Skip to main content

கர்நாடக அரசியலால் உஷாரான ஓபிஎஸ், இபிஎஸ்!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை கவிழ்த்து தாமரையை மலர வைக்கும் திட்டத்தில் கர்நாடக மாநிலத்தை தற்போது குறிவைத்துள்ளது பா.ஜ.க. தலைமை. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 2018-ல் நடந்த சதேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களையும், காங்கிரஸ் 79 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப் பற்றியது. மூன்று இடங்களை சுயேட்சைகள் பிடித்தனர். பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில், தனிப்பெரும் கட்சி என்கிற வகையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதால் அதனை தடுப்பதற்காக ம.ஜ.த.வை ஆதரித்தது காங்கிரஸ் கட்சி. மேலும், சுயேட்சைகள் மூவரும் ஆதரித்தனர். இதனையடுத்து, ம.ஜ.த. தலைவர் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.

 

mjk



கூட்டணி ஆட்சியில் காங்கிரசின் வலிமை அதிகமாக இருந்தாலும், அமைச்சர் பதவிகளில் முக்கிய இலாகாக்களை எல்லாம் குமாரசாமியே வைத்துக்கொண்டார் என்கிற குற்றச்சாட்டுகளும் அதிருப்திகளும் எதிரொலித்தபடி இருந்தன. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரும் கர்நாடக காங்கிரசின் மூத்த நிர்வாகியுமான ரமேஷ்கண்ணா, ""குமாரசாமி முதலமைச்சரானதிலிருந்து கடந்த 18 மாதங்களாகவே கூட்டணிக்குள் ஏகத்துக்கும் ரகளைதான். காங்கிரஸ் அமைச்சர்களை சுதந்திரமாக செயல்படவிடவில்லை குமாரசாமி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவர் மதிப்பதுமில்லை. அவரது குடும்பத்தினரின் தலையீடு ஆட்சி அதிகாரத்தில் அதிகரித்துவிட்டது'' என்றார் அதிரடியாக. துணை முதல்வரும் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பரமேஸ்வரன், "குமாரசாமியின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. யாருடைய யோசனையையும் ஆலோசனையையும் கேட்கும் நிலையில் அவர் இல்லை'' என்றார் வெளிப்படையாக.

 

politics



இந்த நிலையில், காங்கிரஸ்-ம.ஜ.த. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமைச்சர் பதவி கேட்டு குமாரசாமிக்கு நெருக்கடி தந்தனர். எல்லாருமே சித்த ராமையாவின் ஆதரவாளர் கள். அவரது சொல்படியே இந்த நெருக்கடியை தனக்குக் கொடுப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கொண்டு போனார் குமாரசாமி. இதனால் இரு தரப்புக்கும் அடிக்கடி பஞ்சாயத்து நடந்தபடி இருந்தது. இந்த சூழலை பயன்படுத்த நினைத்த பா.ஜ.க. தலைமை, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கர்நாடக அரசியலில் ஆப்ரேசன் லோட்டஸை துவக்கியிருக்கிறது.

 

congress



இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுள் காலம் இன்னும் மூன்றரை வருடங்கள் இருக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தால் மட்டுமே பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர முடியும். அதற்கு காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணியின் பெரும்பான்மை பலத்தை குறைக்க வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஆபரேசன் லோட்டஸ்! இதில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலிருக்கும் 5 பேர், மத்திய உளவுத்துறையை சேர்ந்த 5 பேர் என 10 பேர் இருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் பொறுப்பை முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தேசிய செயலர்களில் ஒருவரான முரளிதரராவ் ஆகியோரிடம் கொடுத்துள்ளது பா.ஜ.க. தலைமை.


அந்த 10 பேரும் காங்கிரஸ்-ம.ஜ.த. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க் களை அணுகி, பா.ஜ.க.வின் திட்டத்துக்கு அவர்களை சம்மதிக்க வைக்கும் பணியில் இறக்கி விடப்பட்டனர். இதற்காக போடப்பட்ட பட்ஜெட் 1000 கோடி ரூபாய். காங்கிரஸ் தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்களிடமும், ம.ஜ.த. கட்சியில் 15 எம்.எல்.ஏ.க்களிடமும் ரகசிய பேச்சுவார்த்தையை துவக்கியது லோட்டஸ். "பதவியை ராஜினாமா செய்யணும்; இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக அவர்களையே போட்டியிட வாய்ப்பளித்து ஜெயிக்க வைக்கிறோம். ஜெயிப்பவர்களுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு. ராஜினாமாவுக்காக 60 சி தரப்படும் என்கிற பேரங்களை நடத்தினர். முதல் கட்ட முயற்சிகள் பலன் தராததால், டோக்கன் அட்வான்ஸாகவே 10 "சி' கொடுப்பதாக தயார் நிலையில் சூட்கேஸ்களை காட்டியதும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சரணடைந்தனர். குறிப்பாக, காங்கிரசிலிருந்து 13 பேரும், ம.ஜ.த.விலிருந்து 3 பேரும், அமைச்சர்களாக இருந்த 2 சுயேட்சைகள் என மொத்தம் 18 பேர் லோட்டஸின் வலையில் விழுந்தனர். அந்த வகையில், சுமார் 5 மாதங்களாக போடப்பட்ட ஆபரேஷன் கடந்த வாரம் சக்ஸஸ் ஆனது.

