மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்கிற பேரணியை நேற்று முன் தினம் தொடங்கினர். இதில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் ஹரியானா வழியாக டெல்லியை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டு, ஹரியானாவில் நுழையும்போது பல்லாயிரக் கணக்கான விவசாயிகளுக்கும் ஹரியானா போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அவர்களை ஹரியானாவுக்கு நுழையவிடாமல் தடுக்க அந்த மாநில அரசு முயன்றது. விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இது தொடர்பாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தடைகளை உடைத்து ஹரியானா விவசாயிகளுடன் பஞ்சாப் விவசாயிகள் கைகோர்த்து பேரணியை தொடங்கினர். இரண்டாம் நாளான நேற்று டெல்லியை நெருங்கும் சமயத்தில், அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்கவிடாமல் ஹரியானா எல்லைப்பகுதியிலேயே தடுத்து நிறுத்தி வைத்தனர். மீண்டும் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நேற்று காலை மோதல் வெடித்தது. டெல்லி எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவியது. திடீரென, விவசாயிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி வழங்கியது டெல்லி போலீஸ். டெல்லி திக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட, போலீஸார் மீண்டும் தடியடி நடத்தியும், தண்னீர் பீய்ச்சியும் விவசாயிகளை அடித்து விரட்டினர்.
அதன்பின் டெல்லி புராரி பகுதியிலுள்ள மைதானத்தில் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் ஆங்காங்கே வாகனங்களுடன் விவசாயிகள் கூடியிருந்ததால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தால் நெற்று டெல்லி போக்குவரத்து நிலைகுழைந்துவிட்டது. இதனிடையே, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கூறும்போது, “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்றார். ஏற்கனவே கடந்த 13ஆம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகள் சார்பாக ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப் படாததால்தான் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த பஞ்சாப், ஹரியானா, உ.பி, உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமான டிராக்டர், லாரிகளில் நேற்று முன் தினம் இந்த டெல்லி சலோ என்கிற முழக்கத்துடன் பேரணியை தொடங்கியுள்ளனர். தற்போது வரையில் இந்த விவசாயிகளின் போராட்டம், போலீஸாரின் தடியடியால் டெல்லியே பதற்றத்தில் இருக்கிறது. இன்று டெல்லியில் மட்டும் 3 லட்சம் விவசாயிகள் கூடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை தடுப்பதற்காக அந்தந்த மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, சில ரயில்கள் வேறு பாதையில் அனுப்பப்பட்டுள்ளன, சில ரயில்கள் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகளின் இந்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர டெல்லி போலீஸாருடன் சிஐஎஸ்எஃப் உட்பட பல்வேறு படைகளைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் விவசாயிகளிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது. ஒருசில முக்கிய விவசாய சங்க தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்தவர்களை வீட்டு காவலில் போலீஸ் வைத்துள்ளது. என்சிஆர்பியின் கணக்குப்படி மோடி இந்தியாவின் பிரதமரானபின் விவசாயிகளின் போராட்டம் மலமலவென உயர்ந்திருப்பது தெரிய வருகிறது. 2014 முதல் 2016 என்கிற இடைப்பட்ட காலத்தில் மட்டும் சட்டத்தை மீறிய விவசாயிகள் நடத்தும் போராட்டம் 628லிருந்து 4837ஆக அதிகரித்துள்ளது. சுமார் 700 சதவீதம் இரண்டு வருடங்களில் உயர்ந்திருப்பதாக தெரிகிறது. தன்னுடைய ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரச்சாரங்களில் பேசி விவசாயிகளின் நம்பிக்கைக்கு பயிரிட்ட நரேந்திர மோடி. வெற்றிபெற்ற பின்னர் விவசாயிகளுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பெரிதும் உழைத்ததாக தெரியவில்லை. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாய மாநாட்டில், காணொளி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, “2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க அரசு உறுதி எடுத்துள்ளது” என்று பேசினார். அதன்மீது நம்பிக்கை வைத்த விவசாயிகளுக்கு, பேரதிர்ச்சியாக அமைந்தது புதிய வேளாண் திருத்த சட்டம், போராட்டம் பல மடங்காக இரட்டிப்பாகியுள்ளது என்பது வருத்தமான விஷயமே. தொடக்கத்தில் சிறு சிறு ஆர்ப்பாட்டங்களாக இருந்துவந்த விவசாயிகளின் போராட்டங்கள் தற்போது மத்திய அரசுடனான நேரடி போராட்டமாக மாறி இருப்பதனால்தான் தெருக்களிலிருந்து டெல்லியை நோக்கிய பயணமாக கடந்த இரண்டாண்டில் மாறியிருக்கிறது.
(மேற்குறிப்பிட்ட 700 சதவீத விவசாய போராட்டம் அதிகரிப்பு என்பது 2014 முதல் 2016 வரை மட்டுமே. இன்னும் 2017 முதல் தற்போது வரையிலான போராட்டங்களின் எண்ணிக்கை அதிகமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.)