Skip to main content

கொடூரக் கொலையால் மதக் கலவர அபாயம்!

Published on 11/02/2019 | Edited on 04/03/2019

ட்டு நெசவுக்கு புகழ்பெற்ற தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், சௌராஷ்டிராக்கள் உட்பட பல சமூகங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். அதே ஊரின் தூண்டில் விநாயகம்பேட்டையச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பா.ம.க.வில் நகரச் செயலாளராக இருந்தவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் கேட்டரிங் தொழிலையும் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விட்டும் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

ramalingam



கடந்த 05-ஆம் தேதி காலை, ஷாமியானா பந்தல் அமைக்கும் வேலைக்காக, பாக்கினாம் தோப்பில் இருக்கும் தனது ஆட்களை அழைப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது தேனி மாவட்டம் போடி அருகே இருக்கும் முத்துதேவன்பட்டி, உருது கல்லூரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இஸ்லாம் மத பெருமைகள் குறித்து, நோட்டீஸ்களை வினியோகித்துக் கொண்டிருந்தனர். அந்த வழியாகச் சென்ற ராமலிங்கத்திடமும் ஒரு நோட்டீசைக் கொடுத்த போது, ""இந்த ஊர்ல எல்லோரும் தாயா புள்ளையா பழகிக்கிட்டிருக்கோம். எங்கிருந்தோ வந்து நீங்க ஏன் முஸ்லிம் மதத்துக்கு மாறுங்கன்னு பிரச்சாரம் பண்றீங்க. நாங்க நோம்புக் கஞ்சி குடிக்கிறோம், ஆனா நீங்களோ எங்க சாமிக்கு படைச்சதை சாப்பிடமாட்டீங்க'' என பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கே இருந்த இஸ்லாமிய இளைஞரின் தலையில் இருந்த குல்லாவை எடுத்து, தனது தலையில் வைத்துக் கொண்டார் ராமலிங்கம்.

அத்துடன், அருகில் இருந்த வீட்டிலிருந்து விபூதி, குங்குமத்தை எடுத்து வரச்சொல்லி, அந்த இஸ்லாமிய இளைஞரிடம் பூசிக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் ராமலிங்கம். நடந்த சம்பவங்கள் அத்தனையையும் அங்கே இருந்தவர்கள், செல்போனில் வீடியோ எடுத்து, வாட்ஸ்-அப்களில் வைரலாக்கிவிட்டனர். ராமலிங்கமும் பகல் முழுவதும் கடையில் இருந்துவிட்டு, இரவு 12 மணிக்கு மூத்தமகன் ஷாம்சுந்தரோடு முஸ்லிம் தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, மாருதி ஷிப்ட் காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், ராமலிங்கத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டது.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றும் ராமலிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தத் தகவல் கிடைத்ததும் தஞ்சை சரக டி.ஐ.ஜி.லோகநாதன் தலைமையில் தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களின் எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், என போலீஸ் படையே திருபுவனத்தில் குவிக்கப்பட்டது. திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவும், மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தமும் ஸ்பாட்டுக்கு வந்து, கண்டனத்தை தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

திருபுவனம் இஸ்லாம் சமூக பிரமுகர்களிடம் நாம் பேசிய போது, ""வீதிவீதியாகச் சென்று மதம் மாற்றும் வேலையை நாங்கள் செய்வதில்லை. அதே சமயம் இந்தக் கொலையை யார் செய்திருந்தாலும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்''’என்றனர்.

மத மாற்ற விவகாரமா அல்லது ராமலிங்கத்திற்கு இருந்த தொழில் போட்டியா? என விசாரிக்கும் போலீசார், முதல்கட்ட கைது நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் யாராக இருந்தாலும் முளையிலேயே கிள்ளப்பட வேண்டும் என்கிறார்கள் அச்சத்தில் உள்ள மக்கள்.

-க.செல்வகுமார்