 

 

admk



18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால், பெரும்பான்மை பலத்தை இழந்தார் குமாரசாமி. ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலை குமாரசாமிக்கு உருவாக்கியது'' என்று ராஜினாமா பின்னணிகளை விவரிக்கிறார்கள் கர்நாடக உளவுத்துறையோடு நெருக்கமாக இருக்கும் பெங்களூரு பத்திரிகையாளர்கள். ராஜினாமா விவகாரத்தில் அரசியல் இருப்பதால் அவர்களின் கடிதங்களை ஏற்க மறுத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார். இதனை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் உச்சநீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எம்.எல்.ஏ.க்கள் தரப்பு, முதல்வர் குமாரசாமி தரப்பு, சபாநாயகர் தரப்பு என மூன்று தரப்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கடுமையான வாதங்களை முன் வைத்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு, "அதிருப்தி எம். எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகரின் சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிடாது. பேரவை அலுவல் விதிகளின்படி அவர் முடிவுகளை எடுக்கலாம். அதேசமயம், நீதிமன்றத் தின் அடுத்த உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என அதிருப்தி எம்.எல். ஏ.க்களை கட்டாயப்படுத்த முடியாது. பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாமா? வேண்டாமா? என்பதை அவர்களே முடிவெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.


நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பா.ஜ.க.வுக்கு உற்சாகத்தையும் காங்கிரஸ்- ம.ஜ.த.வுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது. அதேசமயம், மும்பை யில் பா.ஜ.க. ஆதரவில் பதுங்கி யிருக்கும் அதிருப்தி எம்.எல். ஏ.க்களில் ராமலிங்க ரெட்டியை தவிர மற்றவர்கள் அனைவரும், 18-ந்தேதி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தனர். கர்நாடகாவில் பா.ஜ.க. நடத்தும் அரசியல் விளையாட்டுகளையும், நீதிமன்றத்தின் உத்தரவு களையும் உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார் ராகுல்காந்தி. உடனே மூத்த வழக்கறிஞர்களுடன் விவாதித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தும்படி கர்நாடக பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலுக்கு உத்தரவிட்டார் ராகுல். அதற்கேற்ப, காங்கிரசின் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அசோக்சிங்வி உள்ளிட்ட சீனியர்களிடம் விவாதித்தார் வேணுகோபால். வழக்கறிஞர்கள் சொன்ன யோசனைகள் சித்தராமையாவுக்கு தெரிவிக்கப்பட்டன. இந்த ஆலோசனைகளை பற்றி விசாரித்த போது, ""பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு 18-ந் தேதி நடக்கும் நிலையில், எம்.எல்.ஏ.க்களை கலந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்க முடியாது என்கிற உச்சநீதிமன்ற உத்தரவு அதிர்ச்சியை தருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது கொறடாவின் உத்தரவில் நடக்கும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வில், கொறடா உத்தரவு பிறப்பித்தால் கட்டுப்படுத்தாது என்கிற ரீதியில் இருக்கும் நீதிமன்றத்தின் உத்தரவு கொறடாக் களின் அதிகாரத்தை செல்லாததாக்கும் முயற்சி. இதனை ஏற்க முடியாது.

கொறடாவின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா? கொறடாவின் உத்தர வில்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி நடத்துவது? அதனால் இதில் ஒரு தெளிவான வரையறையை உச்சநீதிமன்றம் சொல்லும் வரையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தேவையில்லை என காங்கிரசின் மூத்த வழக்கறிஞர்கள் இருவரும் தெரிவித்த ஆலோ சனைகளை சித்தராமையாவுக்கு தெரியப்படுத்தினர். அதனடிப்படையில், முதல்வர் குமாரசாமியிடமும் சபாநாயகர் ரமேஷ்குமாரிடமும் தனிப்பட்ட முறையில் விவாதித்தார் சித்தராமையா. அவர்களும் இதுதான் சரியான வழி என சொல்லியிருக்கிறார்கள். பரபரப்பான சூழலில் 18-ந்தேதி சட்டப்பேரவை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை வாசித்தார் குமாரசாமி. இதன் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் காரசாரமாக வாதங்களை முன்வைத்து மோதிக்கொண்டனர். சித்தராமையா பேசிய போது, "கொறடாவின் அதிகாரம் குறித்து நீதிமன்றம் தெளிவுப்படுத்தும் வரை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது. இது குறித்து வழக்கு போடலாம்' என்றார் அழுத்தமாக.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்' என குரல் கொடுத்தனர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள். இதனால் இரு தரப்புக்கும் காரசார விவாதங்கள் பேரவையில் எதிரொலிக்க, "காங்கிரசின் இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தனர் பா.ஜ.க.வினர்'' என சுட்டிக்காட்டினார்கள் கர்நாடக அரசியலை கவனித்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் விடாமல் மும்பையிலேயே பதுக்கி வைப்பதன் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்து விடும் என கணக்கிட்டிருந்தது பா.ஜ.க. தலைமை. ஆனால், பேரவையில் காங்கிரஸ் அடித்த அதிரடியால் வாக்கெடுப்பை நடத்தாமல் பார்த்துக்கொண்டார் சபாநாயகர் ரமேஷ்குமார். இதனை அறிந்த பா.ஜ.க. தலைவர்கள் அவசரம் அவசரமாக மூத்த வழக்கறிஞர் முகுல்ரோஹத்கி யிடம் ஆலோசித்தனர். அதன்படி வாக் கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிடச் சொல்லி ஆளுநர் வஜூபாயிடம் முறையிட்டனர் பா.ஜ.க. தலைவர்கள்.

