![mutharasan](http://image.nakkheeran.in/cdn/farfuture/6lmn5_BH9VvuXWxAscqrg39PVMy-OVRAiKSjwYXiVCc/1533347622/sites/default/files/inline-images/Banwarilal%20Purohit%20450.jpg)
கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,
ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் பணியை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவித்திருக்கிறார்கள். ஆளுநர் பணியை யாரும் தடுக்கவில்லை. தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறார். தமிழ்நாட்டையே அவமதிக்கிறார்.
அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து செய்யக்கூடிய பணிகளை யாரும் தடுக்கவில்லை. அவருக்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடிய பொறுப்புகளைத் தாண்டுகிறார். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கவில்லை. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் நடக்கிறது. எடப்பாடி அரசாங்கம் பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு.
தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசின் ஒப்புதல் இல்லாமல், அனுமதி இல்லாமல் மாவட்டங்களுக்கு செல்வது, ஆய்வு மேற்கொள்வது என ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்கிறார். அதைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன.
ஆளுநர் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயக கடமைகளை ஆற்ற வேண்டும். ஜனநாயகத்திற்கு புறம்பான முறையில் செயல்படக்கூடிய ஆளுநரின் நடவடிக்கையைத்தான் கண்டிக்கிறோம். அவர் அலுவலகத்தில் அமர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றலாம்.
மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு தலைமைச் செயலகம் இருக்கிறது. தலைமைச் செயலாளர் இருக்கிறார். அவர்களிடம் இருந்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு, நேர் வழியை பயன்படுத்தாமல், தவறான வழியை பின்பற்றுகிறார். அதனால்தான் எதிர்க்கிறோம். அப்படி எதிர்க்கிற காரணத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் கொடுத்தால் ஏற்க தயார். இவ்வாறு கூறினார்.