Skip to main content

பாஜகவைப்போல் காங்கிரஸ் செய்திருக்க வேண்டும்... முத்தரசன்

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார். 

 

rahul-mutharasan


பாஜக கூட்டணி அகில இந்திய அளவில் 300க்கும் அதிகமான இடங்களை பெற்றுள்ளது பற்றி...
 

நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முற்றிலுமாக விதி விலக்காக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் மக்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மோடியும் வேண்டாம், எடிப்பாடியும் வேண்டாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணிக்கு நல்ல தீர்ப்பு வழங்கியதற்காக தமிழக மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
 

வட மாநிலங்களில் மோடியின் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மத ரீதியாக பல பிரச்சனைகள் உருவானது. அது எல்லோருக்கும் தெரியும். வாக்கு வங்கியை கருத்தில் கொண்டுதான் இந்த பணியை மேற்கொண்டார்கள். வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக எவ்வளவு அதிகமாக பொய் சொல்ல முடியுமோ அவ்வளவு பேசினார்கள். 
 

கடந்த காலங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம் என்று நாடு தழுவிய அளவில் இரண்டு முறை முழங்கியிருக்கிறோம். அந்த முழக்கம் இன்றைக்கு மேலும் தேவைப்படுகிறது. 
 

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதே...
 

காங்கிரஸ் கட்சி மாநில அளவில் கூட்டணியை உருவாக்குவதில் அது காட்டிய முனைப்பு போதுமானதல்ல. கூட்டணி வைப்பதில் பாஜக எப்படி ஈடுபட்டதோ, அதைப்போன்று காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த பணிகளில் காங்கிரஸ் ஈடுபடவில்லை. அதன் விளைவு இன்று பாஜக மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
 

எதிர்காலத்தில் பாஜக அரசை எதிர்த்து மிகத் தீவிரமாக போராட வேண்டிய நிலைமைகள்தான் வரும். கடந்த காலங்களில் பாஜக அரசு அப்படித்தான் நடந்து கொண்டது. இப்போது இன்னும் தொழிலாளர்களுக்கு எதிராக, சாமானியர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு வழிகளில் பாஜக அரசு ஈடுபடும். அதனை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும். 

 

இரண்டு தலைவர்கள் இல்லாத நேரத்தில் நடந்த தேர்தலில் திமுக, அதிமுகவின் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
 

அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சிக்கான தலைமை உருவாகவில்லை. அக்கட்சியில் அமைப்பாளர்கள் இரண்டு பேர். பேங்க்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்வது போல் இரண்டு பேரும் கையெழுத்துப்போட்டால்தான் அக்கட்சியில் எந்த முடிவும் எடுப்பதுபோல் உள்ளது. அக்கட்சியில் ஒரு தலைமையை உருவாக்குவதற்கு, ஒரு தலைமையை தேர்வு செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. அப்படி தேர்வு செய்வதற்குக்கூட அவர்களுக்கு நெருக்கடி இருப்பதுபோலத்தான் தெரிகிறது. 
 

திமுகவில் கலைஞர் மறைவுக்குப் பிறகு மிக சுமூகமான முறையில் அக்கட்சி பொதுக்குழுவை நடத்தியது.  ஒருமனதாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தது, அந்த கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தது,  கூட்டணிக்காக அவர் குரல் கொடுத்தது, திமுகவோடு கூட்டணிக் கட்சிகளையும் வெற்றி பெற வைத்துள்ளார். திமுகவுக்கு தலைமை தாங்க மு.க.ஸ்டாலினுக்கு தகுதி உள்ளது என்பது மட்டுமல்ல. இந்திய அளவில் அவர் மிகப்பெரிய தலைவராகியிருக்கிறார். 


 

சார்ந்த செய்திகள்