காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று சென்னை வந்த அவருக்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கருப்பு கொடி காட்டின. இதுதொடர்பாக நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கருப்பு கொடி காட்டியுள்ளார்கள். நரேந்திர மோடி ஒரு கோழை, வான் வழியை தவிர்த்து விட்டு சாலையில் பயணித்து கருப்பு கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் பிரதமருக்கு இல்லை என்று வைகோ கூறியுள்ளாரே?
ஒரு நாட்டின் பிரதமர் எந்த இடத்திற்கு வந்தாலும் அவருக்கான பாதுகாப்பு, வழிதடம் போன்றவற்றை முடிவு செய்வது மாநில அரசு. ஏனென்றால் சட்டம் ஒழுங்கு போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகையால் பிரதமர் வழிதடத்தை முடிவு செய்து கொண்டு வரவில்லை. மாநில அரசாங்கம் செய்த ஏற்பாட்டின்படி அவர் சென்று வருகிறார். கருப்பு கொடி போராட்டத்திற்கு அஞ்சி தன்னுடைய வழிதடத்தை பிரதமர் மாற்றிக்கொள்ளவில்லை. அதற்கான அவசியம் இல்லை. இதைவிட பெரிய போராட்டங்களை தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்தவர் பிரதமர் மோடி.
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பிரதமருடைய அரசாங்கம் தமிழகத்திற்கான நீதி, நியாயம் கிடைப்பதற்கு சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தாங்களெல்லாம் ஆட்சியில் இருக்கும்போது காவிரியை பற்றி கவலைப்படாத அரசியல் கட்சிகள், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் வந்தபோதும் அதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத, கவலைப்படாத அரசியல் கட்சிகள் இன்று தாங்கள் ஏதோ காவிரிக்காகவே பிறப்பெடுத்திருப்பதுபோல தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு அரசியல் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் இன்று சென்னை வருகை கூட தமிழக நலன்களுக்காக. இதுவரை தமிழகத்தில் இருக்கிற மிகமுக்கியமான கூட்டணிக் கட்சிகள், இன்று போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகள், மத்தியில் ஆளுகின்ற கட்சியில் கூட்டணி கட்சிகளாக மிகப்பெரிய அதிகாரத்தில் இருந்தபோதும் கூட சர்வதேச ராணுவ கண்காட்சியை தமிழகத்தில் அவர்கள் நடத்தியதில்லை. ஆனால் ராணுவ கண்காட்சி தமிழகத்தில் நடப்பது மட்டுமல்ல, இதுவாயிலாக தமிழக இளைஞர்களுக்கும், தமிழக தொழில் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய உத்வேகம் கிடைத்திருக்கிறது. இளைஞர்கள் நல்வழியில் செல்ல ஒரு வாய்ப்பை பிரதமர் உருவாக்கியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் நாடகத்திற்கு பிரதமரின் வருகையை பயன்படுத்த நினைக்கிறார்கள்.
தமிழகத்தின் வாழ்வுரிமையை புதைத்துவிட்டு, அனைத்து கட்சி கூட்டம் போட்டு பிரதமரை பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டதற்கு மறுத்துவிட்டு தற்போது ராணுவ கண்காட்சி என்ற பெயரில் பிரதமர் தமிழகம் வருவது நியாயமற்றது என்ற குற்றச்சாட்டு எழுகிறதே...
திரும்ப திரும்ப பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எந்த பிரச்சனைக்காக அவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறாரோ, அதே பிரச்சனைக்காக எம்பிக்கள் பார்த்தபோது நீர்வளத்துறை அமைச்சரை பாருங்கள் என்றார். தமிழக அரசாங்கத்திடமும் அதே விஷயம் சொல்லப்பட்டது. தமிழக அரசாங்கமே பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக தமிழக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அப்படியிருந்தும் திரும்ப திரும்ப பிரதமர் சந்திக்க மறுக்கிறார் என்று பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்துகிறார்கள். வேண்டுமென்றே நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர் என்கிறார்களே...
நமக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் வர வேண்டும். அதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 2007ல் மத்திய அரசு நடைமுறை சிக்கல்களை சொல்லி காலஅவகாசம் கேட்டிருக்கிறது. இதற்கு முன்பு காங்கிரஸ் அரசும் தேர்தல் வந்தபோது ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் இருப்பதால் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று. இதுவெல்லாம் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள்.
எந்த முகாந்திரமும் இல்லை என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கலாம். அந்த தீர்ப்பில் ஏதோ ஒரு குழப்பம் இருப்பதை நீதிமன்றமே ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது மத்திய அரசுக்கு. மாநிலங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை சரியான விதத்தில் அணுகி நமக்கான நீதியை பெற்றுத் தருவதற்கு மோடி தயாராக இருக்கிறார்.
காவிரி பிரச்சனையை தீர்க்காமல் அதை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன. அரசியல் தைரியம் இருந்தால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்று பெங்களுருவில் கூறியிருக்கிறாரே நடிகர் பிரகாஷ் ராஜ்...
உண்மைதான். அதே பிரகாஷ்ராஜ் பெங்களுருவில் பேட்டி கொடுப்பதைவிட்டுவிட்டு சென்னையில் வந்து பேட்டிக்கொடுக்க வேண்டும். திராவிட கட்சிகளின் அரசியலைப் பற்றி சொல்லிவிட்டு பேட்டிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.