தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து காலியாகும் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் திமுகவில் யார் யார் அந்தப் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார்கள், யார் யாருக்கு அந்தப் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கட்சிக்குள் விவாதம் நடந்து வருகிறது. இதேபோல் அதிமுகவில் யார் யாருக்கு அந்தப் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் கடந்த 27ஆம் தேதி காலமானார். இந்த அதிர்ச்சியிலிருந்து திமுக மீளாத நிலையில், குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
இதனால் சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 98- ஆக குறைந்துள்ளது. திமுக கூட்டணியின் பலம் (திமுக 98 + காங்கிரஸ் 7 + இ.யூ.மு.லீக். 1) 108ல் இருந்து 106ஆக குறைந்திருக்கிறது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேரந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் தேவை. திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 102 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது திமுகவில் 98 எம்எல்ஏக்களே உள்ள நிலையில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை எளிதாக திமுக எம்எல்ஏக்கள் மூலமாகவே தேர்ந்தெடுக்கலாம். மேலும் ஒரு மாநிலங்களவை பதவி பெற கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து 4 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுகவை ஆதரிக்கும். மேலும் காங்கிரஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே மேலும் ஒரு மாநிலங்களவை பதவி பெற முடியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது தமிழகத்திலிருந்து மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்க திமுகவின் உதவியை காங்கிரஸ் நாடியது. அது முடியாமல் போனதால் மன்மோகன் சிங் , ராஜஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில் தற்போது நடக்கவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலிலாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைமை திமுகவை வலியுறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக வழங்குமா? அல்லது காங்கிரஸ் கட்சியின் உதவியோடு 3-வது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக கைப்பற்றுமா ? என்கிற விவாதம் அறிவாலய வட்டாரங்களில் பரபரப்பாக எதிரொலிக்கிறது.