பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த ஏப். 28-ஆம் தேதியிலிருந்து மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரிக்க ஆரம்பித்ததும் விலகிக்கொண்டனர். ஆனாலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி ரிஸ்வந்த் என்கிற சபரிராஜன் வீட்டிற்குள் சி.பி.ஐ. திடீரென நுழைந்து ஏகப்பட்ட ஆதாரங்களை அள்ளிச் சென்றதாகவும் அதற்கடுத்ததாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிலரிடம் விசாரித்ததாகவும் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.
இதை உறுதிப்படுத்துவதற்காக பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகரில் இருக்கும் சபரிராஜன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தோம். காலிங்பெல்லை அழுத்தியதும் பெண்களும் சிறுவர்களும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தனர். "சபரிராஜன் வீடு இதானே' என நாம் கேட்டதும்... "ஆமா நீங்க யாரு?' என்றார் சபரிராஜன் அம்மா. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுதான் தாமதம், "இங்கிருந்து உடனே கிளம்புங்க, உங்ககிட்டயெல்லாம் பேச முடியாது' என பட்டாசாக வெடித்தார். நாம் அவரை போட்டோ எடுப்பதைப் பார்த்ததும் முகத்தை சேலைத் தலைப்பால் மூடியபடி, இரும்புக் கேட்டை படாரென சாத்திவிட்டு, வீட்டுக்குள் போய்விட்டார். அந்த சிறுவர்களும் நம்மை வெறித்துப் பார்த்தபடி உள்ளே போய்விட்டனர்.
அங்கிருந்து நாம் கிளம்பி, அந்த ஏரியாவில் வசிக்கும் முக்கிய பிரமுகர் ஒருவரைச் சந்தித்து சபரிராஜன் வீட்டிற்கு சி.பி.ஐ. வந்தது குறித்து விசாரித்தோம். ""இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டுக்குப் போகாம சபரிராஜன் வீட்டுக்குப் போனதுக்கு காரணம் இருக்கு. பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா இருந்த நடேசன் மற்றும் போலீஸ்காரர்கள் டீம் முதலில் தூக்கியது சபரிராஜனைத்தான். அவன் மூலமா திருநாவுக்கரசு வீட்டுக்குப் போகும்போது, அவன் அம்மாதான் அவனை தப்பிக்கவிடுகிறார்.
அதுக்கப்புறம் சதீஷ்குமார், வசந்தகுமார்னு வரிசையா பலரை கைது செய்து, அவர்களிடமிருந்து சி.டி.க்கள், போட்டோக்களையெல்லாம் கைப்பற்றிவிட்டது நடேசன் டீம். இப்ப எதுவுமே இல்லாத சபரிராஜன் வீட்டில் என்ன கிடைத்துவிடப்போகிறது?. பெரிய பில்டிங் காண்ட்ராக்டரான சபரிராஜனின் அப்பா அசோகனிடம், "உங்க பையன் எங்க வேலை பார்த்தான், எவ்வளவு சம்பளம் வாங்கினான், உங்க குடும்பத்துல எத்தனை பேரு'ன்னு கணக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க. இந்த சி.பி.ஐ. முதல்ல விசாரிக்க வேண்டியது, இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்.ஐ.க்கள் ராஜேந்திர பிரசாத், பாஸ்கர், எஸ்.எஸ். எஸ்.ஐ.ரகு ஆகிய இவர்களைத்தான்''’ என்றவர் மேலும் சில தகவல்களை சொல்லத் தொடங்கினார்.