ஜூலை 19-ஆம் தேதி மதியம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் வஜு பாயிடமிருந்து உத்தரவு வந்தது. எம்.எல்.ஏ.க்கள் கடத்தப் பட்டிருக்கும் நிலையில், ஆளுநரின் இந்த உத்தரவு சட்டசர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வழக்கு களையும் தகுதி நீக்க வழக்கு களையும் ஆய்வு செய்து வரும் வழக்கறிஞர் இளங்கோவ னிடம் இதுகுறித்து பேசியபோது, ""சட்டப் பேரவை நிகழ்வுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்கிற நிலை யில், கொறடாக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் நினைப்பது விரும்பத் தகாத பல சம்பவங்களுக்கு வழிவகுக்கும். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், தங்களின் விருப்பப்படி ராஜினாமா செய்வதை ஏற்க முடி யாது. ராஜினாமாவுக்கு நியாயமான காரணங்களை அவர்கள் சொல்லியாக வேண்டும். சொல்லாத பட்சத்தில் அவர்களது ராஜினாமாவை ஏற்க வேண்டிய அவசியம் சபாநாயகருக்கு கிடையாது.

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி அவர்களை ராஜினாமா செய்ய வைக்கிறது பா.ஜ.க. இதற்கு காரணம், வெற்றிபெற்ற கட்சியிலிருந்து மாற்று காட்சிக்கு தாவினால், கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோவதுடன் அடுத்து வரும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால் ராஜினாமா என்கிற குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துள்ள னர். நியாயமான காரணங்களின்றி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடியாது. இதனை உணர்ந் திருப்பதினால்தான் பா.ஜ.க. தூண்டுதலில் செயல்படும் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார் சபாநாயகர்'' என்கிறார். "ஆபரேஷன் லோட்டஸ்' என்ற 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கர்நாடக அரசை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரமாகியுள்ள நிலையில், அம்மாநில சபாநாயகரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தங்களுக்கு எந்த அளவுக்கு சாதக- பாதகமாக இருக்கும் என்பதை அ.தி.மு.க. அரசும் ஆலோசித்துள்ளது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தி.மு.க. தரப்புக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரும் தனித்தனியாக கவனம் செலுத்துகின்றனர். உஷாராக, டெல்லியிடமும் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர் என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
 

 

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்; தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Prajwal Revanna Affair; National Commission for Women Action

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Prajwal Revanna Affair; National Commission for Women Action

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் பிரஜ்வாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இந்த  வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கர்நாடக  மாநில போலிஸ் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

Prajwal Revanna Affair; National Commission for Women Action

முன்னதாக தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் அவரது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

நேற்று சூரத், இன்று இந்தூர்; தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க-வின் சூழ்ச்சி?

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
BJP's election maneuver? on Surat and Indore

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

BJP's election maneuver? on Surat and Indore

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் கடந்த 24ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனை தொடர்ந்து, சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளின் போது, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு பா.ஜ.கவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது. 

BJP's election maneuver? on Surat and Indore

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில், கடந்த 19ஆம் தேதி 6 தொகுதிகளுக்கும், கடந்த 26ஆம் தேதி மீதமுள்ள 6 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவி நடைபெற்றது. நான்காம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் இந்தூர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அக்‌ஷய் கண்டி பாம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அதே போல், பா.ஜ.க சார்பில் தற்போதைய சிட்டிங் எம்.பியான சங்கர் லால்வாணி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 25ஆம் தேதியுன் நிறைவடைந்து, கடந்த 26ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று (29-04-24) கடைசி நாள் ஆகும். 

இந்த சூழ்நிலையில், இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் கண்டி பாம் நேற்று (29-04-24) தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அக்‌ஷய் கண்டி பாம் வாபஸ் பெற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே பா.ஜ.க அலுவலகத்துக்கு சென்று பா.ஜ.கவில் இணைந்துள்ளார். ஏற்கனவே, சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் செய்து பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.