பொள்ளாச்சி நகரத்திலிருந்து அம்புராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை தேசியப் புலிகள் சரணாலயம் வழியாக டாப் ஸ்லிப் எனப்படும் மலைஉச்சியை நோக்கிச் செல்லும் சாலை ஒன்று உள்ளது. இயற்கை எழில் மிகுந்த பொள்ளாச்சியை தொட்டபடி மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் ஆழியாரை அணைத்தவாறு அமைந்துள்ள இந்தச் சாலை இயற்கை அழகுமிக்கது.
இங்கு சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு கோட்டூர் மலையடிவாரம், பெரியபோது, வாழைக் கொம்பு நாகூர், அப்பே கவுண்டன்புதூர், மச்சநாயக்கன் பாளையம், செம்மனாம்பேரி, சேத்து மடை, ஆழியார், ஆனைமலை ஆகிய ஊர்களில் தங்கும் விடுதிகள் இயங்கிவருகின்றன. பொதுவாக தங்கும் விடுதிகளை அமைக்க பதிமூன்று அரசுத் துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும். காவல்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை மலை மேம்பாட்டுக் கழகம், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றின் அனுமதி பெறாமல் தங்கும் விடுதிகளை யாரும் நடத்த முடியாது.
இந்தத் துறைககளின் அனுமதி எதுவும் பெறாமல் வனத்துறை, பொதுப்பணித்துறையின் கீழ் வரும் ஆற்றுப்படுகை ஆகியவற்றை ஆக்கிரமித்து 42 விடுதிகள் செயல்படுகின்றன என 2004-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவற்றை ஆய்வு செய்து மூடுவது உட்பட தக்க நட வடிக்கை எடுக்குமாறு நீதியரசர் வாசுகி தீர்ப்பளித்தார். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது நடத்தப்பட்ட காமவக்கிரங்களில் இந்த விடுதிகளுக்கும் பங்கு உண்டு என புகார் வலுவாக எழுந்தது. அந்தக் கொடூரங்கள் வீடியோ ஆதாரமாக வெளிவந்த பிறகு 04-05-2019 அன்று 150 கல்லூரி மாணவர்கள் சேத்துமடை பகுதியில் உள்ள, சட்டவிரோதமாக இயங்கிய விடுதியில் கோகெய்ன் என்கிற போதைப் பொருளை உபயோகித்தார்கள். அப்பொழுது நடந்த தகராறில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மாணவர் உட்பட பலரை காவல்துறை கைது செய்தது. விடுதி மூடப்பட்டது.
பொள்ளாச்சி வழக்கை விசாரித்துவரும சி.பி.ஐ.யிடம் திருநாவுக்கரசு போன்ற பொள்ளாச்சி காமக்கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர்கள் "இந்த விடுதிகளை உபயோகித்தோம்' என வாக்குமூலம் தந்திருக்கிறார்கள். இந்த விடுதிகளை சி.பி.ஐ. கண்காணித்து வந்ததோடு, பொள்ளாச்சி சம்பவங்களோடு இந்த விடுதிகளுக்குள்ள தொடர்பையும் விசாரிக்க சி.பி.ஐ. களத்தில் இறங்கத் தயாரானது. இதையறிந்த தமிழக அரசு, கோவை கலெக்டருக்கு "இந்த சட்டவிரோத விடுதிகள் மேல் சி.பி.ஐ.க்கு முன் நடவடிக்கை எடுங்கள்' என உத்தரவு வந்ததன் அடிப்படையில் கலெக்டர் ராஜமாணிக்கம், பொள்ளாச்சி வட்டார வளர்ச்சி அதிகாரியான ரவீந்திரனை களத்தில் இறக்கினார். ரவீந்திரன் இந்த சட்ட விரோத விடுதிகளுக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சமூக சேவகர் காரமடை சுப்பையாவை தொடர்புகொண்டார். இருவரும் சேர்ந்து, "மொத்தம் 42 விடுதிகள் இயங்குகின்றன' என கண்டுபிடித்தனர். ரவீந்திரன் களத்தில் இறங்கி ஆய்வு செய்த போது, முன்பு 42-ஆக இருந்த விடுதிகள் தற்போது எண்ணிக் கையில் உயர்ந்து 63-ஆக வளர்ந் துள்ளது என கண்டுபிடித்தார். அதிகாரிகளின் ஆய்வு, விடுதி உரிமையாளர்களை டென்ஷன் அடைய வைத்தது.
"சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் இந்த விடுதிகளில் புழங்குகின்றன. லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் விநியோகிக்கப்படுகிறது. எஃப்.எல்.2 என்கிற பார் லைசென்ஸ் வைத்து மதுபானம் விநியோகிக்கும் விடுதிகளின் எண்ணிக்கை மிகச்சொற்பமே. இந்த ஒரு காரணத்தை வைத்தே இந்த விடுதிகளை வி.ஏ.ஓ. லெவலிலேயே மூடிவிட முடியும். ஆனால் இன்று வரை இந்த விடுதிகள் மூடப்பட வில்லை. ஏன்' என பொள்ளாச்சியில் விசாரித்தோம். "எப்படி எங்கள் மீது கை வைக்க முடியும். நாங்கள் எடப்பாடியிடமே பேசிவிட்டு வந்துள்ளோம்'' என்கிறார்கள் விடுதி உரிமையாளர்ள்.
"விடுதிக்கு வந்த அதிகாரிகள் கேட்ட முதல் கேள்வி, "உங்கள் விடுதிகளுக்கு வருபவர்கள் பற்றிய சி.சி.டி.வி. பதிவுகள் உங்களிடம் உள்ளதா?' என்பதுதான். அப்போதுதான் அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டோம். பொள்ளாச்சி பகுதிகளில் நடத்தப்படும் விடுதிகள் அனைத்தும் மாவட்ட மாண்புமிகு ஒருவருக்கு மாதந்தோறும் கப்பம் கட்டுபவை. காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை என விடுதி நடத்த அனுமதி தரும் பதிமூன்று துறைகளும் எங்களிடம் மாமூல் வாங்குகின்றன. அதனால் மலைப்பகுதிக்கு வரும் வி.ஐ.பி.க்கள், போலீஸ் அதிகாரிகள், ஷூட்டிங்குக்கு வரும் நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் சரி... எங்கள் விடுதிகளின் கேமரா பதிவுகளுக்குள் எளிதாக சிக்கிக்கொள்வார்கள். அப்படித்தான் பொள்ளாச்சி காமக்கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளியான திருநாவுக்கரசுடன் பல பெண்களை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன், அமைச்சர் வேலுமணியின் ரத்த சொந்தங்கள் எங்களது வீடியோ பதிவுகளில் சிக்கியுள்ளனர்.
"எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரங்கள் எப்படி நடந்தன என்கிற புதிய வீடியோ பதிவுகள் வெளிவரும்' என சாம்பிளுக்கு சில காட்சிகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்களிடம் காட்டினோம். அவர்கள் வனத்துறை மானிய கோரிக்கை நடந்த நாளில் விடுதி உரிமையாளர்கள் பதினான்கு பேர் அடங்கிய டீமை எடப்பாடியிடம் பேச சொன்னார்கள். விஷயங்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமாக இருந்ததால், "விடுதிகள் மீது நடவடிக்கை வேண்டாம்' என உத்தரவிடப் பட்டது'' என்கிறார்கள். சி.சி.டி.வி. என்றாலே கோட்டை வரை நடுக்கம் ஏற்படுகிறது.
-சிவா