சபரிராஜனும் திருநாவுக்கரசும்தான் பொம்பளப் புள்ளைங்களைத் தூக்குறதுல கில்லாடிகள். மொதல்லயெல்லாம் சபரிராஜன் தாடி வச்சிருக்கமாட்டான். ஒரு ஆக்சிடெண்ட்ல தாடை கிழிஞ்சு போய், தையல் போட்டிருந்தாங்க. அந்த தழும்பு தெரிஞ்சா பொண்ணுங்க அசிங்கமா நினைக்கும்னுதான் தாடி வளத்துக்கிட்டுத் திரியுறான்''’என்றார். அங்கிருந்து கிளம்பி நேராக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று, நமக்கு பழக்கமான டாக்டர்கள் சிலரிடம் பேசிய போது, ""ஆமா சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தார்கள். கடந்த அஞ்சு வருஷத்துல எத்தனை இளம் பொண்ணுங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, இல்ல வேற காரணங்களுக்காக அட்மிட் ஆனாங்களா, அவுங்களோட வீட்டு அட்ரஸ் ஆகிய விவரங்களையெல்லாம் கேட்டு வாங்கிட்டுப் போயிருக்காங்க''’என்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் குறித்த விவரங்களை சி.பி.ஐ. சேகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில்... பொள்ளாச்சி பாலியல் வில்லன்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணையில் உண்மை அம்பலத்திற்கு வரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.இந்நிலையில் நமக்கு 2 போன்கால்கள் வந்தன. "நான் மேற்கு மண்டலத்துல இருக்கற ஒரு ஸ்டேஷன்ல இருந்து பேசறேன். நான் பொள்ளாச்சியில ஏழு வருசத்துக்கு முன்னால கிழக்கு போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐயா இருக்கும் போது நடந்த சம்பவம் ஒண்ணு உங்ககிட்ட சொல்றேன்.
மகாலிங்கபுரம் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில முபாரக்குன்னு ஒருத்தரு இருக்காரு, இப்ப அவரு அ.தி.மு.க. அம்மா பேரவைச் செயலாளர். அவரு அப்ப ஒரு சி.டி. கடை வச்சிருந்தாரு. அவரு ஆபாச படங்கள் விக்கிறதா வந்த புகாரின் பேர்ல நைட்டோட நைட்டா கடைக்குள்ள ரெயிடு போகணும்னு அப்ப டி.எஸ்.பி.யா இருந்த பாலாஜி சார், மகாலிங்கபுரம் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டாரு.
5,000 சி.டி.க்களை புடிச்சோம். அந்த சி.டி.க்கள்ல சிலதை பிளேபண்ணி பார்த்தோம். அதுல பல பொண்ணுகளை பலவிதமா மெரட்டி பசங்க எடுத்த பல வீடியோக்கள் இருந்துச்சு. "இவனுங்க யாருன்னு கண்டுபிடிக்கோணும்'னு உயர் அதிகாரிகள்கிட்ட உணர்ச்சியா சொன்னேன். ஆனா அவங்க என்னைய அதற்கடுத்த நாளே டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அப்ப தவறவிட்ட அந்த கேவலமான பசங்களை எப்படியாவது -இப்பவாவது புடிக்க வையுங்க சார்'' என உணர்ச்சியாய் சொன்னார் அந்த போலீஸ் அதிகாரி.
இரண்டாவது போன்கால். "தவறாக எப்படி சொல்லலாம் பாஸ்ட்ஃபுட் கடையை பற்றி? நீங்கள் எப்படி பொள்ளாச்சி கோட்டூர்புரம் ரோட்டில் ஓம்பிரகாஷ் பெட்ரோல் பங்க்குக்கு எதிரில் உள்ள அடித்து உடைக்கப்பட்ட பாஸ்ட்ஃபுட் கடையை திரும்பவும்... அது பார் என்று சொல்லலாம்?' எனக் கேட்டது அந்தக் குரல். நாம், கடந்த 12-ந் தேதி காலை 11:20 மணிக்கு பெட்ரோல் பங்க்குக்கு முன்னால இருக்கற டாஸ்மாக் கடை (கடை எண்:1862)யை ஒட்டியுள்ள பாஸ்ட்ஃபுட் கடைக்குள் சென்று பார்த்தோம். அமோகமாக பிராந்தி, விஸ்கி, பீர் என டாஸ்மாக் கடை திறக்கும் 12 மணிக்கு முன்னதாகவே பாஸ்ட்ஃபுட் கடையில் விற்கப்படுவதை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவுசெய்து வந்தோம். அமோகமாய் செயல்படுகிறது பாஸ்ட்புட் கடை. இவற்றையும் சி.பி.ஐ. கவனிக்கும் என்கிறார்கள்.