Skip to main content

தே.மு.தி.க.வை பா.ம.க. பயன்படுத்திக்கொள்வதில்லை !

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

பன்முகத்தன்மை வாய்ந்த அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் ஆண் வேட்பாளர்களைக் காட்டிலும் 30 ஆயிரம் பெண் வேட்பாளர்கள் அதிகம் என்பது மட்டுமல்ல; 41 ஆயிரம் புது வாக்காளர்களும் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி என்று ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக் கியது இது. மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 74 ஆயிரத்து 133 பேர். வன்னியர் அதிகமுள்ள தொகுதி. அதற்கடுத்து பட்டியலினத்தவர்களும், முதலியார்களும், நாயுடுகளும் உள்ளனர். 1999-க்கு முன்புவரை எல்லாக் கட்சிகளும் முதலியார் சாதியிலிருந்தே வேட்பாளர்களை நிறுத்தின. அதற்குப் பிறகு பெரும்பாலும் வன்னியர் வேட்பாளர்களே நிறுத்தப் படுகிறார்கள். 

 

jegathratchagan



இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனை களமிறக்கியுள்ளது. கடந்த 2014 தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட வேலு 2 லட்சத்து 33 ஆயிரத்து 762 வாக்குகளையும், அ.தி.மு.க. வேட்பாளர் ஹரி 4 லட்சத்து 93 ஆயிரத்து 534 வாக்கு களையும் பெற்றனர். எனவே, சுலபமாக வெற்றி பெற்று விடலாம் எனக் கருதி இந்த தொகுதியை போராடி வாங்கியிருக்கிறது பா.ம.க. அந்தக் கட்சி சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இரண்டு கட்சிகளும் வன்னியர்களை நிறுத்தியுள்ளதால் அ.ம.மு.க. சார்பில் முதலியார் சாதியைச் சேர்ந்த பார்த்திபன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சோளிங்கர் தொகுதியின் தகுதிநீக்கம் செய்யப்பட்ட  உறுப்பினர் ஆவார்.

ஏற்கனவே இரண்டு முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் ஜெகத்ரட்சகனுக்கு இந்தத் தொகுதி முழுவதும் அத்துப்படி. எனவே, வேட்பாளராக அறிவிக் கப்பட்டதும், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை முதல் சுற்று பார்த்துவிட்டார். அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் உள்ள பா.ம.க. இளைஞர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பா.ம.க. தொண்டர்களை தி.மு.க.வுக்கு இழுக்கும் வேலையை தீவிரமாக்கி இருக்கிறார். இதையடுத்து, தினமும் 50 பேர் ஜெகத்தை சந்தித்து தி.மு.க.வில் தங்களை ஐக்கியப்படுத்தி வருகிறார்கள். இது, பா.ம.க.வின் மேல்மட்ட நிர்வாகிகளை மிரள வைத்துள்ளது. கடந்த மார்ச் 23-ந் தேதி இராணிப்பேட்டையில் ராமதாஸ் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க பா.ம.க.வினர் படாதபாடுபட்டனர். ஜெகத் தரப்பின் பொருளாதார ரீதியான சில வாக்குறுதிகளும், வேறு சில டீலிங்கும் பா.ம.க. நிர்வாகிகளை சைலண்ட் மோடுக்கு மாற்றியிருப்பதாக கூறுகிறார்கள். "6 சட்ட மன்றத் தொகுதிகளில் எந்த தொகுதி அதிக வாக்குகளை பெற்றுத் தருகிறதோ அந்த தொகுதிக்கு 1 கோடி பரிசு வழங்கப்படும்' என அறிவித்து கட்சி நிர்வாகிகளை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் ஜெகத்.

 

moorthy



"சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு நமக்கு பிரச்சனையில்லை, நம்மாளுங்க ஓட்டுப் போட்டுருவாங்க. காட்பாடி, அரக்கோணம், திருத்தணிதான் கொஞ்சம் சிக்கல். அதனால் அங்கு அதிகமா உழைக்கணும்' என பா.ம.க. நிர்வாகிகள் முடிவுசெய்து காட்பாடியில் வேட்பாளர் அறிமுகத்தின் முதல் கூட்டத்தை கூட்டி ஏ.கே.மூர்த்தியை அறிமுகம் செய்தார்கள். மார்ச் 22- ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த மூர்த்தியுடன் அ.தி.மு.க. முன்னாள் மா.செ. அப்பு, பா.ம.க. வேலு ஆகியோர் இருந்தார்கள். அ.தி.மு.க. கிழக்கு மா.செவும், அரக்கோணம் தனித்தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவி இல்லை. இது அ.தி.மு.க.வில் உள்ள தலித் நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரவியை பா.ம.க. ஒதுக்குகிறது என்றால் பா.ம.க.வை அ.தி.மு.க. ஒதுக்குகிறது. மார்ச் 22-ஆம் தேதி ஏ.கே.மூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அமைச்சர்கள் சம்பத், வீரமணி போன்றோர் நெமிலியில் இருந்தனர். "அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் வேட்புமனு தாக்கலுக்கு வரக்கூடாது என்பதால் நாங்கள் வரவில்லை' எனக்கூறி அப்புவை அனுப்பி வைத்தனர்.

இது பா.ம.க.வை கவலையடையச் செய்துள்ளது. தொகுதியில் நல்ல பெயர் எடுத்துள்ள ஏ.கே.மூர்த்தி, தனது  கட்சியினருக்கே தேர்தல் செலவுக்கு கிள்ளித்தருகிறார் என்கிறார்கள். தே.மு.தி.க.வை பெரும்பாலும் பா.ம.க. பயன்படுத்திக்கொள்வதில்லை என்பதால் அவர்களும் வேண்டா வெறுப்பாகவே உள்ளனர். 

அ.ம.மு.க. வேட்பாளரான பார்த்திபன், தொகுதியில் உள்ள 2.5 லட்சம் முதலியார் வாக்குகளை குறிவைத்து களமிறங்கியுள்ளார். தொகுதியில் அ.ம.மு.க.வுக்கான பலம் சோளிங்கர், இராணிப்பேட்டை தவிர வேறுஎங்கும் பெரியதாக இல்லை. அதிகமாக உழைக்க வியூகம் தீட்டியுள்ளார். "நம்ம சாதி ஓட்டை மாத்திப்போடாம எனக்கே போடணும்' என தங்களது சாதி அமைப்புகளிடம் பேசி வருகிறார். செலவுக்கு தினகரன் தந்தபிறகு, கட்சியினருக்குத் தரலாம் என்று இருக்கிறார்.