
அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தது பேசு பொருளாகி இருந்தது. இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தற்போதைய தமிழக பாஜக மாநில தலைவர் தான் காரணம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதற்கு அடுத்த நாளே டெல்லியில் முகாமிட்டனர்.
இதனால் தமிழக பாஜக தலைமை விரைவில் மாற்றப்படும் என செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பாஜக-அதிமுக கூட்டணிக்கு வசதியாக தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான இறுதி ஆலோசனை டெல்லியில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதாகவும் அன்றைய தினமே இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த தமிழக பாஜக தலைவருக்கான பட்டியலில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போதைய கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்பொழுது பாஜக சட்டமன்ற குழுத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், 2024 பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் 4 கோடி ரூபாயை ரயிலில் கொண்டு வந்தது தொடர்பான வழக்கில் விசாரணையில் இருந்து வருகிறார். அதேபோல் பாஜக தலைமை இடத்திற்கு நெருக்கமான கருப்பு முருகானந்தம் மீது சட்ட ஒழுங்கு தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.