடிவுவைச் சந்தித்தோம். வயது மூப்பின் காரணமாக காது மந்தமான நிலையிலும், வறுமையும் விரவிக் கிடக்க என்ன நடந்தது.? என அழுத்தமாக நம்மிடம் பதிவு செய்யத் தொடங்கினார்.
"சின்ன வயசிலேயே எங்களைத் தவிக்க விட்டுப் போயிட்டாரு எம் புருஷன். கஷ்டப்பட்டுத்தான் எம் புள்ளைகளை வளர்த்தேன். மூத்தவன் துரை தச்சு வேலையும், இளையவன் மகேந்திரன் கொத்தனார் வேலையும் பார்த்து வந்தான். இருந்த ஒரு பொட்ட புள்ளையான சந்தானத்தைத் தூத்துக்குடியில் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டோம். மூத்தவன் துரைக்கு என்னுடைய தங்கச்சி வீடு உள்ள பாப்பாங்குளத்தில் கல்யாணம் செய்து வைத்தோம்.
மகேந்திரன்
ஒரு நாள், ஒருத்தரை கொன்னுப்புட்டதாக ஊரே பரப்பரப்பா பேசிக்கிட்டது. கொலையைச் செஞ்சது மூத்த பையன் துரைக்கு தெரிஞ்சவன் போல! அதனால எங்க வீட்டுக்கும் துரையைத் தேடி எஸ்.ஐ. ரகுகணேஷ் போலீசோட வந்தாக. அவம் இங்கேயே இல்லையே! அவம் ரொம்ப நாளா என் தங்கச்சி ஊரில்தானே வேலை பார்க்கிறான் எனச் சொல்ல, தங்கச்சி வீட்டு அட்ரஸை வாங்கிட்டுப் போயிட்டாங்க.
துரையைத் தேடி நைட் 2 மணிக்கு பாப்பாங்குளத்திற்கு போனவங்க, அவம் அங்கே இல்லாததால் அவனுடைய தம்பி மகேந்திரனை சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனிற்கு கூட்டிட்டு வந்து, துரையைக் கேட்டு அடியோ அடின்னு அடிச்சிருக்காங்க... அவனுக்கு தெரிஞ்சால் சொல்லியிருக்க மாட்டானா..? அடுத்த நாள் இரவுல வீட்டுக்கு அனுப்பி வைச்சாங்க.
வீட்டிற்கு வந்ததுதிலருந்து வலியால் துடித்தவன், வறுமையைப் பார்த்து வலியோட பாளையங்கோட்டைக்கு வேலைக்குப் போனான். அங்க மயங்கி விழுந்ததால் மறுபடியும் வீட்டுக்கு வந்தவன், வலியும், பசியும் அவனைக் கொன்னதால இந்த முறை தூத்துக்குடியிலுள்ள அவனுடைய அக்கா வீட்டுக்குப் போனான். அங்கேயும் மயங்கி விழுந்து கோமாவுக்கு போனவன், சூன் 13ஆம் தேதி பிணமாகப் போனான். தப்பே செய்யாத ஒருத்தனை ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. இன்னொருத்தனை கொன்னுபுட்டாங்க. இதற்கெல்லாம் காரணம் அந்த எஸ்.ஐ. ரகு கணேஷ்தான்'' என்கிறார் அவர்.
"அவம் கொலைகாரனென இவனுக்கு எப்படித் தெரியும்...? அவம் இவனுக்குக் கூட்டாளி அவ்வளவே.! அந்தக் கொலைக்கும் துரைக்கும் சம்பந்தமில்லை என எப்.ஐ.ஆரிலேயே பதிவு செஞ்சிருக்காங்க.! அப்புறம் எதற்குத் துரையைத் தேடனும்..? துரையே சம்பந்தமில்லாமல் இருக்கும் போது அவனுடைய தம்பி மகேந்திரனை எதற்குத் தூக்கி வந்து லாடம் கட்டனும்..? கேட்க நாதியில்லாததால் தான்தோன்றித்தனமாக நடந்திருக்கின்றனர் சாத்தான்குளம் போலீசார். மகேந்திரன் இறப்பையும் கொலை வழக்காகப் பதிவு செய்து அதில் எஸ்.ஐ. ரகுகணேஷை சேர்க்கனும்" என்கிறார் உறவினரான காளி என்பவர்.
இவர்கள் கூற்றின் படி ஜெயக்குமார் கொலைக்கான எப்.ஐ.ஆரில் துரையின் பெயர் இல்லை. இருப்பினும், தங்களுடைய தவறு வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வேறொரு பொய் வழக்கில் புனையப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் துரை.