வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து பல்வேறு கருத்துகளை மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்...
“தேர்தல் வருவதற்கு முன்பு பாஜகவுக்கு சாதகமாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவரும். தேர்தல் முடிவு வரும் வரை பல்வேறு பொய்கள் வந்துகொண்டே இருக்கும். இந்தியா முழுவதும் மோடி மீதான வெறுப்பு இருக்கிறது. அது தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. ஏழ்மை தாண்டவமாடுகிறது. 2004 முதல் 2014 வரையிலான UPA ஆட்சியில்தான் இந்தியாவில் ஏழ்மை குறைக்கப்பட்டது. அப்போது உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது இந்தியாவை அது பாதிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் இவர்கள் மத மோதலைத் தூண்டிவிடுகிறார்கள். இது இந்திய மக்களுக்கு நல்லதல்ல. 200 தொகுதிகளுக்கு கீழ் தான் பாஜகவுக்கு இந்த முறை கிடைக்கும். இதனால் பாஜக ஆடிப்போயுள்ளது.
பட்டியலின மக்களுக்கான நிதியை திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பயன்படுத்துவதாக பாஜக சொல்கிறது. ஆனால் அப்படியெல்லாம் பயன்படுத்த முடியாது. இன்னும் பணம் கொடுக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இவர்கள் இவ்வாறு புகார் கொடுக்கிறார்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. நடைப்பயணம் செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. வைகோ மக்கள் பிரச்சனைகளுக்காக நடைப்பயணம் சென்றுள்ளார். கலைஞர், தற்போதைய தமிழ்நாடு முதல்வர் எனப் பலரும் பாதயாத்திரைகள் மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைப்பயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஊழல் குறித்து அமித்ஷா பேசுகிறார். ஊழல்வாதிகள் அனைவரையும் கட்சி மாற வைத்து தங்களோடு பாஜக சேர்த்துக்கொள்கிறது. ஊழல் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? உதயநிதி ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று அமைச்சராக இருக்கிறார். ஜெய்ஷா எப்போதாவது கிரிக்கெட் விளையாடினாரா?
தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிகள் திமுக ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. இதை யாராலும் மறுக்க முடியாது. ஊழல், வாரிசு அரசியல் என்றெல்லாம் பாஜக இனி தமிழ்நாட்டில் பேசினால் எடுபடாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். அண்ணாமலையின் யாத்திரைக்கு கூட்டமே இல்லை என்கிறார்கள். மணிப்பூரில் நடந்தது போல் காட்டுமிராண்டித்தனமான சம்பவம் வெறெங்கும் நடந்ததில்லை. மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களும் இதுவும் ஒன்றல்ல. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கக் கூடியது இது. இது குறித்து உச்சநீதிமன்றமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது” என்றார்.