Skip to main content

பழைய வழிக்கே திரும்பும் ரஜினி! - இது, ஆன்மிகம் அரசியல் அல்ல...

Published on 04/06/2018 | Edited on 04/06/2018

ரஜினிக்கு பிடித்த நிறம் கறுப்பு. சினிமாவுக்கு வெளியேவும் கறுப்புநிற ஆடைகளை விரும்பி அணிந்துகொள்வார். 'காலா' படத்தில் ரஜினியின் கதாபாத்திர கொள்கையோடு... 'காலா' என்றால் கறுப்பு, கரிகாலன் என்கிற பெயர்க்குறியீடு, 'கறுப்பு சேட்' என்கிற அர்த்தத்தில் 'காலா சேட்' என அழைக்கப்படுவது... என ரஜினியின் 'காலா'வில் கறுப்பின் தாக்கம் அதிகம்.

 

rajini sandal



'காலா' ஆடியோ விழாவில் ரஜினியும், பெருமளவில் திரண்டிருந்த அவரின் ரசிகர்களும் கறுப்பு ஆடையில் திரண்டு... கறுமையாக்கினர்.

’ரஜினி மக்கள் மன்ற’ நிர்வாகிகளைச் சந்திக்க வந்தபோது... வெள்ளைநிற வேஷ்டி, சட்டையில் வந்தார் ரஜினி. மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களையும், இளைஞரணிச் செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியபோதும் வெள்ளுடைதான் அணிந்திருந்தார் ரஜினி.

மே 20-ந் தேதியன்று... ரஜினி மக்கள் மன்ற மகளிரணி மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தபோது... கறுப்பு பேண்ட்டும், சந்தனநிற ஜிப்பாவும் அணிந்து சந்தித்தார். அன்றிலிருந்து... சந்தனக் கலர் ஜிப்பாவையே தொடர்ந்து அணிந்து வருகிறார் ரஜினி.

கமல் பல வண்ண ஆடைகளை அணிந்து வந்தார். ‘முரசொலி’ பொன்விழாவில் வெள்ளை பேண்ட்டும், வெள்ளைச் சட்டையுமாக வந்தார். ஆனால்... அரசியல் கட்சி தொடங்கிய பிறகு... பெரும்பாலும் கமல் கறுப்பு நிற சட்டையையே அணிகிறார். பகுத்தறிவுவாதியான கமலின் அரசியல் குறியீடாக கறுப்புச் சட்டை இருக்கும் நிலையில்... ரஜினி தனது ஆன்மிக அரசியலின் குறியீடாக சந்தன நிறத்தை தேர்ந்தெடுத்திருக்கிறாரோ..

 

 


ரஜினியின் தனிப்பட்ட ஆன்மிகச் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.

"ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தராக... சீடராக இருப்பவர் ரஜினி. தமிழகத்தில் புவனகிரியில் பிறந்த இந்து சமயத் துறவியான ராகவேந்திரரை இந்தக் காலத்தில் புகழ்பெறச் செய்ததில் முக்கியமானவர் ரஜினி.

ராகவேந்திரரை பூஜிக்கும்போது, மிக உரிமையாக அவருடன் சண்டைகூட போடுவார் ரஜினி. தனது நூறாவது படமான 'ஸ்ரீராகவேந்திரர்' வெற்றிப் படமாக அமையாதபோது... கோபத்தில் ராகவேந்திரரை கொஞ்ச நாள் பூஜிக்காமல் இருந்தார். "உங்க பெருமையச் சொல்ற படம் ஓடுறதுக்கு நீங்க உதவலேன்னா எப்படி?" என்பதுதான் ரஜினியின் கோபம். தொடர்ந்து திருவல்லிக்கேணி ராகவேந்திரர் மடத்திற்கு போவதையும் கூட கைவிட்டு... அவ்வப்போது பழைய நெருக்கம் காட்டாமலேயே வீட்டில் பூஜித்து வந்த ரஜினி... பிறகு இமயமலை போனார். பாபாவின் பக்தரானார்.

 

 


எட்டு மாதங்களுக்கு முன் ராகவேந்திரர் தன் கனவில் தோன்றியதையடுத்து ராகவேந்திரர் ஜீவசமாதியான ஆந்திராவிலுள்ள மந்த்ராலயம் சென்று வந்த ரஜினி, கடந்த பிப்ரவரியில் திருவல்லிக்கேணி மடத்திற்கும் சென்று பூஜித்தார். மீண்டும் ராகவேந்திரரை தீவிரமாக பூஜித்து வருகிறார்... ராகவேந்திரருக்கான 11 நாள் விசேஷ பூஜையும் செய்தார் ரஜினி...'' என்கிறார்கள்.

ராகவேந்திரர் வாழ்ந்த காலத்தில் அவரை கும்பகோணத்தில் ஒரு விருந்துக்கு அழைத்தவர்கள்... சரியாக கவனிக்காமல் இன்சல்ட் செய்வதுபோல் நடந்தபோது... "தான் அரைத்த சந்தனம் மூலம் தனது மகிமையை அங்கே நிரூபித்தார் ராகவேந்திரர்...'' என்பது அவரின் வாழ்க்கையில் சொல்லப்படும் சம்பவம். ராகவேந்திரரின் சந்தனம்... ரஜினியின் சந்தனக் கலர் ஜிப்பா... லாஜிக் சரியாத்தான் இருக்கோ...