நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் பல வித்தியாசமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மொத்தமுள்ள 2,57,000 வாக்காளர்களில் 57,000 வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு என்கிற ஆயுதத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொகுதிக்குட்பட்ட கடம்பன்குளம் அருகே உள்ள மூலக்கரைப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க.விற்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை பா.முருகைய்யா என்பவர், "நீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது'' என மறித்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். காரியாண்டி என்கிற கிராமத்து பொதுமக்கள் உணவுத்துறை அமைச்சர் காமராஜை "ஓட்டு கேட்டு வரக்கூடாது' என திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். சிவந்திபட்டி என்கிற கிராமத்தில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியேறும் சூழல் ஏற்பட்டது. வேப்பன்குளம் என்கிற கிராமத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் துரத்தியடித்திருக்கிறார்கள்.
இப்படி அ.தி.மு.க. அமைச்சர்களும் வேட்பாளரும் தாக்கப்படுவதை கண்ட தமிழக அமைச்சர் ராஜலட்சுமி மூலமாக பேச்சுவார்த்தை ஒன்றை இடையார்குளம் என்கிற கிராமத்தில் நடத்தினர். "தேர்தல் முடிவுக்கு பிறகு உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்'' என்கிற அமைச்சரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அங்கிருந்து ராஜலட்சுமியை துரத்தியடித்தார்கள். அதன்பிறகு நாங்குநேரி தொகுதியில் உள்ள பிரதான கிராமங்களான கடம்பன்குளம், நெருப்பல், குத்துக்கல், இடையார்குளம் கிராமங்களில் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன. அரசும் தன் பங்கிற்கு அடக்குமுறையை ஆரம்பித்து கறுப்புக்கொடி ஏற்றுபவர்களை கிராமம்தோறும் கைது செய்து வருகிறது.
ஏன் இந்த போர்க்கோலம் என நாங்குநேரியை சேர்ந்த சு.பாலசுப்ரமணியம் என்பவரை கேட்டோம். "நான் பருத்திக்கோட்டை நாட்டார் சங்க நிர்வாகியாக இருக்கிறேன். எங்க மடத்தின் ஆளுமைக்கு உட்பட்ட 96 கிராமங்கள் நாங்குநேரி தொகுதியில் இருக் கிறது. திருச்செந்தூரில் 1512-ம் ஆண்டு உரு வாக்கப்பட்ட இந்த மடம் பரமக்குடி, அம்பா சமுத்திரம், கடையம் போன்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் பரவி கிடக்கிறது. நாங்குநேரி தொகுதியில் மட்டுமல்ல எங்கள் மடம் இருக்கிற 14 சட்டமன்றத் தொகுதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றியிருக்கிறோம்'' என்கிறார். தொடர்ந்து, ""நாங்கள் தேவேந்திரகுல வேளாளர் என்ற சமூக பிரிவை சேர்ந்த மக்கள். அரசு பதிவுகளில் எங்களை குரும்பர், காலடி, பன்னாடி, பள்ளர், தேவேந்திரகுலத்தான், பாதிரியர், கடையன் என்கிற பெயர்களில்தான் அழைக்கிறார்கள். இந்த ஏழு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து எங்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க அரசாணை ஒன்று வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதற்காகத்தான் எங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியிருக்கிறோம் என்றார்.
"அதற்காக நாங்குநேரி இடைத் தேர்தல் களத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்' என கேட்டதற்கு, "கடந்த எம்.பி. தேர்தலின் போது மதுரையில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட மாநாட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த நடத்தப்படும் மாநாடு என்று சொல்லி அந்த மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டார். அதன்பிறகு தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் நிறைந்திருந்த பரமக்குடி, ஒட்டப்பிடாரம், நிலகோட்டை உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தது. அந்த மாநாட்டிலும் "தேர்தல் பிரச்சாரத்திலும் எங்கள் சமுதாய தலைவர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிந்ததும் ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என உங்கள் சமூக மக்களை அழைக்கும் அரசாணை பிறப்பிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அ.தி.மு.க. அமைச்சர்களும் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்ட சாதிப் பிரிவுகளை சுட்டிக்காட்டி, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்கள்.
வேளாண்மையை குலதொழிலாக செய்து வரும் இனத்தை வேளாளர் என்கிற பெயரோடு இணைத்து தேவேந்திர குல வேளாளர் என நிச்சயம் மாற்றுவார்கள் என ஆசைவார்த்தை கூறினார்கள். அதுவரை அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்காத எங்கள் மக்கள் எம்.பி. தேர்தலிலும் நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தோம். எடப்பாடி 9 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். அதில் ஐந்து தொகுதி தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் இன்று எடப்பாடி ஆட்சி நீடிப்பதற்கே நாங்கள் தந்த வாக்குகள்தான் காரணம். ஆனால் எங்களது கோரிக்கையை வசதியாக எடப்பாடி மறந்துவிட்டார். அவருக்கு எங்கள் வலிமையை ஞாபகப்படுத்தவே இடைத் தேர்தலை நாங்கள் ஆயுதமாக பயன்படுத்துகிறோம். அதே நேரம் தி.மு.க.வும் எங்கள் கோரிக்கையை மதிக்கவில்லை. தி.மு.க.விலும் ஆதிக்க சமூக மக்கள் மு.க.ஸ்டாலினை சுற்றி தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களும் எங்களது வாக்கின் சக்தியை புரிந்து கொள்ளவே இந்த இடைத்தேர்தலை ஆயுதமாக்குகிறோம்'' என்றார்.
தேவேந்திர குல வேளாளர் மத்தியில் உள்ள இளைஞர்களிடம் வேகமாக செயல்படும் குமுளி ராஜ்குமார் "அரசாணை மட்டும் எங்களது கோரிக்கை அல்ல. பட்டியல் இனத்திலிருந்து எங்களை வெளியேற்றி இடஒதுக்கீட்டுடன் பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் இணைக்க வேண்டும். அரசாணை மாநில அரசின் சின்ன செயல், பட்டியல் இன வெளியேற்றம் மத்திய அரசின் செயல்'' என்கிறார் ஆவேசத்துடன்.